தனியார் தற்கொலை களங்கள்...ஒரு அதிர்ச்சியூட்டும் பதிவு.


இன்று பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. வழக்கம் போல அரசுப்பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்கள் அதிகம் மதிப்பெண்களை பெற்றியிருக்கிறார்கள்.

ஆனால் வருடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வாங்கிக்கொண்டு இந்த மதிப்பெண்களை தனியார் பள்ளிகள் "வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள்" என்பது தான் உண்மை.

பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களை சேர்க்காமல் கழித்து கட்டி விட்டு, நானூறு அல்லது நானூற்று ஐம்பது மதிப்பெண்களை விட அதிகமான மதிப்பெண்களை பெற்றவர்களை மட்டுமே அட்மிஷன் கொடுத்து, அவர்களை பிளஸ் டூ-வில் அதிக மதிப்பெண்களை பெற வைப்பது தான் சாதனையா?

அரசுப்பள்ளிகளில் எந்த வகுப்பிலும் எந்த மாணவனையும் எப்போது வேண்டுமானலும் சேர்த்திக்கொள்ளவேண்டும் என்பது நடைமுறை. எந்த தனியார் பள்ளியிலாவது, கல்வியாண்டின் பாதியில் ஒரு மாணவனை சேர்த்திக்கொள்வார்களா?

பதினொன்றாம் வகுப்பிலேயே பிளஸ் டூ பாடங்களை நடத்திவிட்டு, இரண்டு வருடம் ஒரு பாடத்திட்டத்தை படிக்கவைத்து, வெறுமனே மதிப்பெண்களை குவிப்பது சரியானதாக உங்களுக்கு தெரியக்கூடும். அந்த வாய்ப்பு ஏன் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.

மிக நன்றாக படிக்கக்கூடிய ஒரு மாணவன் ஒரு பாடத்திட்டத்தை இரண்டு வருடம் படித்து எழுதுகிறான். சராசரி மாணவன் ஒரு வருடம் மட்டும் படித்து எழுதுகிறான். எப்படி இது சமமாகும்?

வெற்றி மட்டுமே குறிக்கோள் என்றால் எப்படி வேண்டுமானாலும் ஜெயிக்கலாமே?

வாரத்தின் ஏழு நாட்களும் வகுப்பு, அதுவும் காலை ஏழு மணி முதல் மாலை ஏழு மணி வரை என்று மாணவர்களின் மண்டைக்குள் பாடங்களை திணிக்க கூடாது என்ற கல்விக்கோட்பாடுகள் எல்லாம் ஒரு சாராருக்கு மட்டும் தானா?

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் கற்பித்தல் என்பதை விட கோச்சிங் எனப்படும் பயிற்சி அளித்தல் என்பதற்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விஷயம் என்னவென்று புரிந்துக்கொள்ளப்படாமல் வெறுமனே மனப்பாடம் செய்து அதனை மதிப்பெண்களுக்காக வாந்தியெடுப்பவர்களைத்தான் தனியார் பள்ளிகள் தயார் செய்து அனுப்புகின்றன என்பதுதான் நடைமுறை உண்மை.

தமிழ்நாட்டிலேயே சிறந்த தனியார் பள்ளி என்று பெயர் பெற்ற பள்ளிகளிலிருந்து வெளிவரும் மாணவர்கள் மருத்துவ, இன்ஜீனிரிங் படிப்புக்களில் ஒன்றும் புரியாமல் தடுமாறுகிறார்கள் என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டும். புரிந்துக்கொள்ளாமல் படித்த அடிப்படைக்கல்வியின் பாதிப்பு இது.

தனியார் பள்ளிகளால் மட்டுமே சாதிக்க முடியும் என்பது உண்மையல்ல. அரசுப்பள்ளி மாணவர்களும் சாதித்திருக்கிறார்கள்.

இன்று டி.வி.பேட்டிகளில் பொளந்துக்கட்டிகொண்டிருக்கும் வசதி வாய்ப்புக்களின் பாதுகாப்போடு ஜெயித்தவர்களை விட, வாழ்க்கையோடும், அது தந்த கசப்புக்களோடும் போராடி, மிக சாதாரணமாக மதிப்பெண்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணவனே உண்மையான சாதனையாளன்.

வறுமையோடு போராடி, ஏழுநூறு மதிபெண்களை பெற்றவனின் சாதனையின் தூசுக்கு கூட இணையாக முடியாது , பணம் தரும் சகல வசதியோடு படித்து ஆயிரத்து நூறு தாண்டியவனின் மதிப்பெண்கள்.

எவ்வளவு உயரம் வந்திருக்கிறான் என்பதை விட, எவ்வளவு பள்ளத்திலிருந்து இந்த உயரம் வந்திருக்கிறான் என்பதை பாருங்கள் சாமானியனின் சாதனைக்கான அர்த்தம் புலப்படும் உங்களுக்கு.

அரசர்களை மட்டும் பதிவு செய்வது தான் சரித்திரத்தின் வழக்கம் என்றாலும், சாமானியனுக்கும் வலி இருக்கிறது என்பதை ஏன் மறக்கப்படுகிறது.

மேலும் கடந்த பதினைந்து ஆண்டுகளாகத்தான் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம், தமிழ்நாட்டில் பல்கி பெருகி விட்டன. இப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகவும், பிரபலங்களாகவும் இருப்பவர்கள் எல்லாம் கார்பரேஷன் பள்ளிகளில் படித்தவர்கள் தான் என்பதை மறந்துவிடக்கூடாது.

மனதை கொன்று விட்டு, இதயங்களை தூக்கில் இட்டுவிட்டு, மூளைக்காரர்களை மட்டும் அனுப்பும் இடங்களை தற்கொலைக்கூடங்கள் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது.

தேர்வுக்கு பிந்தைய கருத்துக்கள்.. தேர்தலுக்கு பிந்தைய அல்ல..


அரசுப்பள்ளிகள் சறுக்குவதற்கான காரணங்கள்:

ஒரு மாணவனின் படிப்புக்கு, அவனது பெற்றோர்களே தடையாய் இருக்கும் சூழ்நிலைகள் சில அரசுப்பள்ளிகளில் இருக்கின்றது என்ற தகவலை உங்களில் எத்தனைப்பேர் ஏற்றுக்கொள்வீர்கள்?

