எஸ்.ராமகிருஷ்ணனின் ஈர்ப்பியல் - வழி விகடன் தீபாவளி மலர்.


bharathbharathi

அது என்னவோ எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகளில் வரும் மனிதர்கள் ரொம்ப நாள் பழகியது போல, மனதில் பச்சக்-கென்று ஒட்டிக்கொள்கிறார்கள். இது துணையெழுத்து முதல் கொண்டு நிரூபணமாகி கொண்டே இருக்கிறது. அவரின் உபபாண்டவம், நெடுங்குருதி எல்லாம் எப்படி என்று தெரியவில்லை. விகடன் வழி வாசித்த அனைத்திலும் எஸ்.ரா.வின் கதை மாந்தர்கள் மனதை ஈர்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

வழக்கமா அவரின் எழுத்துகளை படிக்கும் போது, "இவையெல்லாம் உண்மையாகவே நடந்திருக்குமா, இல்ல வெறும் புனையப்பட்டவையா?" என்ற எண்ணம் மனதில் எழுந்து கொண்டே இருக்கும். ஆனால் முதல் முறையாக சிறுகதை-னு சொல்றாங்க ஆனா உண்மை சம்பவம் மாதிரி இருக்குதே அப்படினு ஆச்சர்யப்படவைத்தது, விகடன் தீபாவளி மலரில் வந்த (நடிகை அனுஷ்கா முகப்பு அட்டையில்) "கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது" என்ற சிறுகதை.
நிச்சயமா இனி எப்போதும் கோகிலவாணியை எனக்கு மறக்காது, அப்படி மனதில் பதியவைத்துவிட்டார் எஸ்.ரா.
bharathbharathi

கதை என்பது இது தான், மிக அழகு என்று சொல்லமுடியாத, கருத்த தேகமுடைய கோகிலவாணி, தன்னுடைய பதினைந்தாவது வயதிலேயே, காதலிப்பது பற்றிய கற்பனைகளை மனதில் புகுத்திக்கொண்டு, காதலிக்கப்படுவதற்காகக் காத்துக்கொண்டே இருக்கிறாள். நீண்ட காலம் காத்திருந்து, கற்பனைக் காதலனோடு கொஞ்சி குலாவினாலும், யாரும் அவளை காதலிப்பதாக இல்லை.

காதலிப்பது மட்டுமே தன்னுடைய வாழ்க்கையின் பற்றுக்கோல் போல நினைத்துக்கொண்டிருந்த அவளின் வாழ்க்கையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு வரும் மகேஷை, தன்னுடைய காதலனாக வரித்துக்கொள்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாய் மகேஷின் அன்பை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கும் போது, அவள் வாழ்க்கையில் துரை குறுக்கிடுகிறாள்.

தன்னை காதலிக்க வேண்டும் என கோகிலவாணியை கட்டாயப்படுத்துகிறான் துரை. அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவள் துரையை மறுத்தளிக்க, ஒரு கட்டத்தில் கடுப்பில் துரை அவள் முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுகிறான்.

பின்னர் பல பிரச்சனைகளுக்கு இடையே வழக்கு நடந்து, முடிவில் துரை தண்டிக்கப்படுகிறான். இடையில் நமக்கு இதெல்லாம் ஒத்துவராது என மகேஷும் கழண்டு கொள்ள, தனிமரமாக மாறுகிறாள் கோகிலவாணி.

குடும்பமும் தூற்றி, விலக்கி விட்டநிலையில், ஆசிட் வீசப்பட்ட முகத்தோடு, உபாசனா என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்கிறாள்.

"எதற்காகக் காதலிக்க ஆசைப்பட்டோம், காதல் என்பது இது தானா?'
"ஏன் துரை இப்படி தன் முகத்தில் ஆசிட் ஊற்றினான்?"
"தன் காதலை உலகம் ஏன் ஏற்கமறுத்தது? எதற்காக தனக்கு இவ்வளவு குரூரமான தண்டனையை வழங்கப்பட்டது? என்ற கேள்விகளோடு விடையில்லாது நீள்கிறது கோகிலவாணியின் வாழ்வு.
bharathbharathi
இந்த கதை 90களில் நடந்தது போல, எஸ்.ரா. காட்டியிருக்கிறார், ஏனெனில் காதலிக்காத பெண்ணின் முகத்தில் ஆசிட்டை ஊற்றுவது என்பது அப்போது தான் கலாச்சாரமாகவே இருந்தது என்று கூறலாம்.

தன் மீது ஆசிட் ஊற்றப்பட்டது மற்றவர்களைப் பொறுத்தவரை; சின்னஞ்சிறு நிகழ்வாக மாறிவிட்டாலும், தன்னுடைய தந்தை, அண்ணன்; ஏன் மருத்துவம் பார்க்கும் பெண் மருத்துவர், வழக்கில் ஆஜராகிய வக்கீல் என அனைவராலும் கேவலப்படுத்தப்படும் கோகிலவாணி, ஒரு நாள் தன் மீது ஆசிட் வீசிய துரையை கடற்கரையில் அவன் மனைவி மற்றும்  குழந்தையுடன் பார்க்கிறாள்.

