இறந்த பின்னும் வலிக்கிறது...லீலா மகேஸ்வரி அவர்களின் சவால் கவிதை

நான் இறந்து போயிருந்தேன்.
இறந்தபின்னும் உயிர் வலி குறையவில்லை.

இது முதல் முறை அல்ல..
பல தருணங்களில்
பலரின் முன்பு
என் இறப்பு நிகழ்ந்திருக்கிறது.

"உயிரியல் இறப்பு அல்ல..
உளவியல் மரணம்"

சிநேகிதியின் மதிப்பெண் பட்டியல் ஒப்பிட்டு
பொழிந்த அப்பாவின் வார்த்தைகள்..

பெண் கேட்டு வந்த உறவினர்களின்
"குத்தல்" கேள்விகள்...

கள்ளமில்லா நண்பனின் வருகைக்கு
பாட்டி பூசிய விகார சாயம்...

சொந்தமானவர்களின் சொல்லம்புகள்...
சக பயணியின் அத்துமீறல்...
மேலதிகாரியின் காரணமில்லா கடுமை...
துரோகத்தால் மூச்சு திணறிய நட்பு...
துளி விஷம் கலந்துவிடப்பட்ட தினசரிகள்...

என நஞ்சுண்ட ஈஸ்வரியாக
என்னை மரிக்க வைத்தவைகள் ஏராளம்...
இறத்தல் அன்றாட நிகழ்வாகும் அளவிற்கு...

ஆனாலும் உயிர்பிக்கப்படுகிறேன்...
அன்னையின் அன்பு
தோழமையின் அரவணைப்பு
நட்புறவின் இனிமை...

இப்படியான சின்னஞ்சிறு
சந்தோஷ தருணங்களால்
மீண்டும் மீண்டும் உயிரோட்டம்
பெறுகிறேன்..

இறப்புகள் இயல்பாய் மாறிவிட்ட பின்னரும்
எனது இறப்பு;
ஓர் முடிவல்ல,
ஓர் தன்னம்பிக்கையின் ஆரம்பம்...

9 கருத்துரைகள்:

Unknown said...

பெண் மனசு கவிதையில் இயல்பாய் விரிகிறது. வலிகளொடு வாழ்வது அன்றாட இயல்பாகி விட்டதை
இந்த கவிதையில் படம் பிடித்துக்காட்டுகிறார்.
நீண்ட தூரம் பயணித்த கவிதை தன்னம்பிக்கை கொண்டு முடிகிறது. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

பனித்துளி சங்கர் said...

கவிதை மிகவும் அருமை . வார்த்தைகள் வலிகளை மெல்ல இதழ் வழியே இதயத்திற்குள் வீசி செல்கிறது . பகிர்வுக்கு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

Unknown said...

பிடித்த வரிகள்
//"உயிரியல் இறப்பு அல்ல..
உளவியல் மரணம்"//
//எனது இறப்பு ஓர் முடிவல்ல
ஓர் தன்னம்பிக்கையின் ஆரம்பம்...//

//நஞ்சுண்ட ஈஸ்வரியாக
என்னை மரிக்க வைத்தவைகள் ஏராளம்...
இறத்தல் அன்றாட நிகழ்வாகும் அளவிற்கு...//

Unknown said...

நன்றிகள் பனித்துளி சங்கர்.. அடிக்கடி வாங்க..

naveen (தமிழமிழ்தம்) said...

நான் இறந்து போயிருந்தேன் என்ற தலைப்பில் அமைந்த கவிதைகள் அனைத்தும் அருமை. என்னையும் எழுத தூண்டுகிறது. நீங்கள் சவால் விட்டதால் கிடைத்த பலன்: என் மனம் மகிழ்கின்றது இக்கவிதைகளை கண்டு.

எஸ்.கே said...

அருமையாக உள்ளது! தொடரட்டும்!

Unknown said...

நன்றி தமிழமிழ்தம். நீங்களும் முயற்சி செய்யுங்களேன். எங்களுக்கும் அனுப்பிவைய்யுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்..

Unknown said...

நன்றி எஸ்.கே. நிச்சயம் தொடரும் என்ற நம்பிக்கையில்..

cheena (சீனா) said...

அன்பின் லீலா மகேஸ்வரி

கவிதை அருமை - சிந்தனை அருமை -தினந்தினம் செத்துப் பிழைக்கும் நாம் - பல காரணங்களினால் மனம் இறக்கும் நிலையில் -பிழைப்பது இயல்பான செயலாகி விடுகிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்