விடியற்காலை எழுந்து தோட்டத்தில் தண்ணீர் கட்டிவிட்டு, பின்னர் பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஏராளம்.

குடும்பச்சூழல் காரணமாகவே அல்லது வேறு பிற காரணங்களுக்காகவோ சனி மற்றும் ஞாயிறுகளில் ஏதேனும் ஒரு வேலைக்கு போய்விட்டு பள்ளிக்கு வரும் மாணவர்களும் ஏராளம்.

இதே போல காலாண்டு, அரையாண்டுத்தேர்வு விடுமுறை நாட்களில் வேலைக்கு போய் கையில் கொஞ்சம் காசு பார்த்துவிட்ட பின், அந்த பணம் சம்பாரிக்கும் சுகம் சுண்டிழுத்ததால் திரும்ப பள்ளிக்கு வராமல் போனவர்களும் ஏராளம் அல்லது ஆண்டின் இறுதி நாட்களில் தேர்வுக்கு மட்டும் வந்து, தலைக்காட்டுபவர்களும் ஏராளம்.
அதிக நேரம் மாணவர்களை புத்தகம் கையுமாக இருக்க வைப்பது, படிப்புக்கும் மாணவர்களுக்குமான தொடர்பினை அதிகரிக்க வைக்கும் என்ற நம்பிக்கையில், தனியார் பள்ளிகள், காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புக்கள் வைக்கிறார்கள், அது போல அரசுப்பள்ளிகளும் செய்யலாமே என்று நீங்கள் எண்ணலாம். நிறைய சிக்கல்களை தாண்டி அதுவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

காலை உணவு சாப்பிடாமல் வரும் மாணவர்களும் இருக்கிறார்கள். வெகு நேரத்தில் வரும் போது அவர்களுக்கு அது மிக சிக்கலாகி விடுகின்றது என்பது நடைமுறை சிக்கலாக இருக்கிறது. இரவு வீடு திரும்பும் வரை தாக்குப்பிடிக்க வேண்டுமே.

என் பையன் தான் ஸ்கூலில் படிக்கிறானே எதுக்கு வீட்டில் படிக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர் கூட இங்கே உண்டு. காலை முதல் மாலை தன் பையன் கூடவே இருந்து, ஒரு நாளைக்கு நான்கு டியூசன் அனுப்பி வைக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இவர்கள் எப்படி போட்டியை கொடுக்க இயலும் என்று தெரியவில்லை.

வீட்டில் அனைவரும் டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போது, அந்த சத்தத்தின் ஊடே படிக்க வேண்டும் என்ற "கஷ்டமான"
நிலைமையெல்லாம் தனியார் பள்ளிகளில் பயிலும் "கனவான் மாணவர்களுக்கு" இல்லை.

வரலாறு போன்ற பாடப்பிரிவு படிக்கும் திறமையுள்ள மாணவர்களை, பக்கத்து வீட்டில் இருக்கும் யாரோ ஒரு புண்ணியவான் வழங்கும் இலவச ஆலோசனையை கேட்டு, இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தோடு போராட விட்டு விடுகிறார்கள்.

பள்ளியில் சேர்ப்பதோடு தங்கள் வேலை முடிந்துவிட்டது என்று பெற்றோர் ஒதுங்கிக்கொள்ள, அந்த மாணவன் இரண்டு வருட நரகத்திற்குள் தள்ளப்படுகிறான்.

மாணவிகளை பொறுத்தவரை பிளஸ் டூ முடித்தவுடன் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் பல பகுதிகளில் இருக்கின்றன. எப்படியும் திருமணம் செய்துக்கொடுக்கத்தானே போகிறார்கள் என்ற மனநிலையில் இருக்கும் இளவயதினருக்கு எப்படி படிப்பில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

ஒரு வித்தியாசமான முரண்பாடும் சில இடங்களில் இருக்கிறது.
குடும்பச்சூழல் எவ்வாறு இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி, கையில் ஒரு செல்போன் சுமப்பது பள்ளி மாணவர்களிடையே  நாகரீகமாக மாறி இருக்கிறது. ஒரு மெமரிகார்டின் "ரகசியங்களுக்குள்" மூழ்கி தன்னுடைய நேரங்களை தற்கொலைக்கு உட்படுத்தியவர்களும் ஏராளம்.(சில மிடில்கிளாஸ் மாணவர்கள் கூட, ஆசிரியர்களை விட
லேட்டஸ்ட் மாடல்செல்போன்கள் வைத்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது)

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பற்றி வைக்கப்படும் விமர்சனங்களிலும் உண்மை இல்லாமல் இல்லை. மனச்சாட்சிக்கோ, மாணவர்களின் எதிர்காலத்திற்கோ பயப்படாமல்  தன்னுடைய தலைமையாசிரியர்களுக்கு மட்டும் பயந்து வேலைச்செய்பவர்களும் இருப்பது தான் வேதனைக்குரிய விஷயம்.

குறைந்தபட்சம் தான் வாங்கும் சம்பளத்திற்காவது பயந்து வேலை செய்யும் நாகரீகம் கூட இல்லாமல் போனது மிக வருத்தமான சூழ்நிலைதான் இங்கே இருக்கிறது. சிலரால் பெரும்பாலான ஆசிரியர்களும் வசவுகளை வாங்கிகட்டிக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டார்கள்.

மிக நேர்மையாக வேலை செய்த கல்வி அதிகாரிகளை, தங்களது "வலுமிக்க" சங்கங்களின் மூலம் அவமானப்படுத்தும் செயல்களும் இங்கே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு குழந்தையின் எதிர்காலம் தன்னை நம்பி ஒப்படைக்கப்படுகிறது என்ற தார்மீக பொறுப்புணர்வு இல்லாத ஆசிரியர்கள் தான் இன்றைய அனைத்து சமூக சீரழிவுகளுக்கும் முழுமுதற்காரணம். '

தங்களின் பிள்ளையை இப்படி பொறுப்பில்லாமல் விட்டுவிட மனசு வருமா இவர்களுக்கு?

