ஜெயலலிதாவிடமிருந்து ஒரு கெட்ட செய்தியும், ஒரு நல்ல செய்தியும்..சட்டப்பேரவை விதி எண் 110 என்றாலே தமிழக முதல்வருக்கு ரொம்ப பிடிக்கும் போல. அதற்கும் காரணம் இல்லாமல், அவையில் அது குறித்து விவாதம் நடத்தி சலசலப்பு வர வாய்ப்பில்லை, துறை அமைச்சர் அறிவிப்பு செய்து, விளம்பரம் செய்து கொள்வதை தவிர்த்து,  தானே திட்டங்களையும், அறிவிப்புக்களையும் செய்தால் மக்களிடம் சென்று சேர்ந்தது போலவும் இருக்கும்.

இப்படி நேற்று விதி எண் 110 கீழ் முதலமைச்சர் அறிவித்தது தான், மரண தண்டனையை நீக்க, மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு அதிகாரமில்லை என்பதும்.

ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும் என்று யாரெல்லாம் துடித்தார்களோ அவர்களையும், ஜெயலலிதா முதல்வராக வரகூடாது என்று யாரெல்லாம் தடுத்தார்களோ அவர்களையும் ஒரே புள்ளியில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

முன்பு சமச்சீர் கல்வி பற்றிய சர்ச்சையின் போது கூட, இப்படிப்பட்டப் நிலையைத்தான் ஜெயலலிதா தமிழகத்தில் உருவாக்கினார். எல்லோரும் விரும்புவதற்கு எதிராக முடிவெடுப்பதில் தான் தன் திறமை இருக்கிறது என்று நினைக்கிறாரோ என்னவோ?(அம்மா என்றால் அதிரடி...)

சமச்சீர் கல்வி விஷயத்தில் மௌனம் காத்த விஜயகாந்த் கூட, பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை நீக்க அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளார். மற்ற அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களின் நிலைப்பாடும் இதே போன்று தான் இருக்கிறது.

கடந்த தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்ணைக் கவ்வியதால், திருமாவளவனின் இடத்தை, தான் பிடித்து விடலாம் என்று அரசியல் வலிமை பெற தீவிரமாய் இயங்கி வரும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூட, சட்டமன்றத்தில் பேச இயலாது, சட்டமன்றத்தின் வெளியே.. "அபிராமி,அபிராமி" ரேஞ்சுக்கு புலம்பிக்கொண்டிருந்தார்.

எந்த ஒரு குற்றவாளிக்கும் தண்டனையைக் குறைக்கிற அல்லது ரத்து செய்கிற அதிகாரம், இந்திய அரசியல் நிர்ணயச் சட்டப்பிரிவு 72ன் படி குடியரசுத்தலைவருக்கும், சட்டப்பிரிவு 161-ன் படி மாநில ஆளுநருக்கும் மட்டும் தான் இருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும் கூட,

மரண தண்டனையை நீக்க குடியரசுத்தலைவருக்கும், ஆளுநருக்கும் பரிந்துரை செய்யும் தீர்மானத்தையாவது, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்புவதற்கு என்ன தடை இருக்கிறது. வெளிநாட்டு ராஜபக்ஷேவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றும் சட்டமன்றத்திற்கு உள்நாட்டு பிரச்சனையை பற்றி தீர்மானம் போட எதுக்கு தனியே ஒரு அதிகாரம்? குறைந்த பட்சம் விவாதமாவது செய்யலாமே?

இது அதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகத் தெரியவில்லை, தமிழக முதல்வருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரச்சனையாகத் தெரிகிறது. தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனையை பேசுவதற்காக அமைக்கப்பட்ட சட்டமன்றத்தில், பெரும்பாலான தமிழக மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கும் ஒரு பிரச்சனையில், இதுவரையில்  விவாததிற்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது தான் உச்சகட்ட சோகம்.(அம்மா என்றால் அன்பு என்று சொந்தக்குரலில் பாடிய அம்மாவிடம் தான், கருணையை எதிர்பார்க்கிறோம்)  

இதே சட்டப்பேரவை விதி எண் 110-படி ஜெயலலிதா தெரிவித்த அறிவிப்புக்கள் அனைவரின் நெஞ்சிலும் பால் வார்த்தது என்பதை மறுப்பதற்கு இல்லை.பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அத்தனை அறிவிப்புக்களும் சிறப்பு வாய்ந்தவை.

முக்கியமாக தமிழகத்தில் இனி மாணவர்களுக்கு முப்பருவத்தேர்வு முறை  Trimester pattern இருக்கும் என்ற தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு மாணவர்களின் சுமையை வெகுவாக குறைக்கும் என்று நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது. ஒரு வருடம் முழுவதும் படிக்கும் பாடத்தை, மூன்று பாகங்களாக பிரித்து கொடுத்து தேர்வுகள் நடத்தப்போகிறார்கள். மாணவர்கள் படித்து நியாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய பாடப்பகுதிகளும், புத்தகங்களின் சுமையும் மூன்றில் ஒரு பகுதியாக குறைய போவதால், அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் இனி "மந்திரிச்சு விட்டது போல திரிய வேண்டிய அவசியம்" இருக்காது.