கோகிலவாணியைப் பார்த்தவுடன், மனைவிடம் ஏதோ சொல்லியவாறு அந்த இடத்திலிருந்து கிளம்பிவிடுகிறான் துரை. கண்ணில் இருந்து துரை மறையும் வரை அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

கடற்கரையெங்கும் அப்போது கூட காதலர்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. இவர்களில் ஏதோவொரு பெண் தன்னைப்போல்
முகம் எரிந்து போகக்கூடும். அல்லது வன்கொலை செய்யப்படப்படவும் கூடலாம். வசை, அடி, உதை, எரிப்பு, கொலை இவைதான் காதலின் சின்னங்களா? காதல் வன்முறையில் தான் வேர் ஊன்றியிருக்கிறதா? என நிர்கதிக்கு உள்ளாகிய கோகிலவாணியின் எண்ணவோட்டமாய் வெளிப்படுகிறார் எஸ்.ரா.

இந்த கதையில் வருவது போல் இல்லாமல், ஒரு வேளை மகேஷ்-க்கு முன்பாக துரையை அவள் பார்த்திருந்தால் , துரையைக் காதலிக்கத் தொடங்கியிருப்பாள் என்பது தான் உண்மை. ஏனெனில் யாரோ ஒருவரை காதலித்தே ஆக வேண்டும் எனபதைத் தான் வாழ்நாள் லட்சியமாக கொண்டவளாக சிறுவயதில் இருந்தே கற்பனைக்கோட்டை கட்டியவள் தானே கோகிலவாணி?.
   
இது கோகிலவாணி என்ற ஒரு பெண்ணின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட விஷயமாக நான் கருதவில்லை. இன்றைய சூழ்நிலையில் பருவ வயதின் தொடக்கத்தில் இருக்கும் கிட்டத்தட்ட எல்லா பெண்களும் இந்த மனநிலைக்கு வந்துவிட்டதை மறுக்க முடியாது. பள்ளியில் படிக்கும் சிறுமிகள் கூட காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் தான் தங்களுக்கான சமூக அங்கீகாரமாக நினைக்கத்தொடங்கியிருப்பது உண்மை.

யாரோ ஒருவன் காதலிக்க தேவை என்று நினைப்பவர்கள், மிக மோசமான மனநிலையில் இருப்பவர்களிடம் கிடைத்தால் என்ன ஆவார்கள்; யோசிக்கவே வருத்தமாக இருக்கிறது.

காதலிப்பதற்காகவே கல்லூரியில் படிக்கிறார்கள் எனபது போன்ற தோற்றத்தை முன்பு ஏற்ப்படுத்தி வந்த சினிமா போன்ற மீடியா, இப்போதெல்லாம் பள்ளியில் காதல் வருவது போல காட்டுவது தான், இளம் பிஞ்சுகளிடம் காதலிப்பது மட்டுமே, பள்ளியில் படிப்பதற்கு அர்த்தம் என்ற எண்ணத்தை விதைத்து விடுகின்றன.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏற்படும் காதல் எனபது தொற்றுநோய் போல, ஒருவர் அதில் பாதிக்கப்பட்டால், கூட இருக்கும் அனைவருக்கும் அது பரவி விடும் அல்லது பரப்பப்படும்.
bharathbharathi
இந்த கதையில் கூட, காதல் பற்றிய கிளர்ச்சிகளை, கோகிலவாணி தன்னுடைய தோழி இந்திராவிடம் பகிர்ந்து கொள்ள, அவளும் காதலுக்கு தயாராகி, பக்கத்து வீட்டில் இருந்த முரளி என்பனிடம் உதட்டைக் கடிக்க கொடுத்துவிடுகிறார். அவன் கணக்கில் காதல் என்பது இப்படியாக இருந்திருக்கிறது.

காதல் என்பது சரியா தவறா என்பது யாரால், யார் காதலிக்கப்படுகிறார்கள்; வாழ்வின் எந்த கட்டத்தில் காதலிக்கப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது.

காதல் எண்ணம் வந்ததே என்பது வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிடுமா என கேட்பவர்களுக்கு இந்த சிறுகதையை படிக்கக்கொடுங்கள். குறைந்தபட்சம் எஸ்.ரா.வின் வார்த்தை விளையாட்டாவது அவர்களைக் கட்டிப்போடும். வாழ்க்கையின் விசித்திரங்கள் எனபது ஏராளம் என்பதும், பால் திரிந்து விடுவது போல அடுத்தடுத்த கணத்தில் வாழ்க்கை சட்டென்று மாறிவிடும் என்பதும் புலப்படும்.


bharathbharathi

எஸ். ராமகிருஷ்ணன் - ஒரு அறிமுகம்.

