உலக இலக்கியங்கள் தோற்றோட வேண்டும்..


bharath...bharathi..
இப்போதைய பயணங்களில் எல்லாம்; மீதி கட்டப்படாமல், பாதியில் நிற்கும் கட்டிடங்கள் அதிகம் பார்க்க நேரிடுகிறது. உள்ளுக்குள் இனம் புரியாத அழுத்தம் மனசுக்குள் குடிகொள்கிறது.

வண்ணத்துப்பூச்சியாக உருமாற்றம் கொள்ள இயலாது, பாதியில் மரித்து போகும் கூட்டுப்புழுக்கள் போல, வீடு என்னும் அந்தஸ்து பெறாமல் மரித்துப்போகும் கட்டிடங்கள் ஏராளம்.

பணம், ஆட்கள் தகராறு, வடிவமைப்பு குழப்பம்(வாஸ்து),
இன்னும் ஏதோ வெளியே சொல்ல முடியாத காரணங்களால், கட்டிடங்கள், வீடாக பரிமாண மாற்றம் கொள்ள இயலாமல் நிற்கின்றன.

தயங்கி, தயங்கி நின்றதால், சொல்லாத காதலாக நீர்த்துப்போன, தோற்றுப் போன காதல்காரர்கள் இங்கே ஏராளம்.

காதல் தடுக்கி விழுந்தவர்களை விட, கட்டிடம் தடுக்கி விழுந்தவர்கள் எண்ணிக்கை இந்த தேசத்தில் மிக அதிகம்.
bharath...bharathi..

பாதியில் நிற்கும் வீடுகளின் முகப்புகளில், வாரப்படாத தலையோடு, ஒரு வார தாடியோடு, சற்றே கனந்த சிந்தனையோடு நிற்க்கும் மனிதரிடம் பேசிப்பாருங்கள். வாழ்க்கையின் அத்துணைச் சொல்லும் அர்த்தம் அவரிடம் இருக்கும்.

"அட... போன மாசம் கூட கேட்டு இருக்கலாமே? இப்ப பாருங்க கையில சுத்தமா காசு இல்லை"

"அட... போங்கண்ணே.. நானே உங்ககிட்டே கேட்கலாமுன்னு இருந்தேன்.."

"நீங்க காசு கொடுங்க சார்..., அடுத்த நாள்ல இருந்து, நிறுத்துன வேலையை ஆரம்பிச்சுடலாம்..."

"அப்பா.. நாம எப்ப புது வீட்டுக்கு போவோம்.. என்னோட பிரண்ட்ஸ் - கிட்ட எல்லாம் சொல்லி வெச்சுட்டேன்.."

"என்னங்க.., இந்த நகையை வெச்சு ஏதாச்சும் பண்ண முடியுமா?"

உலக இலக்கியங்கள் தோற்றோட வேண்டும், இந்த உரையாடல்களின் பின், முன் நிகழ்ந்தவைகளை யூகிக்க முடிந்தால்...
bharath...bharathi..
"கல்யாணம் பண்ணிப்பார்.. வீட்டை கட்டிப்பார்.."

"ஏதேனும் தடங்கல் வந்து விடுமோ" என்ற கவலையோடும், தவிப்போடும் யாரோ ஒருவர் நடமாடிக்கொண்டே இருப்பார்.., எல்லா புதுமனை புகுவிழா, திருமண விழா நிகழும் எல்லா இல்லங்களிலும்..., விழா நிகழும் நாளின் முந்திய இரவில் கூட...

எல்லா வீட்டின் சுவர்களிலும், பல உயிர்களின் வேதனை குழைத்து பூசப்படுகின்றன. சுவர்களின் வனப்புமிக்க, வண்ணங்களைத் தாண்டி, உணர்வு துடிப்பை எல்லோராலும் உணர்ந்து கொள்ளமுடிவதில்லை..

என்னால் ஏதும் செய்ய இயலாது என்றாலும் கூட, இதழ்கள் வழி நம்பிக்கையூட்டுகிறேன்..