ஆனால் ஆண்டு முழுவதும் "பிஸியாக" இருக்கும் தேர்வுத்துறை இதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறது, எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறது என்பது தான் இதன் வெற்றி இருக்கிறது.

காஞ்சியில் தீக்குளித்த செங்கொடி - கூடுதல் தகவல்களுடன் ஒரு அலசல்.
"நிரபரதித் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வோம்" என்ற போராட்ட வாசகத்தை ஏந்தி நிற்கும் இளம்பெண் தான் செங்கொடி.

பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, காஞ்சிபுரம் வட்டாச்சியர் அலுவலகம் முன் இன்று மாலை, தீக்குளித்த செங்கொடி, தனது தீக்குளிப்பதற்கு முன்னதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

"தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்- இப்படிக்கு தோழர் செங்கொடி" என்று அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.

முத்துக்குமாரைப் போலவே, தாய் இல்லாமல் வளர்ந்த செங்கொடி வறுமையான சூழ்நிலையிலும், கொள்கை உணர்வோடு வாழ்ந்து வந்தவர். இருபத்தி எழு வயது நிறைந்த இந்த பெண்ணை கல்லூரி படிப்பை படிக்க வைத்தது காஞ்சிபுரத்தில் உள்ள மக்கள் மன்றம் என்ற அமைப்பு தான்.

மக்கள் மன்றம் இப்போது ராஜீவ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு, வரும் ஒன்பதாம் தேதி தூக்குத்தண்டனையை எதிர் நோக்கி காத்திருக்கும் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை, மரணத்திலிருந்து மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட செங்கொடியின் மரணம் இப்போது,  பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை தகர்க்க போராடும் தமிழ் உணர்வாளர்களை மட்டுமில்லாது, அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மூன்று தமிழர்களின் உயிரை காப்பாற்ற நடந்து வரும் போராட்டத்தில், இப்போது ஒரு இளம்பெண் உயிர் பலியாகி இருப்பது வருத்ததை ஏற்படுத்தும் விஷயமாகி விட்டது.

இலங்கை தமிழர்களின் பிரச்சனையின் போது, முத்துக்குமார் தீக்குளித்தபோதே, இது தவிர்த்திருக்கபட வேண்டும் என்று கருதப்பட்ட நிலையில், இப்போது செங்கொடியின் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

தமிழர்களுக்காக களத்தில் நின்று போராடுவதற்கு தான் இப்போது இளைஞர்கள் தேவைப்படுகிறார்களே அன்றி உயிரை மாய்த்துக்கொள்ள அல்ல என்பதை தான் தமிழ் இயக்கங்களை சார்ந்தவர்கள் கருத்து.

செங்கொடியின் போராட்டம், மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தின், அனைத்து தரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்து, போராட்டத்தை தீவிரமாக்கும் என்றாலும் கூட,
ஒரு மரணத்துக்கு, மற்றொரு மரணம் தீர்வாகி விடாது என்னும் சூழ்நிலையில், இது போன்ற தற்கொலைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது தான் எம் கருத்து.

தீக்குளித்த செங்கொடியின் ஆத்மா, மூவரின் உயிர் மீட்பால் சாந்தியடையட்டும்.

இனி ஹசராமல் உண்ணுங்கள் பேரறிவாளர்களே...


கிட்டத்தட்ட நாடெங்கும் ஏதேனும் ஒரு போராட்டம் தீவிரமாய் பற்றி எரியும் சூழ்நிலைதான் இப்போது இருக்கிறது.


அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தும், மரண தண்டனைக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் "வலிமையான லோக்பால்" கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அன்னாவின் உண்ணாவிரதம் இன்று காலை பத்து மணியளவில் முடிவுக்கு வந்துள்ளது. (ஏம்பா காங்கிரஸ் கனவான்களே... ஊழலுக்கு எதிரான போராடும் அன்னாவிடம் ,பிரதமரின் தூதராக அனுப்ப உங்களுக்கு ஆதர்ஷ் ஊழலில் சிக்கிய விலாஸ்ராவ் தேஷ்முக் தான் கிடைத்தாரா?)

இந்த இரண்டு பிரச்சனைகளிலும், வேறுபட்ட மனநிலையை தமிழக மக்கள் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வடநாடு முழுமைக்கும் பெரும்பான்மையான ஆதரவு கிடைத்திருக்க, தமிழகத்தைப் பொறுத்த வரை, அன்னா ஹசாரேக்கு பின் "காவி" வண்ணம் இருக்குமோ? என்ற எண்ணம் பெரும்பானவர்களை முழுமனதுடன் அதரவு தருவதை பின்னுக்கு தள்ளுவதாகவே இருந்தது.

இந்த தேசத்தில், ஊழல் என்பது வேரடி மண்ணாக மாறிவிட்ட நிலையில்,  அண்ணா ஹசாரே செய்திருப்பது ஒரு நல்ல முன் முயற்சி. பாராட்டிற்குரியது.  அதிகம் ஈர்ப்பு இல்லாத 74 வயது முதியவர், தேசத்தின் இளைஞர்கள் தெருவில் வந்து போராட வைத்திருப்பது இந்த தேசத்திற்க்கு நல்ல செய்தி தான்.