நல்ல வழிகாட்டலுக்கு இன்றைய மாணவர்கள் ஏங்கிக்கிடக்கிறார்கள் என்பது தான் நிகழ்கால உண்மை. அதனை கொடுக்க தவறுகின்ற ஆசிரியர்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு துரோகம் இழைத்தவர்களாக மாறுகிறார்கள்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என்னும் இந்த கல்வி முக்கோணத்தில், யார் கடமை தவறினாலும்,. வழிமாறினாலும் பாதிப்பு என்பது நாட்டிற்குத்தான்.

டிஸ்கி:

சொல்லுவதற்கு இன்னும் இன்னும் ஏராளமான காரணங்கள்
இருக்கின்றன.  நீங்களும் உங்கள் பார்வையை பகிரலாமே..

இனி நானே நிரந்தர முதல்வர் என்றால்,அது சொந்த செலவில் சூன்யம் வைத்தது போலத்தான்.

 கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை, கிட்டத்தட்ட ஒரு நம்பியார் ரேஞ்சுக்கு தான் அடிதட்டு மக்கள் அவரை நினைத்திருந்தனர்.   எம்.ஜி.ஆர்.க்கு பிறகு  கடந்த 2006ல் ஆட்சியை பிடித்த பிறகுதான் ஒரு கிலோ அரிசி மற்றும் இலவசங்களின் புண்ணியத்தால் அந்த இமேஜ் கொஞ்சம் மறக்கப்பட்ட நிலையில் இருந்தது.

நகரங்களில் அதிக ஓட்டு வங்கியை வைத்திருந்த  திமுகவை கிராமங்கள் வரை கொண்டு சேர்த்தது இந்த இலவசங்கள் தான்.இலவசங்களால் கிடைத்த நற்பெயரை கிராமங்களில் நுழைவதற்கான,  ஒரு அடையாள அட்டையாக மட்டுமே திமுக பயன்படுத்தியிருந்தால் கூட திமுக தப்பியிருக்ககூடும். அது மட்டுமே தனக்கான ஒட்டு மொத்த வழி என்று திமுக நம்பியது தான் இன்றைய திமுகவின் பரிதாப நிலைக்கு காரணம்.

இலவசங்கள் என்பது  மக்களுக்கு ஓ.கே. தான் ஆனால் அதற்கு விலையாக, மிகப்பெரும் விலையை  மற்ற பொருள்களுக்கு கொடுக்க வேண்டியிருந்தது தான் கொடூரமாக போய்விட்டது.
 

ஒரு ரூபாய் அரிசி வேகுவதற்குள், மற்ற பொருள்களின் விலை, மக்களை வெந்து போக வைத்தது.
                   
முள்ளை முள்ளால் எடுக்கிறேன் என்று திமுகவின் இலவசங்களுக்கு போட்டியாக இலவசங்களை அறிவித்த ஜெயலலிதாவும் கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். இலவசங்கள் உங்களுக்கு எந்த நேரத்திலும் சூன்யம் வைக்கும் விஷயமாக மாறலாம்.


இந்த முறை சொந்த செலவில் திமுக, சூன்யம் வைத்துக்கொண்ட மற்றொரு விஷயம் ஓட்டுக்கு பணம் கொடுத்தது தான்.

இதற்கு முன்  நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வரை கூட, திமுகவினருக்கு திருமங்கலம் பார்முலா கைக்கொடுத்து தான் வந்ததது. காசு கொடுத்து விட்டு வெத்தலையில் சத்தியம்  வாங்குவது என்பது தான் திருமங்கலம் பார்முலாவின் ஹைலைட்டான விஷயம். வாங்கிய காசுக்கு துரோகம் இல்லாமல் ஓட்டு விழுந்து என்னவோ  உண்மை தான்.

ஆனால் இந்த முறை ஓட்டுக்கு பணம் என்பதற்கு, தேர்தல் கமிஷன் வேட்டைக்காரனாக மாற, இந்த வகை பணப்புழுக்கம் குறைந்தது.

அதையும் மீறி கடைசி சில நாட்களில் வழங்கப்பட்ட பணத்தை வாங்கியவர்களும் சத்தியம் எங்களுக்கு சர்க்கரை பொங்கல்,
என்ற பாணியில், தான் விரும்பிய கட்சிக்கே, வாக்களிக்க இப்போது திருமங்கலம் பார்முலா, 108 ஆம்புலன்சில் எடுத்து செல்லப்ப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

மீண்டும் அது கண் விழிக்காத வரை ஜனநாயகத்திற்கு நல்லது.
இனி வரும் காலங்களில் ஓட்டுக்கு பணம் என்பது எடுபடாது என்று நம்பலாம். அரசியல்வாதிகள் நம்மிடம் திருடிய நம் வரிபணத்தை நமக்கு தருகிறார்கள் எனவே இது நமக்கான பணம் தான் என்ற எண்ணவோட்டம் மக்களிடையே வந்து விட்டது.

ஊழல் செய்யும் அரசியல்வியாதிகள் மக்களையும் தங்களைப்போல மாற்ற பரப்பிய தொற்று நோய்  ஓட்டுக்கு பணம் என்பது.

எம்.ஜி.ஆர். காலத்தில் பதினான்கு ஆண்டுகள்  ஆட்சியை இழந்து வனவாசம் இருந்த கருணாநிதி, தமக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தாமல் விட்டது, அவருக்கு மீண்டும் ஒரு ஓய்வை  ஏற்ப்படுத்தி கொடுத்துவிட்டது. இது நிரந்தர ஓய்வா என்பது இப்போது ஜெயித்த ஜெயலலிதாவின் ஆட்சி முறையில் இருக்கிறது.

ஜெயலலிதாவும் தடம் மாறினால் அவரை ஓய்வெடுக்க
மீண்டும் கொடநாடு அனுப்பி விடுவார்கள் என்பதும் உண்மையே.