உள்ளுக்குள் பிரார்த்திக்கிறேன்.. எங்கேனும் பாதியில் நிற்கும் கட்டிடங்களைப் பார்க்கும் போது,  பாதி பேச்சுவார்த்தையில் திருமணம் தடைப்பட்டு நிற்கும் பெண்களைப் பார்க்கும் போதும்.



பலரால் கண்டு கொள்ளப்படத முந்தைய பதிவு:
எஸ்.ராமகிருஷ்ணனின் ஈர்ப்பியல் - வழி விகடன் தீபாவளி மலர்.

10 கருத்துரைகள்:

கூடல் பாலா said...

பல இடங்களில் இது போன்ற நிகழ்வுகள் நிகழத்தான் செய்கின்றன...ஏழை மக்கள் நலம் பெற இறைவனைப் பிரார்த்திப்போம் ...

இராஜராஜேஸ்வரி said...

வண்ணத்துப்பூச்சியாக உருமாற்றம் கொள்ள இயலாது, பாதியில் மரித்து போகும் கூட்டுப்புழுக்கள் போல, வீடு என்னும் அந்தஸ்து பெறாமல் மரித்துப்போகும் கட்டிடங்கள் ஏராளம்.

கனக்கவைக்கும் பகிர்வு...

இராஜராஜேஸ்வரி said...

கல்யாணம் பண்ணிப்பார் !

அர்த்தமுள்ள வரிகள்..

மகனின் திருமணத்தின் போது அழைப்பிற்குச் சென்ற மணமகளின் தாயாருக்கும்,

திருமணத்திற்கு வந்துகொண்டிருந்த மணமகனின் சகோதரர்களுக்கும் ஏற்பட்ட சாலை விபத்து நினைத்தால் நடுக்கம் கொள்ளவைக்கிறது....

வெளியில் காட்டிக்கொள்ளாமல் திருமண்த்தை சிறப்பாக நடத்திவைப்பதற்குள் பட்டபாடு தாளம்படுமோ ? தறிபடுமோ...

குறையொன்றுமில்லை. said...

பல இடங்களில் இது போன்ற நிகழ்வுகள் நிகழத்தான் செய்கின்றன...ஏழை மக்கள் நலம் பெற இறைவனைப் பிரார்த்திப்போம்

vimalanperali said...

வெறு செங்கலும்,செமிண்டு மணலும் மட்டும்வைத்துக்கட்டப்படுவதல்லவே
மனித உணர்வுகயும்,உன்னதங்களையும் குழைத்து வைத்து எழுப்பப்டுபவைதானே?

maithriim said...

நடுத்தர, மற்றும் கீழ் தட்டு மக்களுலகில் இது சர்வ சாதாரணம், ஆனால் ரணம்! நல்ல பதிவு.
amas32

முத்தரசு said...

//எங்கேனும் பாதியில் நிற்கும் கட்டிடங்களைப் பார்க்கும் போது, பாதி பேச்சுவார்த்தையில் திருமணம் தடைப்பட்டு நிற்கும் பெண்களைப் பார்க்கும் போதும்//.

பிராத்திப்போம்...

முத்தரசு said...

பின்னூட்டம் இடுவோர் நலவாரியம் சார்பில் சில டெம்பிளேட் பின்னூட்டங்கள்:

வணக்கங்களும்,வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்..

நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

பகிர்வுக்கு நன்றிகள், தொடருங்கள்.

இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்.

நல்லாவே இல்லை, என்ன பண்றது தலையெழுத்தேனு படிக்க வேண்டியிருக்கிறது.



அட....இது கூட நல்லா இருக்கே..ரொம்ப ஈசி ஆக்கிபுட்டீக பின்னோட்டம் இடுவதற்கு

'பசி'பரமசிவம் said...

பாதிக்கப் பட்டவர்களின் மன வேதனையை வெகு எதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.
பாராட்டுகள்.

ஹேமா said...

சில யதார்த்தங்களை எழுதிவிட்டுப் படிக்கும்போது அதன் வலி இன்னும் அதிகம் !

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்