ஆனால் இந்த முயற்சிகள்,  எந்த அளவுக்கு அரசியல் தலைவர்களின் சித்து விளையாட்டினை தாண்டி, எந்த அளவுக்கு "இறுதி வெற்றி" பெறும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளதை மறுக்கமுடியாது.

அன்னாவின் கோரிக்கை வெற்றிக்களிப்பை நோக்கி சென்றுக்கொண்டிருக்க.., தமிழர்கள் என்னும் வகையில், நமக்கு இன்னும் பேரறிவாளன் பிரச்சனை மிச்சமிருக்கிறது.

பெரும்பாலான பதிவர்கள் இந்த இரண்டு விஷயங்களை பற்றி, உறுதியான நிலைப்பாட்டுடன், கருத்து தெரிவிக்காமல் மௌனம் காப்பதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

பொதுவாக சாமானிய தமிழர்களிடம், மரண தண்டனை பற்றி குழப்பமான மனநிலையே இன்னும் இருக்கிறது.

பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை தடுக்கப்பட வேண்டும் என்று என்னும் "தமிழன்" என்னும் மனநிலை.., நாடு விட்டு நாடு வந்து, ஒரு பாவமும் அறியாத நம் கொன்று குவித்து,  மும்பை தாக்குதலில் ஈடுபட்ட கசாப்பை மன்னித்து விட்டு விட தயங்குகிறது. (இங்கே இந்தியன் என்னும் மனநிலை தடுக்கிறது)

நான் இந்தியனா, தமிழனா என்று கேள்வியோடு, அடையாளக்குழப்பம்  எழும்போதெல்லாம் , நான் தமிழன் என்று சொல்லவே உள்மனதிலிருந்து தீர்ப்பாகிறது. இது சரியா என்று தெரியவில்லை.

அப்சல் குரு மற்றும் கசாப் ஆகியோரை இணைத்து குழம்பிக்கொண்டிருந்த நானும் கூட, மரண தண்டனைக்கு எதிரான மனநிலைக்கு வந்து விட்டேன்.

மனிதம் என்ற கணக்கில் இனி தூக்கு தண்டனை என்பதே இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நிலைப்பாடு தான் சரி  எனத்தோன்றுகிறது. (என்னது ராஜபக்சே-வா? அது எந்த வகை ஜீவராசி என்று தெரியவில்லையே?)

தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள்,  சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்று போராட்ட களத்தில் குதித்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் போராட்டம் அடுத்தடுத்த நாள்களும் கட்டாயம் தொடரும் என்றே தெரிகிறது.

தமிழக முதல்வர் நினைத்தால், சட்டமன்றத்தில் இந்த மூவரின் மரண  தண்டனையை நிறுத்தி வைக்க முடியும் என்று வரலாற்று ஆதாரங்களையும், சட்ட விதிகளையும் சுட்டிக்காட்டி சன் டிவி.., ஜெயலலிதாவுக்கு "செக்" வைத்திருக்கிறது. இன்னும் எந்த விதமான சமிக்கையும் தமிழக அரசிடமிருந்து இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்கள் பிரச்சனை, தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை மீனவர்களால் தாக்கப்படுதல் அகிய தமிழர்நலன் சார்ந்த விஷயங்களில் உறுதியான நிலைப்பாடுகளை எடுத்த தமிழக முதல்வருக்கு, பேரறிவாளன் விஷயத்தில் ஏன் முடிவெடுக்க, அதிக தேவைப்படுகிறது என்று தெரியவில்லை.

உண்ணா ஹசாரேவின் போராட்டம் முடிவுற்ற நிலையில்,  பேரறிவாளன் மற்றும் மூவரை மரண தண்டனையிலிருந்து மீட்க, தமிழர்கள் தங்கள் முழுகவனத்தை செலுத்த வேண்டும் என்பதே எம் எதிர்பார்ப்பு.

மச்சீ... ஒரு குவாட்டர் சொல்லு.... நட்பு கற்பிழக்கட்டும்..இது கூத்தாடும் நேரம்...
வா கூத்தடிப்போம் என்று
கூவி அழைக்கும் நண்பா...

உன்னை பிடித்திருக்கும் அளவுக்கு
உன் அழைப்பு எனக்கு பிடித்திருக்கவில்லை
என்பதை ஏன் உணர மறுக்கிறாய்?

நான் ஒன்றும் புத்தன் இல்லை என்றாலும்,

ஒரே மணித்துளியில்
சித்தார்த்தனின் மரணமும்,
புத்தனின் பிறப்பும் நிகழ்ந்ததை
போல..,

ஒரே கணத்தில் மரணித்து,
அதே கணத்தில் புதிதாய் பிறந்தவன் நான்..
அதுவும் அதிக முறை.

ஒரு பக்கம் அன்பென்ற சிவத்தையும், 
மறு பக்கம் அது இல்லா சவத்தையும் 
தாய் தந்தையென
ஒரே வீட்டில்
பார்த்து பார்த்து வளர்ந்த
துயர சுகங்கள் 
போல
ஏராளம்
என்னுள் இருக்கிறது.

சின்னதொரு சந்தோஷம்
மூளைக்கு
சென்று சேரும் முன்
இதயம் கிழிபடும் 
கள்ளிக்காட்டு சருகு நான்..