டிஸ்கி:

செய்வதை எல்லாம் செய்துவிட்டு, கடைசியில் மக்களை சரி செய்துவிடலாம், நாமே தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்று ஏதேனும் ஒரு அரசியல்வாதி நினைப்பார்  என்றால் அவருக்கு விழித்துக்கொண்ட மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆட்சி மாற்றம் - ரணகளமான பிரபலங்கள் - ட்விட்டரில் காமெடி கலவரம்.

நேற்று தேர்தல் முடிவுகள் வெளிவந்ததால் வந்து விழுந்த ட்விட்டுக்கள் ஏராளம்.  அந்த சமயத்தில் பிளாக்கர் வேறு வேலை செய்யாததால் நிறைய வலையுலக பிரபலங்கள், தமிழக அரசியல் பிரபலங்களை குத்தகைக்கு எடுத்து கலாய்த்தனர், அதற்காக ஒரு சிறப்பு வலைப்பாயுதே..

  திமுக - மூன்றெழுத்து, ஊழல் - மூன்றெழுத்து, ஆப்பு - மூன்றெழுத்து, ஜெயில் - மூன்றெழுத்து, பெயில் - மூன்றெழுத்து, தூக்கு - மூன்றெழுத்து.
: தான் தோற்கும் ஒவ்வொரு முறையும் வாக்குப்பதிவு மிசினை குறை சொல்லும் ஜெயலலிதா இப்போது என்ன சொல்வார்# டவுட்டு.

: டேய் ராகுலு ! நம்ம பஞ்சாயத்து (தங்கபாலு) பாலிடாயிலை குடிச்சிட்டாண்டா !

 கூட்டணியில் இருந்தாலும் அம்மாவுக்கு எதிர்கட்சி தலைவர் ஆகும் வாய்ப்பு நம்ம கேப்டனுக்கு கிடைத்த வெற்றி டாஸ்மாக் சங்கத்துகு கிடைத்த வெற்றி.

: டாய் செவல தாவுடா தாவு : எங்க தாவுரது நானே தவழ்ந்துக்கிட்டு இருக்கேன் #ராமதாஸ்.

: எரிகிற இரண்டு கொள்ளிகளில் சிறந்த கொள்ளியாக அதிமுகவை தேர்வு செய்துள்ளனர் # இனியாவது மக்கள் தலைதப்புமா?

  நேற்று வரை திமுக கூட்டணி வெல்லும்னு கருத்துக் கணிப்பு சொன்ன மீடியா கம்பெனிகளின் இன்றைய விளக்கம் என்ன?
 பெரிய திருடர்களிடமிருந்து தப்பித்து சின்ன திருடர்களிடம் மாட்டிக்கொண்டோம் #அவ்வளவு தான் வித்தியாசம்.
   விடுதலைச் சிறுத்தைகள் 10 இடங்களிலும் அதிர்ச்சித் தோல்வி #ஆமாம் இவிங்க பெரிய வீனஸ் வில்லியம்சு பாரு.
 என்ன தான் சந்தோசமா இருந்தாலும் "இந்தம்மா" வந்து என்னென்னல்லாம் பண்ண காத்திருக்கோனு ஒரு பயம் இருக்க தானே செய்யுது?#மனசாட்சி

  இனி கூடிய சீக்கிரம் 500 கோடி செலவில் "சசிகலா பிக்சர்ஸ்" பெருமையுடன் வழங்கும் "எந்திரன் பார்ட் 2"-வை எதிர்பார்க்கலாமா? .

: விக்கல் நிற்க விஷம் குடித்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களே!, இன்னும் 2 நாட்களில் பேயாட்டம் தொடக்கம். என்ஜாய்!

 ஏதோ அடிமைகள் போல வீட்டு வாசலில் காவல் காத்தவர்களுக்கு உயிர் கொடுத்த சகாயம் அவர்களுக்கு ஒரு சபாஷ்..
 ஊழல் பண்ணீட்டு.. வெட்கமேயில்லாமல் ஓட்டு கேட்டால் இதுதான் கதி..( இது அம்மாவுக்கு பொருந்தும் உடன்பிறப்பே..வெட்கம் தவீர்)

 RT : ரஜினி கிரிக்கெட் பார்க்க போனார். இந்தியா வென்றது. ரஜினி அதிமுகவுக்கு ஓட்டு போட்டார். அதிமுக வெல்கிறது. ரஜினி ராக்ஸ்.


 ஏன் அதிமுக ஜெயிக்கும்போது மட்டும் மிருகபல மெஜாரிடி கிடைக்கிறது? இதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
 
 
  திருடுனதாலயும் தான் திமுக,காங். தோத்துச்சு! ஆனா திருடுனதால மட்டும் இல்ல! - கபில் சிபல் # சூப்பர் கருத்துமுத்து.

 : சட்டு புட்டுன்னு ஒரு ஸ்கூல் ல இல்லேன்னா காலேஜ் ல join பண்ணனும் # லேப்டாப் கிடைக்கும்.@ நான் சட்ட சபைக்கு கோட் சூட் அணிந்தே வருவேன்,ஓப்பனிங்க் ஃபைட் ரொம்ப முக்கியம் -கேப்டன் நிபந்தனை,கவர்னர் திகைப்பு.

திமுக மீண்டும் ஜெயித்தால்... முரட்டுத்தனமான அரசியல் நையாண்டி...


முன்பு அடுத்து அதிமுக ஜெயித்தால்... என்ற பதிவின் தொடர்ச்சியாக இப்போது..மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால்...

அதிமுக கூடாரத்தை காலியாக்கி, சின்னதொரு குட்டிச்சுவராக மாற்றிவிடுவார்கள். அம்மா கோட நாடு போகாமல் இங்கேயே இருந்தாலும் கூட, அனைத்து அதிமுக முன்ணனி தலைவர்களும் அழகிரியின் அசைன்மெண்டுக்கு பலியாவார்கள். முத்துச்சாமி தலைமையில் அதிமுகவிலிருந்து வந்தவர்கள் என்று ஒரு தனிப்பிரிவு கூட ஆரம்பிக்கப்படலாம். (ஆட்சியில்லாத போது கட்சியை காப்பாற்றுவது தான் ஒரு தலைமை சந்திக்க வேண்டிய மிகப்பெரிய சவாலாகும்)

நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி, தாங்கும் சக்தி, ஏங்கும் சக்தி மற்றும் தூங்கும் சக்தி அதிகரிக்கும்.

