அப்பா... அப்புறம் அந்த சைக்கிள் - பரிசல்காரன் #ப.பி.

எப்போதும் எங்கும் நடந்தே செல்லும் குடும்பம்தான் எங்களுடையது. மோட்டார் வாகனங்கள் வாங்கும் எண்ணமோ, வசதியோ கிஞ்சித்தும் இருக்க வில்லை. சைக்கிள் வாங்குவோம் என்று கூட நினைத்ததில்லை ஒரு கட்டத்தில்.


அப்பாவுக்கு சைக்கிள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதிலிருந்து இருந்தது என்று என்னால் கணிக்க முடியவில்லை. அப்பாவுக்கு மூக்குப் பொடி போடும் பழக்கம் இருந்தது. உடுமலை தளி ரோட்டில் சரஸ்வதி ஏஜன்சீஸில் வாங்கும் டி ஏ எஸ் பட்டணம் பொடிதான் அவர் ஃபேவரைட் ப்ராண்ட். அதற்காக தளி ரோட்டில் நானும் அவரும் நடந்து செல்வதுண்டு. அப்போதெல்லாம் எதிரிலிருக்கும் சைக்கிள் கடை ஒன்றை அவர் பார்ப்பதை கவனித்திருக்கிறேன்.


ஒரு நாள் அந்தக் கடைக்கு என்னை அழைத்துச் சென்றார். வெளியிலேயே சைக்கிள்கள் பார்வைக்கு நிறுத்தப்பட்டிருக்கும். கடைக்குள் அப்பா அழைத்துப் போனதே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சைக்கிள் விலைகளைக் கேட்டறிந்து வந்தார். அதன்பிறகு சில மாதங்கள், அந்தப் பேச்சே இருக்கவில்லை. ஆனால் அவர் மனது முழுதும் அந்த சைக்கிளை வாங்கியே ஆகவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கக் கூடும்.

திடுமென்று ஒரு நாள் சைக்கிளோடு வீட்டுக்கு வந்தார். அப்பா சந்தோஷமாக சிரித்தபடி இருந்த தருணங்களை நினைவுகூர்ந்தால் இந்த சைக்கிள் வீட்டுக்கு வந்த தினமும் ஒன்று. முகமெல்லாம் அத்தனை மகிழ்ச்சி அவருக்கு இருந்தது. ஒரு நாள் விடாமல் தினமும் துடைத்து வைப்பார். சைக்கிளுக்கு பெல் மாட்டிவந்தது, டைனமோவை இயக்கி லைட் எரிவதை எங்களுக்குக் காண்பிப்பது என்று சந்தோஷமான தினங்கள் அவை.


ஆரம்பநாட்களில் அவர் சைக்கிளை கொஞ்சம் தயக்கமாகவேதான் ஓட்டினார். யாராவது எதிரில் வந்தால் முடிந்த அளவு ஒதுங்கிவிடுவார். நாளாக நாளாக எங்களையும் அழைத்து டபிள்ஸ் போக ஆரம்பித்தார்.

சைக்கிள் வாங்கி சிலபல மாதங்கள் கழித்து சைக்கிளின் செய்ன் கவரில் K.R.Balasubramanian என்று தன் பெயரை உடுமலை ராயல் ஆர்ட்ஸில் சொல்லி எழுதிக் கொண்டார். தினமும் துடைக்கும்போது அதையும் கர்மசிரத்தையாக துடைப்பார். சைக்கிள் ரிம், செய்ன் கவரின் பின்பக்கம், மர்காட் என்று அவர் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து துடைத்துக் கொண்டிருப்பார். (பின்னாளில் என் தம்பி அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்ததும் அவன் பெயரைச் சுருக்கி எழுதிக் கொடுத்தேன்.)

நான் கொஞ்சம் பெரியவனானதும் என்னை சைக்கிளை எடுத்துச் செல்ல அனுமதித்தார். ஒரு டிசம்பர் 31 அன்று அதை எடுத்துக் கொண்டு போய் நண்பர்களோடு இருந்துவிட்டு இரவு 1 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். இருட்டில் முள்ளில் விட்டதில் டயர் பஞ்சர். அடுத்த நாள் அப்பா சைக்கிளை எடுக்கப் போனபோது பார்த்து, பஞ்சர் ஒட்ட காசில்லாமல் நடந்தே அவர் வேலைக்குப் போனார். திட்டியிருந்தாலும் தேவலாம். ஒன்றுமே சொல்லவில்லை. இரண்டு தினங்கள் கழித்துதான் பஞ்சர் ஒட்டப்பட்டது.

ஊருக்குப் போகும்போதெல்லாம் அந்த சைக்கிளை ஒரு பாசப்பார்வை பார்ப்பதுண்டு. எடுத்து ஓட்டுவதும் உண்டு. தம்பிதான் அதை உபயோகித்துக் கொண்டிருக்கிறான். சமீபத்தில் போனபோது சைக்கிள் அருகே ஒரு யமஹா RX நின்று கொண்டிருந்தது. தம்பியின் நண்பனுடையது என்றான்.


நானும் எப்போது போனாலும் என் பைக்கை அந்த சைக்கிளை விட்டு கொஞ்சம் இந்தப் பக்கமாகத்தான் நிறுத்துவேன். என்ன ஆனாலும் அதற்கு ஈடாகாது என்பது என் மனது சொல்கிற பாடம்.


ஆனால் - எப்போது அந்த சைக்கிளைப் பார்த்தாலும் எனக்கு இடறும் விஷயம் ஒன்று உண்டு.


என்னையும் என் தம்பியையும் தவிர, என் பெரியம்மா மகன் கிருஷ்ணமூர்த்திதான் அப்பாவுடன் அதிகமாக சைக்கிளில் டபிள்ஸ் போனது. அதே போல சொந்தக்காரர்கள் வீட்டிலிருக்கும் எல்லா குழந்தைகளும் அப்பாவின் சைக்கிள் பின்னால் அமர்ந்து சவாரி சென்றிருக்கிறார்கள். ஆனால், எத்தனை முறை யோசித்தாலும் அப்பா, அம்மாவை வைத்து சைக்கிளில் போனதாய் என் நினைவிலேயே இல்லை. அம்மாவை அவர் சைக்கிளில் உட்காரவைத்துச் சென்றதே இல்லை

-பரிசல்

1 கருத்துரைகள்:

ப.கந்தசாமி said...

சைக்கிளே ஒரு ஆடம்பரமாக இருந்த காலம் அது. நான் விவசாயக் கல்லூரியில் சேர்ந்த பிறகு என் அப்பா தான் வைத்திருந்த ஒரு பழைய சைக்கிளை எனக்கு கொடுத்துவிட்டு தனக்கென்று ஒரு புது ராலே சைக்கிள் வாங்கிக்கொண்டார். நான் ஒன்றும் பேசவில்லை.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்