பீட்ஸா, பர்கர், பீர் , ரம் என்று
"பார் இது தான் என் உலகம்" என
நீ காட்டும் உலகிற்கும்
எனக்கும் வெகுதூரம்..

எதுவும் தப்பில்லை என்ற
இன்றைய யுகத்தில்,

குடித்தால் மட்டுமே ஆண்பிள்ளை
என்றால்
நான் "அப்படியே" இருந்து விட்டு போகிறேன்...

ஆனால் நட்பென்பது
தன் "தீயப்பழக்கத்தின் 
நிழல்" கூட நண்பன் மீது விழாமல்
பார்த்து கொள்வதில் தான்
பூர்ணமடைகிறது
என்பதை உணர்ந்து கொள்...

டிஸ்கி:

தன்னை குடிக்க அழைத்த நண்பனை பற்றிய ஒரு பதிவினை படிக்க நேர்ந்தது. அதன் தாக்கமே இந்த பதிவு...

 Pokkiris என்னும் பதிவரின்...,  அந்த பதிவிலிருந்த வரிகள் உங்களுக்காக...

"ஆம்பளைனா குடிக்கனும்ல?" என்றான். அது அவனின் லாஜிக். அவனுக்கு தெரியுமா, நான் என் தாயை இழந்தது, இக்குடியினால், எனது இளமை பருவம் பெரும்பாலும் குடிக்கு எதிரான போராட்டத்தால் கழிந்தது என்றும், வாந்தியின் நாற்றத்தை வைத்து ஹாட்டா, ரம்மா, ஸ்காட்சா, பீரா என்று என்னால் சொல்லமுடியும் என்று (இதுவரை வைராக்கியத்தால் முகர்ந்துகூட பார்த்திராதவன்).


ஆம். எனது தந்தை ஒரு குடிகாரன். அவர் படித்த காலத்தில், எல்லையில் வெற்றி பெற்றுவிட்டு, நான் கணக்கில் 91/100 வாங்கியதால், தண்ணி அடித்துவிட்டு மப்பில் அடித்ததை என்னால் இன்றும் ஜீரணம் செய்யமுடியவில்லை. சாதாரண நிலையில் அடித்திருந்தால் ஒப்பு கொண்டிருப்பேன்.


வாழ்க்கையை வாழத்தெரியாமல், துணையை தொலைத்து இன்றளவில் அவர் படும் வேதனை, சொல்லில் அடங்காது. பளீரென ஒளிர்ந்த கண்ணாடி பாத்திரத்தை உடைத்த பெருமைக்கு சொந்தக்காரர். தன் மனைவியின் பிறந்தநாள் சத்தியத்தை மீறியவர். சத்தியத்தை மீறிய வேகத்தில் மனைவி உடலில் ஊற்றிய மண்ணென்னையை சட்டை செய்யவில்லை போதையில். கணவனை மிரட்ட நினைத்த பேதைக்கு தெரியவில்லை, கட்டுக்கடங்கா தீ விழுங்கிவிடும் என்று. ஒரு நொடி தாமதத்தில் அக்னி ஜுவாலை இரண்டு ஆள் மட்டத்திற்கு. பூனை வாயில் மாட்டிய எலி போல அவள், மெல்ல தீக்கிரையாகிறாள்.


நான் அவளை சந்தித்தது ஆஸ்பத்திரியில் 100% தீக்காயங்களுடன். எனது தாயை கண்டுபிடிக்க என்னால் இயலவில்லை. இதனை எழுதும்போது கண்களில் நீர் கோர்க்கிறது நண்பர்களே.
இரண்டு நாள் இருந்த உயிர், ஒரு நாள் அதிகாலையில் பிரிந்தது. அவள் இறப்பதற்கு முன் கூறியனவற்றில் முக்கியமானவை தந்தையை மன்னிக்க வேண்டும், இளவலை அடிக்கக்கூடாது. மிகவும் முக்கியமானது நான் பட்ட இத்துயரத்தை உனது மனைவிக்கு கொடுத்துவிடாதே, தயவுசெய்து குடித்துவிடாதே. குடி குடியை, மகிழ்ச்சியை, குடித்தனத்தை கெடுத்தது நண்பர்களே.


இப்போது கூறுங்கள் நான் குடித்து ஆண்மகனென்று நிரூபிக்க வேண்டுமா?விடுமுறையானால் குடிப்பதைப் பற்றி பெருமையடிக்கும் கீச்சர்களுக்கு, சக கீச்சரின் வாழ்வில் நிகழ்ந்த துயரம் என்ற வரிகளோடு.., இந்த பதிவினை பற்றிய இணைப்பினை நல்கிய
@  அவர்களுக்கு நன்றிகள்..

விஜயகாந்துக்கு இது தான் சத்திய சோதனைக்காலம்..ஜெயலலிதா, கருணாநிதிக்கு மாற்றாக விளங்ககூடியவர் என்று அடையாளம் காட்டக்கூடிய வகையில் தமிழகத் தலைவர்களில் மீதமிருப்பவர் என பெரும்பாலானவர்களின் ஈர்ப்பை பெற்றிருந்தார் விஜயகாந்த்.