ரஜினியின் ராணா படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காது. அதாவது
ராணா படத்துக்கு ஆயிரத்து எட்டாவது தடை உருவாகும்.(ஜக்கு பாய் பார்ட் 2) ரஜினியின் வாழ்க்கை முறை ஆறு மாதம் இமயமலை, ஆறுமாதம் சென்னையில், பாராட்டு விழாக்களில் பங்கேற்பது என மாறும்.

இப்போது பச்சை வண்னத்தில் இருக்கும் பல வலைப்பதிவர்கள் புதிய முகவரியில் செயல்பட ஆரம்பிப்பார்கள்.( மஞ்சள் நிறமே... மஞ்சள் நிறமே... )

ஆட்சியில் பங்கு கேட்கும் தலைவர்கள் வெளியிலிருந்து கரடியாய் கத்தி, தமிழகம் முழுவதும் நடையாய் நடக்க, கலைஞர் ஆதரவு கதர்சட்டைகள் காலை, மாலை என்று இரு வேளையும் அறிவாலயம் சென்று, அதன் வாசற்படியை தேய்ப்பார்கள்.

இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடும் பதிவர்கள் சிறப்பான முறையில், மூன்று கால் மற்றும் ஆயிரம் கரங்கள் உள்ள ஆட்டோ அனுப்பி கவனிக்கப்படுவார்கள்.

ராமதாஸ் கொஞ்சம் சந்தம் போட்டு, கவனத்தை ஈர்த்து விட்டு, அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி என்ற மாம்பழ தாகம் தீர்த்துகொண்டு, திமுக கூட்டணியில் நீடிப்பார்.

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மிக அதிரிகரிக்கும் (வார்டு கவுன்சிலர்கள் தங்கள் தாத்தா பாட்டிகளின் நினைவாக கல்லூரிகளை மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களை உருவாக்கி, டாக்டர் பட்டங்களை "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் வழங்கிக்கொள்வார்கள்)

இந்த தேர்தலை மதிமுக புறக்கணித்தது போல,அடுத்த வரும் இடைத்தேர்தல்களை தேர்தல் கமிசனே புறக்கணிக்கும்.

கூட்டுக்குடும்பத்தின் பெருமையை உலகம் அறியும். விழுதுகளோடு இருக்கும் ஆலமரம் தமிழக அரசின் சின்னமாக அறிவிக்கப்படும்.

ஆரியர்களை ஒடுக்கும் விதமாக செம்மொழி சாகித்திய அகடமி விருது உருவாக்கப்படும். இரண்டாம் ஆண்டு விருது கவிஞர் மன்னிக்கவும் கவிபேரரசர் வைரமுத்துவுக்கு வழங்கப்படும்.( முதல் ஆண்டு யாருக்கு என்று உங்கள் மனதில் கேள்வி உங்கள் மனதில் வந்தால்... போய் தயவு செய்து "சுட்டி டிவி" பார்க்கவும்.

வீடு வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு, காப்பீடு திட்டம் விரிவு படுத்தப்படும் (ஹா...ஹா...ஹா..)
அடுத்த செம்மொழி மாநாட்டு தலைவி???சுர்ஜித் சிங் பர்னாலா மீண்டும் கவர்னராக நியமிக்கப்படுவார்.
தமிழ்நாட்டுக்கு நிரந்தர முதல்வரும், நிரந்தர கவர்னரும் கிடைத்த மகிழ்ச்சியை, மாண்புமிகு மக்கள் புதிய மற்றும் பழைய தமிழ்புத்தாண்டு தினத்தில் கொண்டாடி மகிழ்வர்.

தனக்கு கிடைக்கும் சிறிய உணவு இடைவேளைகளின், வேலைகளின் பரிசாக நாட்டுமக்களுக்கு பெண் சிறுத்தை, பொன்னர்- சங்கர் பாகம் 2,
அர்பணிக்கப்படும்.

அனைத்து தொலைக்காட்சிகளிலிலும், சன் பிக்சர்ஸ், கிளவுட் நைன், ரெட் ஜெயிண்ட் தயாரிப்பு படங்களின் விளம்பர  இடைவெளியில், மற்ற
நிகழ்ச்சிகள் ஒளிபரப்படும்.

வடிவேலு தகத்தாய தளபதியாக நீடிப்பார்.(ராகுல் காந்தி தமிழகம் வரும் போது, கைப்புள்ளை அவரை மொரட்டுத்தனமாக கலாய்ப்பார்.... என்ன கைய புடிச்சு இழுத்தியா?)

ஸ்பெக்ட்ரம், ஆ.ராசா, ராஜாத்தி அம்மாள், கனிமொழி, ஜே.பி.சி. எக்ஸ், ஒய், இசட், ஜனகனமண.

மிக முக்கியமான ஒன்று:

அதற்கு அடுத்த 2016 தேர்தலிலும் திமுக ஜெயிக்கும்.

ஒசாமா பின்லேடன்,பிரபாகரன்,சாய்பாபா -மரணத்திற்கு பிந்தைய சில சர்ச்சையான விஷயங்கள்

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான தகவல்களை வாசிப்பதற்காக இணையத்தில் உலா வந்த போது பல்வேறு வகையான புதுமையான வாதங்களை காண நேரிட்ட்து.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டபோது எழுந்த விவாதம் போலவே, தற்போதைய சூழ்நிலையிலும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
ஒசாமா கொலையை கண்டிக்கும் பல்வேறு வலைப்பதிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதற்கெல்லாம் காரணம் இல்லாமலும் இல்லை.

உலகின் பெரிய அண்ணன் தோரணையில் வலம் வந்து கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருந்த அமெரிக்காவிற்கு மரணபயம் காட்டும்விதமாக, அவர்களது ராணுவ தலைமையகத்தை தாக்கி, "ஷாக் அட்டாக்" கொடுத்தவர் என்பதால் ஒசாமாவை போற்றுகின்றனர் சிலர்.