எஸ். ராமகிருஷ்ணன், விருதுநகர் மாவட்டம் மல்லாங் கிணறு கிராமத்தில் 1966இல் பிறந்தார். முழுநேர எழுத்தாளரான இவர் தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறுதைத் தொகுப்புகள்: எஸ். ராமகிருஷ்ணன் சிறுகதைகள், நடந்து செல்லும் நீரூற்று. நாவல்: உப பாண்டவம், நெடுங்குருதி, உறுபசி. கட்டுரைத் தொகுப்புகள்: விழித்திருப்பவனின் இரவு, இலைகளை வியக்கும் மரம், என்றார் போர்ஹே, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி. திரைப்பட நூல்கள்: பதேர் பாஞ்சாலி-நிதர்சனத்தின் பதிவுகள், அயல் சினிமா, உலக சினிமா. குழந்தைகள் நூல்கள்: கால் முளைத்த கதைகள், ஏழு தலை நகரம், கிறுகிறு வானம்.நாடகத் தொகுப்பு: அரவான். நேர்காணல் தொகுப்பு: எப்போதுமிருக்கும் கதை.

எஸ்.ரா.வின் இணையதளம் http://www.sramakrishnan.com/ 

13 கருத்துரைகள்:

ராஜி said...

எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன். அவரை பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

அருமையானதொரு எழுத்துக்குச் சொந்தக்காரரைப்பற்றியும் அவரது எழுத்தையும் பற்றிப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

சென்னை பித்தன் said...

நல்ல சிறுகதை அறிமுகம்.நன்றி பாரத்

தினேஷ்குமார் said...

காதலில் சிக்கி கபடியாட்டம் ஆடும் இளசுகளைக் காக்க வேண்டும்.... காதல் தவறல்ல காதலிக்கும் பருவம் தான் தவறு முதலில் தன்னை வாழ்வின் பாதையில் நிலைநிறுத்தி இருபுறமும் சிந்திக்கும் எண்ணமும் வழக்கமான வாழ்வின் போராட்டங்களை சந்திக்கும் சக்தியும் உன்னில் உள்ளதெனும் போது காதலைத் துவக்கு ....

rajamelaiyur said...

பகிர்வுக்கு நன்றி .. திரு ராமகிருஷ்ணனின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்

குறையொன்றுமில்லை. said...

அருமையானதொரு எழுத்துக்குச் சொந்தக்காரரைப்பற்றியும் அவரது எழுத்தையும் பற்றிப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.. எனக்குப்பிடித்தஎழுத்தாளர்களில் எஸ் ரா வும் ஒருவர்.

ஹேமா said...

நல்லதொரு மனிதரும்கூட என்றே நினைக்கிறேன்.அப்படியாவர்களால்தான் மனிதநேயத்தோடு எழுத முடிகிறது !

Anonymous said...

எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் எஸ்.ரா...Downto earth man too..பகிர்ந்தமைக்கு நன்றி பாரத்...

Peer Mohamed said...

//அது என்னவோ எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகளில் வரும் மனிதர்கள் ரொம்ப நாள் பழகியது போல, மனதில் பச்சக்-கென்று ஒட்டிக்கொள்கிறார்கள்//

Very True. I have felt the same from thunaiezhuthu days

MANO நாஞ்சில் மனோ said...

நான் பயணங்கள் பற்றி எழுதியதற்கு இவரின் எழுத்துக்களே காரணம்னு கண்டிப்பாக சொல்லமுடியும்...!!!!

சித்திரவீதிக்காரன் said...

விகடனில் வந்த கதைமாந்தர்கள் மட்டுமல்ல, எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல்களில் வரும் பாத்திரங்களும் மனதிற்கு நெருக்கமானவர்கள்தான். உபபாண்டவத்தில் துரியோதனன், உறுபசியில் சம்பத், நெடுங்குருதியில் வரும் நாகு, யாமத்தில் வரும் வகிதா, துயிலில் வரும் அழகர் என இன்னும் பல கதாமாந்தர்கள் மறக்க முடியாதவர்களே. ஓவியர் இளையராஜாவின் தள அறிமுகம் தங்கள் தளம் மூலம் கிடைத்தது. பகிர்விற்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

காதல் என்பது சரியா தவறா என்பது யாரால், யார் காதலிக்கப்படுகிறார்கள்; வாழ்வின் எந்த கட்டத்தில் காதலிக்கப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது.


நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

Unknown said...

எஸ்.ஆர். எழுத்துகளில் ஒரு இயல்பான நம் காதுகளில் யாரோ கிசுகிசுப்பாய் கதை சொல்லுகிற பாணி இருக்கும்....பகிர்வுக்கு நன்றி!

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்