கறுப்பு எம்.ஜி.ஆர்., என்று அடையாளம் காட்டிக்கொள்ளும் விஜயகாந்த், "நானே முதல்வர்" என்ற அறைக்கூவலுடன் அரசியலுக்கு வந்தார் என்றாலும் கூட, "நாற்பது சட்டமன்ற தொகுதிக்கான சீட்" என்ற தொகுதி உடன்பாட்டுக்குள் வந்தவுடன், "அட போங்கப்பா... மீண்டும் ஜெயலலிதா, கருணாநிதி தானா?" என்று நடுநிலை வாக்காளர்கள் சலிப்பு தட்டினார்கள்.

ஆளுங்கட்சிக்கு எதிராக செய்யும் அரசியல் நடத்தி, சீக்கிரம் கால் ஊன்றுதல், ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை தன் பக்கம் இழுத்தல் என்ற அரசியல் ஆரம்ப பாடத்தில் தேர்ச்சி பெற்று, தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அளவுக்கு உயர்ந்திருக்கும் விஜயகாந்துக்கு இனி வரும் தேர்தல்கள் நிச்சயம் சத்திய சோதனை தான்.

திமுக கூட்டணியில் இருந்து கொண்டே, கலைஞர் அரசுக்கு எதிராக அறிக்கை அரசியல் நடத்திய பாமகவின் மருத்துவர் பாணியில், அம்மாவிடம் கேப்டன் "உள்ளிருந்து எதிர்த்தல்" அரசியல் பண்ண முடியாது. 

சட்டமன்றத்தில் இவ்வளவு அசுர பலம் கிடைக்கும் என்பது ஜெயலலிதாவுக்கு முன்பே தெரிந்திருந்தால், விஜயகாந்துக்கு நாற்பது சீட்டுக்களை ஜெயலலிதா ஒதுக்கி இருக்கமாட்டார், ஏன் கூட்டணியில் கூட சேர்த்திருக்கமாட்டார். விஜயகாந்த் இத்தனை தொகுதியில் ஜெயித்ததை அம்மா, அவ்வளவாக ரசித்திருக்க மாட்டார் என்பது தான் உண்மை.

தேர்தலுக்கு முன்பே இப்படி என்றால், தேர்தலுக்கு பின்பு ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்வது விஜயகாந்துக்கு இப்போதைய சூழ்நிலையில் கஷ்டம் தான்.

இன்னும் ஆட்சிக்கு எதிராக அதிக அளவில் போராட்டங்களோ, முணுமுணுப்புகளோ, பெரிய அளவில் கிளம்பாத நிலையில்,
ஜெயலலிதாவை எதிர்த்தால், தேமுதிகாவுக்கு உள்ளாட்சி தேர்தலில் இதே அளவு அடையாளம் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

சமச்சீர் கல்வி விஷயத்தில் கம்யூனிஸ்டுகள் அரசுக்கு, எதிர்ப்பு காட்டிய போது, விஜயகாந்த் எதிர்க்க துணியவில்லை என்பது தான் உண்மை. குதிரை கிடைக்கும் வரை கழுதை என்று சப்பைக்கட்டு தான் கட்ட முடிந்தது.(இப்போது கழுதை தான் என்று முடிவாகிவிட்டபின், குதிரை தேடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை, அம்மா சொன்னால் கழுதை தான் இந்த கள்ளழகரின் குதிரை போல)

அதிமுக போலவே தேமுதிகவும் கிராமப்புறங்களில் அதிக வாக்கு வங்கியைக்கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். இது முக்கியமாக "கவர்ச்சியை அடிப்படியாகக் கொண்ட வாக்கு வங்கி". எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் என்ற பிம்பங்களுக்காக மட்டும் வாக்களிப்பவர்கள் இன்றும் அதிக அளவில் இருக்கிறார்கள்.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை, நடிகர்கள் மீதான கவர்ச்சியை அப்படியே, ஓட்டுக்களாக மாற்றும் வித்தை எம்.ஜி.ஆர், தவிர வேறு யார்க்கும் வாய்க்கவில்லை. விஜயகாந்துக்கு கட்சியை நடத்தும் அளவுக்கு அந்த கவர்ச்சி உதவியிருக்கிறது அவ்வளவே.

இலவசங்களை காட்டி இந்த ஓட்டு வங்கியை தன் பக்கம் திருப்ப திமுக போட்ட திட்டங்கள் அரசியல் சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால்.., சினிமாவை அடிப்படையாக கொண்ட, வெள்ளந்தி மனிதர்களின் வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்வதில் உண்மையில், ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் இடையே தான் போட்டி.

கிராமப்புறங்களில் தேமுதிக வேர் ஊன்றி விட்டால், தமிழக அரசியலில் விஜயகாந்த், தவிர்க்க இயலாத சக்தியாக மாறிவிடுவார் என்பது ஜெயலலிதா தெரியாமல் இல்லை.

ஆட்சியில் இருப்பதால், சலுகைகளை வழங்கி, கிராமபுற ஓட்டு வங்கியை தக்க வைத்துக்கொள்ளவே ஜெயலலிதா விரும்புவார் என்பதால், இந்த விஷயத்தில் விஜயகாந்துக்கு அவர் வழிவிடப்போவதில்லை.