பல ஆயிரம் பேரை கொன்றவர் என்ற போர்வையில் ஒசாமா கொல்லப்படுகிறார் என்றால், பல்வேறு நாடுகளில் தனது நாட்டாமை போர்வையில் அப்பாவி மக்களை அமெரிக்கா கொல்லுவது மட்டும் நியாயமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

2001 செப்டம்பர் இரட்டை கோபுர கட்டடத்தின் மீதான தாக்குதலுக்கு பின் அமெரிக்கா "பயங்கரவாததிற்கு எதிரான போர்கோலம்" பூண்டபின்
"இது குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிரான போர் அல்ல" என்பதை அடிக்கடி சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமும், பயமும் அமெரிக்காவுக்கு இருந்தது.

முன்பு சதாம் உசைன் தூக்கிலிடப்பட்டபோது ஜார்ஜ் புஷ், சொல்லிய அதே வார்த்தைகளைத்தான் இப்போது ஒசாமாவுக்காக, பாரக் ஒபாமா ஒப்பிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் இந்த விஷயத்தில் நன்றாக சிக்கிக்கொண்டிருப்பதாகவே தெரிகிறது. "இது அமெரிக்க- பாகிஸ்தான் ராணுவ கூட்டு நடவடிக்கை அல்ல" என்று ஆசிப் அலி சர்தாரி சொல்வது கூட இதற்காகத்தான்.

உண்மையில் ஒசாமா இருப்பது பாகிஸ்தானுக்கு தெரியாது என்றால் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தியவர்கள் அங்கே பதுங்கியிருப்பதுவும் பாகிஸ்தான் அரசுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே?

அமெரிக்க படைகள் ஒசாமாவை கொல்ல நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டதை அனுமதித்த பாகிஸ்தான், இந்தியாவை இதே போல களமிறங்க அனுமதிக்குமா?
ஒரு வேளை ஏதாவது ஒரு பாசத்திற்காக ஒசாமா தங்குவதற்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்திருந்தால், "தீவிரவாதத்தை ஒழிக்கிறேன்" என்று அமெரிக்காவிடம் கை நீட்டி வாங்கிய 19.5 பில்லியன் டாலர்கள் (ஒரு பில்லியன் = 100 கோடி) பாகிஸ்தானை பொறுத்தவரை துரோகத்திற்கான பணம் தானே?

ஒரு பக்கம் அமெரிக்காவிடம் பணம், இன்னொரு பக்கம் ஒசாமாவுக்கு அடைக்கலம். பாகிஸ்தானின் இந்த அழுகுணி ஆட்டம், தமிழர்களுக்கு எதிரான போரில் இலங்கையின் சிங்கள அரசு போட்ட இரட்டை வேடம் போல அல்லவா இருக்கிறது?

இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்கு என்று இந்தியா கொடுத்த பணத்தை, தமிழர்களை ஒழிக்க பயன்படுத்திக்கொண்டது இலங்கை. இந்தியாவும் இந்த இரட்டை வேடத்தை ஒப்புக்கொண்டது போலவே
"கள்ளமௌனம்" காத்தது.

பிரபாகரன் கொல்லப்பட்டபோது இருந்த நிலையில் தான், இந்தியா ஒசாமா கொல்லப்பட்ட தற்போதும் இருப்பதாக தெரிகிறது. "இது பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் ஏற்பட்ட முன்னேற்றம்" என்று இப்போது கருத்து தெரிவித்து இருக்கும் இந்திய பிரதமர் அப்போது கொஞ்சம் அடக்கி வாசித்தார் அவ்வளவே. இந்தியாவில் பிரபாகரன் தேடப்படும் குற்றவாளி என்ற ரீதியில் மட்டும் அறிக்கை வாசித்து, ராஜபக்ஷேவுக்கான விசுவாசத்தை காட்டியது மட்டும் இந்தியாவின் நடந்தது.

பிரபாகரன் கொல்லப்பட்டபோது எழுந்த "இது போட்டோகிராபிக்ஸ் மாயம்" என்ற சர்ச்சை இப்போதும் எழுந்திருக்கிறது.

பிரபாகரன் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்று நம்புபவர்கள் போலவே, இன்னும் ஒசாமா உயிருடன் தான் இருக்கிறார் என்று நம்புபவர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.
பிரபாகரனை வீழ்த்திவிட்டேன் என்று மார்தட்டியே தன்னுடைய அரசியல் செல்வாக்கினை உயர்த்திக்கொண்ட ராஜபக்ஷேவை போலவே, இனி அதலபாதளத்துக்கு போய்விட்ட தன்னுடைய செல்வாக்கினை ஒபாமா உயர்த்திக்கொள்வார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

ஒசாமா கொல்லப்பட்டபின், பாரக் ஒபாமா வெளியிட்ட உரையினை கொஞ்சம் பாருங்கள். நம்முடைய தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் அறிக்கைகள் போலவே இருக்கும்.

பின்லேடனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க நான் உத்திரவிட்டேன். பின்லேடனை நீதியின் பின் நிறுத்த நான் முடிவு செய்தேன். இதெல்லாம் பாரக் ஒபாமா  உரையில் இருந்த வாசகங்கள். மூச்சுக்கு முன்னூறு தடவை நான்,நான்,நான்...

இதெல்லாம் விட ஹைலைட்டாக, "நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்துகாட்டுவோம் என்பதை இப்போது மீண்டும் நிரூபித்துக்காட்டியுள்ளோம்" என்ற பஞ்ச் டயலாக் வேறு.