டிஸ்கி:    
ஆட்சியாளர்களை ஆதரித்து அரசியல் நடத்தலாம் என்றால் அதற்கும் வழியில்லை. சரத்குமார், கிருஷ்ணசாமி, ஜாவஹிருல்லா என பெரும் கூட்டமே காத்துகொண்டிருக்கிறது. (உங்களுக்கு சந்தேகம் இருந்தால், ஏதேனும் ஒரு நாளின் சட்டமன்ற நிகழ்வை ஜெயா டிவியில் பாருங்களேன்)

விகடன் பாணியில் இது சிறப்பு வலைப்பாயுதே - கலக்கல் கலாய்ப்பு ட்விட்டுகளின் தொகுப்பு.

முஸ்கி:

இந்த வார வேட்டையில் சிக்கிய சிறந்த ட்விட்டுகளின் தொகுப்பு இது.
இதனில் சிறந்த ஒன்றினை தெரிவு செய்து, பின்னூட்டத்தில் தர முடியுமா உங்களால்...
 
தமிழகத்தில் 50 டுவீலர் வரிசையா ரோடு ஓரமா நின்னா அங்க ஒரு TASMAC இருக்குன்னு அர்த்தம்!! 

 
மனைவியின் ஐந்து மிஸ்டு கால்களை மொபைலில் பார்க்கும் தருணத்தை விட கலவரமான தருணம் வாழ்க்கையில் வர வாய்ப்பில்லை.!அப்படியே சரவண பவன்ஹோட்டலையும் ரெய்டு பண்ணுங்க சாமி # தோசை 90 ரூபா


 
பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? #லோக்பால் vs ஜன்லோக்பால்..,


 
முதலாளியை குறை கூறாத ஒரே தொழிலாளி பாரத பிரதமர் மட்டும்தான்.!
 
சுட்டால் பொன் சிவக்கும் என்பதற்கு துப்பாக்கியால் சுடுவதைப் போன்று ஆக்‌ஷன் செய்யும் எஸ்ஜே சூர்யாவை என்ன செய்யலாம் :-)


 
எமதர்மனுக்கு கருப்பு எருமையும், காமதேனுவுக்கு வெள்ளை பசுவும் கொடுத்திலிருந்தே ஆரம்பித்துவிட்டது நமது வெள்ளை மோகம்.

விஜய் டி.வி.ல எனக்கு உயிர் பயத்தைக் காட்டிட்டாங்க பரமா!ஆணிகள் குறைவாக இருந்ததால், நேற்று இரவு கொஞ்சம் முன்னதாகவே நேரத்திலேயே வீட்டிற்கு திரும்பி விட்டதால் தான் இப்படி ஒரு தலைப்பு வைக்கும் கொடுமை நடந்தது எனக்கு.. சீரீயல் நேரம் என்பதால், இந்தியாவின் தேசிய பொழுதுபோக்கான டிவி பார்த்தலில்;  வீட்டிலிருந்தவர்கள் ஏற்கனவே மூழ்கியிருந்தனர்.

ஏதோ ஒரு சீரியல். அதே டிரேட் மார்க் "டொம் டும் டொம்..." பின்ணணி இசையுடன், யாரையோ கவிழ்க்க திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர் இரு பெண்கள்.( ஏம்மா...பெண்ணுரிமைவாதிகளே.. இப்படி பெண்களே எப்போதும் மற்றவர்களை கவிழ்க்க திட்டம் போடுவதாகவே சீரியல்களில் காட்டுகிறார்களே... இதை கொஞ்சம் கண்டிக்கக்கூடாதா?)

பெரும் போரட்டத்திற்கு பிறகு ரிமோட் என் கைகளுக்கு வந்தது. வழக்கம் போல ரிமோட்டில் "டைப்" அடிக்க துவங்கினேன். வேகமாய் சேனல் மாற்றிக்கொண்டே வந்ததில், விஜய் டிவி வந்தது.

இளந்தொப்பையை மறைக்க வழக்கமாய் பெரியதொரு கோட் அணிந்து வரும் "நீயா நானா"  கோபிநாத், சின்னதாய் கறுப்புக்கோட் அணிந்து, சற்று பக்கவாட்டில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சி "நடந்தது என்ன? குற்றமும், பின்ணனியும்" என்றார்கள்.

ஓ... கோபிநாத் பெரிய கோட் போட்டிருந்தால் நீயா நானா.... கறுப்பு கோட் அணிந்திருந்தால் நடந்தது என்ன?  பைஜமா போட்டிருந்தால் சூப்பர் சிங்கர்ஸ்....

சரி விஷயத்திற்கு வருகிறேன்.., சில நாள்களுக்கு முன், சூரியனில் உண்டான காந்தபுயல், பூமியை தாக்கியதாம். அதன் காரணமாக ஏற்கனவே காந்தம் போன்று செயல்படும் பூமியின் காந்த விசைக்கோடுகள் பெருத்த மாற்றத்திற்கு உள்ளாகியதாம். இதையெல்லாம் கிராபிக்ஸ் காட்சிகளுடன் வேறு விளக்கினார்கள்.