இத்தனை விஷயங்களை மனம்போன போக்கில் யோசித்த போது புலப்பட்டது என்னவோ இது தான். "இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா என உலகம் முழுவதும் அரசியல்வாதிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள்.மக்களும் நம்மைப்போலவே இருக்கிறார்கள் - தன் ரத்தத்தை உறிஞ்சும் அவர்களை ரசித்து பாராட்டியபடி"

டிஸ்கி:
சாய்பாபாவை இந்த பதிவின் தலைப்பில் கொண்டுவந்ததற்கான காரணம், கண்ணில் தென்பட்ட சில வலைப்பதிவுகள் தான். மற்ற இருவரின் மறைவு போலவே, சாய்பாபாவின் மறைவினை பற்றி ஆதங்கத்தோடும், ஆத்திரத்தோடும் பதிவுகள் எழுதப்பட்டியிருந்தாலும் கூட, சாய்பாபாவை சகட்டுமேனிக்கு திட்டிய பதிவுகள் அளவுக்கு மற்ற இருவர் பற்றி யாரும் குறைகூறி விமர்சிக்கவில்லை. காரணம் நீங்கள் அறிந்திருந்தால் பின்னூட்டலாம்.

உதயமானது காபி பேஸ்ட் பதிவர்கள் சங்கம்-எங்க ஏரியா உள்ளே வராதே(உள்குத்து மற்றும் வெளிக்குத்து)

உதயமானது எங்கள் காபி பேஸ்ட் பதிவர்கள் சங்கம் (பின்னூட்டத்தில் கும்மி அடிப்போர் சங்கத்தின் ஆதரவு பெற்றது)
காபி, பேஸ்ட் பதிவர்கள் என்ற போர்வையில்;
என்னை, என் சகபதிவர்களை, போர்வை போர்த்தாமலே குதறிக்கொண்டிருப்பதை காண சகிக்காமல், முதலாவதாக களமிறங்கி இருக்கிறோம். (உங்களைப்போல "என்னிடம் சரக்கு இல்லையா", என்னை காபி பேஸ்ட் பதிவர் என்பவர்களுக்கு - என் பதில் !" என்ற தலைப்புகளில் பதிவெழுதிவிட்டு மௌனமாய் இருக்க என்னால் முடியாது, ஆதலால் ரோஜாப்பூந்தோட்டம் உங்களை கோபம் கலந்த டெரர் அன்புடன் எமது சங்கஆரம்ப விழாவிற்கு வரவேற்கிறது)

கண்டனங்களுக்கு எதிர் கண்டனங்களை தெரிவிக்க, சங்கம் வைத்து "தமிழ்" வளர்த்த தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு, ஸ்ட்ராங் காபி பதிவர்களுக்கு சங்கம் அமைக்க என்னால் முடியாவிட்டால், அது எதிரிகளுக்கு பூஸ்ட் கொடுத்தது போல் அல்லவா மாறிவிடும்?

ஓகே... மைக் ஆன்....

எதிர்க்கட்சி அன்பர்களை பார்த்து, நான் ஒன்று கேட்டுக்கொள்ள ஆசைப்படுகிறேன், விருப்படுகிறேன். (ரெண்டும் ஒண்ணு தானா, சரி விடுங்க... ஒரு புளோவில் வந்து விட்டது.... அரசியல் நாகரீகத்தோடு கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள்)

நீங்கள் எல்லாம் சொந்தமாகவா பதிவு எழுதுகிறீர்கள். எங்களை கேள்வி கேட்பதற்கு...    இந்த வாழ்க்கையே நமக்கு இரவலாக வந்தது தானே? இந்த வாழ்க்கையே நமக்கு சொந்தமில்லையே? பதிவுகள் மட்டும் எப்படி சொந்தமாக எதிர்ப்பார்க்கலாம்.

ஒபாமா பற்றியும், ஒசாமா பற்றியும் நீ பதிவெழுதினாயே...அது நீயே நேரில் சேகரித்த செய்திகளா? நேரடியாக தெரிந்து கொள்ள ஒசாமா உனக்கு என்ன ரெண்டு விட்ட சித்தப்பாவா? இல்லை ஒபாமா உன்னுடன் வயலுக்கு வந்து நாத்து நட்டவரா? இல்லை களை என்னும் ஆணீயை அசைத்தவரா?

எங்கே படித்த, கேட்ட செய்திகளை கொஞ்சம் இட்டுக்கட்டி, தானே பார்த்தது போல எழுதுவது தானே நடைமுறை. அட அது தானே பதிவுலக வழக்கம்.

அதைவிடுங்கள்...
அஞ்சு லட்சம் விற்கும் வார இதழ்களுக்கும், செய்தித்தாள்களுக்கும் நாங்கள் தானே ஆதரவு கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.

பாவம் அந்த வார இதழ்கள் - அநாதையாய் கிடக்கும் அவர்களின் எழுத்துக்களை பரப்பவேண்டும் என்று என்றைக்காவது உனக்கு தோன்றியது உண்டா? 

எனக்கு தோன்றினால் உனக்கென்ன.. உனக்கென்ன?

இமய மலை மீது என் கொடி பறந்தால் உனக்கென்ன?

உனக்கென்ன.. உனக்கென்ன?
(யோவ், நான் கரட்டா பேசுறனா?)
(சரி...சரி...தண்ணிய குடி.... தண்ணிய குடி...)
வாரத்திற்கு மூணு பதிவு போட முடியாத நீ எப்படி, தினமும்  மூணு பதிவு போடும் என்னை திட்டலாம்?

குஜராத்தில் கூட இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தது. என்ன செய்தார்கள் அவர்கள்...

பாவம் இவர்கள் தினமும் மூணு பதிவு போடுகிறார்களே பாவம் என்று சத்துணவில் போடும் முட்டைக்கு நாலு டோக்கன் வாங்கிக்கொடுத்துவிட்டு கலாய்த்தார்கள். அந்த நாகரீகம் கூட இல்லையா உன்னிடம்?

(கூட்டதை பொளந்துட்டு ஒருத்தன் வர்ராணே... ஒரு வேளை ஆர்ட்பிலிம் ரேஞ்சுக்கு பதிவெழுதுவோரின் சங்கத்து ஆளா இருக்குமா?)

ரைட்டு... பின்னூட்ட போட சைத்தான் சைக்கிள்ல வருது...

சரி நண்பர்களே இப்ப நான் அப்பீட்டு... வலி கொறஞ்சதும் ரீப்பீட்டு.