அடுத்து சொன்ன விஷயம் தான் அதிர்ச்சியில் உறையவைத்து விட்டது. லண்டனில் ஏற்பட்ட கலவரத்துக்கும், அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவுக்கும் சூரியனில் ஏற்பட்ட காந்தப்புயலால்,  நமது பூமியில் ஏற்படுத்திய மாற்றங்கள் தான் காரணம் என்றார்கள்.

அதாவது காந்தப்புயலின் காரணமாக மனிதர்களின் மனநிலையில் தீவிர மாற்றங்கள் உண்டானது தான் காரணம் என்றார்கள்.

அவர்கள் சொன்னதை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை.

பூமி நெருக்கமான காந்த விசைக்கோடுகளுடன் ஒரு காந்தம் போன்று செயல்படுகிறது என்பது உண்மை தான். சூரியனில் காந்தப்புயல்கள் உண்டாகும் என்பதும் உண்டாகும் என்பது உண்மைதான்.

ஆனால் சூரிய காந்தப்புயல்கள், மனித மனங்களை மாற்றுமா என்பது சந்தேகத்திற்கு உரிய விஷயமாகவே தெரிகிறது. அறிவியலை பொறுத்த வரை எந்த விஷயத்தையும் ஆய்வின் மூலமாக நிருபித்தால் மட்டுமே ஒரு விஷயம் ஏற்றுக்கொள்ளப்படும். ஆய்வு விபரங்களையும் குறிப்பிடவில்லை.

பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில், மனித மனங்களில் மாற்றங்கள் ஏற்படுவது கூட, அறிவியலில் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏன் இப்படி மீடியாவை வைத்துக்கொண்டு  பீதியை கிளப்புகிறார்கள் என்று தெரியவில்லை.

தற்கொலைகள், நோய் தீவிரமடைதல், கொடூர விபத்துகள் ஏற்படுதல்  போன்றவை பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் அதிகம் நடப்பதாக தமிழகத்தில் பரவலாக நம்பப்படுகிறது. இத்தகைய நம்பிக்கைகளை அதிகப்படுத்துவதற்காகத்தான், தொலைக்காட்சிகள் நிஜம், குற்றம் நடந்தது என்ன போன்ற புலன் விசாரணை நிகழ்ச்சிகளை நடத்துவதாகவே தெரிகிறது.

2012-ல் உலகம் அழியப்போகிறது என்ற பீதி ஏற்கனவே கிளம்பி, குறுஞ்செய்திகள் மூலம் விஸ்ரூபம் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், சூரியனில் 2012-ல் ஏற்பட இருக்கும் காந்த சுனாமி, பூமியை தாக்கி அழிக்கப்போவதாக புதுசா லிங்க் கொடுத்திருக்கிறார்கள் விஜய் டிவி புண்ணியவான்கள்.
(இப்படித்தான் 2000-ல் உலகம் அழியப்போகிறது என்று கிளப்பினார்கள்...நான் கூட, ஒளிந்து கொள்ள பெரியதொரு அட்டைப்பெட்டியை தயார் நிலையில் வைத்திருந்தேன்..ம்ம்ம் ஒண்ணும் நடக்கவில்லை)


டிஸ்கி:


பிரபல விண்வெளி ஆய்வாளர் டாக்டர் ராஜ் பல்தேவ் Two Big Bangs Created the Universe என்ற தலைப்பில் கடந்த 2003ல் ஒரு நூலை வெளியிட்ட புத்தகத்திலிருந்து மேலும் சில தகவல்கள்:


சூரியனிலும் புயல், சோலார் சுனாமி ஏற்படும். இதனை coronal mass ejection என்பார்கள். கடந்த 2005-ம் ஆண்டு மற்றும் 2010-ம் ஆண்டு சூரிய புயல் ஏற்பட்டது. 


சூரிய புயலின் வெப்பம் பூமியை நோக்கி வரும் என்பது உண்மைதான்.ஆனால் பூமிக்கு மேல் இருக்கும் காற்று மண்டலம் உள்பட பல மண்டலங்களை தாண்டிதான் இந்த சூரிய புயல் பூமிக்கு வர வேண்டும். அத்தனை மண்டலங்களும் இந்த சூரிய புயல் வேகத்தின் தாக்கத்தை குறைத்து விடும். மேலும் பூமியை சுற்றி காந்த வளையம் உள்ளது. இந்த சக்தி வெப்பத்தை பூமிக்கு வரவிடாமல் தடுத்து விடும்.


பூமியின் காந்த வளையத்தை அது அடையும்போது வெப்பக் கதிர் வீச்சு புவி காந்தப் புயலாக (geomagnetic storm) மாறும்.


இதனால் செயற்கைக்கோள்கள் முற்றாக அழியக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. தகவல் தொடர்பு முற்றிலும் சீர்குலையும். அதாவது மின்ணனு சாதனங்கள் அனைத்தும் செயல் இழக்ககூடும்.

இறுதி வரி நெத்தியடி...இயற்கையே...
உன்னிடம் உள்ள சிறந்த மூங்கில் கொண்டு
என் மகளுக்கு இன்னிசை பாடு...
அவளின் கனவுகள் முடிவின்றி நீளட்டும்..