டிஸ்கி:
"சங்கத்து ஆள அடிச்சது எவன்டா"
"போடா தமிழ் மண ஆண்டவனே நம்ம பக்கம்"
என்ற கொள்கை விளக்கப்பாடல்களை பின்னூட்டமாக இட்டு,  சங்கத்துக்கு ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

ரஜினி ரசிகர்கள் , கமல் ரசிகர்கள்-யார் புத்திசாலிகள்?

அட போங்கப்பா, ரசிகர்களாக இருப்பதே ஒரு முட்டாள்தனம், அதுல அந்த ரஜினி,கமல்-னு பெரிய வித்தியாசம் வேற அப்படினு நீங்க கடுப்பாகக்கூடும்.

உண்மையில் நம் மனதை உள்நோக்கி பார்த்தால் நாம் சந்தித்த மனிதர்களின், நம்மை ஈர்த்த மனிதர்களின் தாக்கம், ஆழ்மனதில் இருக்கக்கூடும். அதன் பாதிப்பாக நம் நடவடிக்கைகளில் ஒரு சில மேனரிஸங்களும் நம்மை அறியாமல் வெளிப்படக்கூடும். ஆழ்ந்து கவனித்தால் அது யாரோ ஒருவரிடமிருந்து நாம் ரசித்த விஷயமாக இருக்கும்.

புராணக்கதை கேட்ட காலங்களில் அதன் கதை மாந்தர்களை ரசித்தவர்கள் இப்போது சினிமா கதாநாயன்-களுள் மூழ்கி இருப்பதனை காலக்கொடுமை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாமே தவிர யதார்த்தம் இதுதான்.

முன்பு புத்தக வாசிப்பு அதிகம் இருந்த காலத்தில், தன்னை வந்தியதேவனாகவும், அரவிந்தனாவும் வரிந்து கொண்டவர்கள், சினிமாவின் தாக்கம் அதிகரித்த பின் தன்னை சிவாஜியாகவும், எம்.ஜி.ஆராகவும் பாவித்துக்கொண்டார்கள்.இன்று ரஜினி, கமல் என்னும் பிம்பங்களை தாண்டி, அடுத்த தலைமுறைக்கு வந்திருக்கிறார்கள்.

நான் யாருடைய ரசிகனும் இல்லை என்று காட்டிக்கொள்பவர்களின் மனதிலும் தான் ரசித்த யாரோ ஒருவரின் பிம்பம் ஒளிந்திருக்கும் என்பது தான் உண்மை.


தமிழ் சினிமாவில் எப்போதும் ஈர்ப்பு அடிப்படையில் ஒரு நடிகரின் தாக்கமும், நடிப்பு அடிப்படையில் ஒரு நடிகரின் ஏற்றமும் இருக்கும்.

எம்.ஜி.ஆர். ஈர்ப்பு வகை. சிவாஜி நடிப்பு வகை.

ரஜினியை பொறுத்தவரை ஈர்ப்பு அடிப்படையிலான ரசிகர்கள் தான் ஏராளம். அடித்தட்டு மக்கள், குழந்தைகள், பெண்கள் என்ற வகையில் ரஜினியின் கவர்ச்சி எடுபட்டிருப்பதை பார்க்கலாம். இப்போது இணையத்தில் அதிக அளவில் ரஜினி ரசிகர்கள் குவிந்திருப்பதற்கான காரணமும், முன்பு சிறுவர்களாக இருந்தவர்களை ரஜினி கவர்ந்தது தான்.

கமலை பொறுத்தவரை நடிப்பு மூலம் ரசிகர்களை ஈர்த்தது தான் அதிகம். கொஞ்சம் விபரம் தெரிந்தவர்களாக தங்களை காட்டிக்கொள்ள விரும்புபவர்கள் கமல் ரசிகர் என்ற அடையாளத்தையே கொண்டிருக்கிறார்கள்.

சினிமா சார்ந்த அத்தனை தொழில்நுட்ப விஷயங்களையும் கமல் தெரிந்து வைத்திருப்பது கூட இதற்கு காரணமாக இருக்கிறது. அனந்து முதல் வையாபுரி வரை அத்துணை சினிமா மனிதர்களிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள்வதுடன், அவர்களையும் தன்னுடைய படங்களில் பயன்படுத்துவது கமலினை (மேல்தட்டு) ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.

சில பல காரணங்களால் சிவப்பாக இருக்கும் கமலை விட, ரஜினிக்கு அதிகமான பெண்களின் ஈர்ப்பை பெற்றியிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம், கேமராவை பார்த்து பஞ்ச் பேசுவது இதெல்லாம் ரஜினிக்கே கைவந்த ரசிகர்களை ஈர்ப்பதற்க்கான வித்தை.

படம் வெளியாகும் சமயத்தில் எல்லாம் அரசியல் வருவதாக பேசுவது கூட,ரசிகர்களை தக்கவைக்க ரஜினி மேற்கொள்ளும் "சினிமா அரசியல்" தந்திரம் தான் என்பது இன்றும் உயிருடன் இருக்கும் குற்றச்சாட்டுதான்.

ஆனால் ரஜினி அளவு ரசிகர்களின் ஈர்ப்பை இனி ஒரு நடிகர் பெற முடியுமா என்பது கேள்விக்குறியே.இப்போது கூட ரஜினியின் ரோபோ படவியாபாரம் பார்த்து திகைத்து போய் கிடக்கிறது இந்திய திரையுலகம்.

ரசிகர் மன்றங்கள் என்ற பெயரில் இயங்குபவர்கள் கூட, தங்களின் சொந்த பணத்தை போட்டுதான் கோலாகலம் செய்யவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.
ரஜினி, கமல் தலைமுறையை தாண்டி வரும்போது, இனி வரும் காலங்களில் இந்த கூத்துக்களும் ஒரு முடிவினை அடையும் என்று நம்பலாம்.

இனி ரசிகர் மன்றங்கள் தீண்டதகாததாக மாறிவிடும் சூழ்நிலையும் விரைவில் வரும், அதற்கு ஈடாக இணைய ரசிகர் மன்றங்கள் உருவாகக்கூடும்.

ரசிகர் மன்றம் நடிகர்களுக்கு கூடாரம்;
குடும்பங்களுக்கு சேதாரம்.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்