உச்சி வானத்து சூரியனே.,
இரவின் நிலவிடம் குளுமையை
கடன் வாங்கி.,
உன் வெப்பத்தின் வேகத்தை குறைத்துக்கொள்...
என் தேவதை கண் உறங்குகிறாள்..

என் இதயம் போல
வெண்மை காட்டி,
சிலிர்த்திடும் பறவைகளே
உங்கள் இறக்கைகளின் வேகங்களை
கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்..

என் இளவல் தூங்குகிறாள்.

இப்படியாய்...
இன்னுமாய்..
இயற்கையிடம் மட்டுமல்லாது
செயற்கை மனிதர்களிடமும்
என் குழந்தைக்காக வேண்டிக்கொள்ள

ஏ... இரக்கமற்ற இறைவா
எனக்கொரு குழந்தை வரம் கொடு...

கவிதையாக்கம்: 
க.ரேணுகா.

டிஸ்கி:
ரேணுகாவின் கவிதைக்கான பின்னூட்டம்; இந்த பதிவுக்கான  தலைப்பாகி விட்டதால், பின்னூட்டமாக கவிதைக்கான தலைப்பை தர முடியுமா உங்களால்..

டுபாக்கூர் அரசியல் செய்திகள் -இது கலாய்ப்பு சிறப்பிதழ். சிரிக்க மட்டும்..


டுபாக்கூர் டிவியின் "சிறப்பு சிரிப்பு செய்திகள்" வழங்கி வாசிப்பது வக்கீல் வண்டுஊஊ முருகன்...

தனிக்கோர்ட்டு நீதிபதிகளுக்கு ஜெயலலிதா புதிய சலுகை அறிவிப்பு:

தன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க மறுத்த பெங்களூர் தனிக்கோர்ட்டு நீதிபதிகள், சென்னை வந்து, தன் முன் நேரில் அஜராகி விசாரிக்க விரும்பினால் தான் முழு ஒத்துழைப்பு வழங்கப்போவதாக ஜெயலலிதா அறிவிப்பு.

கோத்தபய- மன்மோகன் ரகசிய சந்திப்பு:

ராஜபக்ஷே மற்றும் சோனியா ஆகியோர்க்கு புற்று நோய் என்று பரவிவரும், மருத்துவமனை செய்திகளால், அவர்களுக்கு "தமிழர் தர்மம் வெல்லும், மீனவர் சாபம் கொல்லும்" என்னும் பாடலை விடாது கறுப்பு இயக்கத்தினர் அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையில் கோத்தபய- மன்மோகன் நேற்று கோவாவில் ரகசியமாக சந்தித்து, திண்ணை காலியாக போகும் மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்ந்துள்ளதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

ராமதாஸ் அறிவிப்பால் பன்னாட்டு பொருளாதாரம் பாதிப்பு:

49 ஆண்டுகள் தமிழகத்தை சீரழித்த திராவிடக் கட்சிகளை ஒழிப்பது தான் நம் முதல் வேலை என மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறைக்கூவல் காரணமாக ஏற்பட்ட பயத்தால் , தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள், தம்முடைய கட்சியின் பெயரில் உள்ள திராவிட என்னும் வார்த்தையை "தார்" ஊற்றி அழிக்க முற்பட்டுள்ளதால், உலகச் சந்தையில் தார் விலை கிடுகிடுவென உயர்ந்தது. எதிரொலியாக பங்கு சந்தை, பத்தாயிரம் புள்ளிகள் உயர்ந்து, அழகிய "கோலமாக" மாறியது.

சச்சின்... சச்சின்...சச்சின்..

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சச்சின் நூறாவது நூறு அடிப்பார் என காத்திருந்து, காத்திருந்து, நூறு டிகிரி அளவுக்கு காய்ச்சல் கண்ட நூறு பேர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனுமதி.

ஸ்விஸ் வங்கி பணம் - கலைஞர் காட்டம்.

ஸ்விஸ் வங்கியில் தமக்கு கணக்கு இருப்பதாக செய்தித்தாள்களில்
வெளிவந்த செய்தியை கலைஞர் கடுமையாக சாடியுள்ளார். சொந்த பேங்கில் எனக்கு கணக்கு வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அழகிரி தனது குடும்பத்தாருடன் லண்டனுக்கு "எஸ்" ஆகலாம்
என்ற பீதியின் காரணமாகவே கலவரம் உண்டானது என்ற செய்தியும் ஆளும் அதிமுக அரசால் பரப்பபட்டதே - கலைஞர்

மண்ணுமோகனுக்கு தமிழக மக்களின் கேள்வி:

வெறும் ஒண்ணரை கோடி மக்களை கொண்டுள்ள இலங்கையின் வெத்து பய, ஏழரை கோடி மக்களின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிண்டலடித்திருப்பது மண்ணு மோகனின் , மத்திய அரசுக்கு ஏன் தீவிரமான விஷயமாக தோன்றவில்லை. இந்திய இறையாண்மை என்னும் ரோஷம் தமிழுணர்வாளர்களுக்கு எதிராக மட்டுமா?

ஹசாரேவும் பற்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

என்னைப்பொறுத்தவரையில் அன்னா ஹசாரேவும் ஊழல்வாதி
தான். ஆதலால் அவருக்கு காங்கிரசில் சேரும் எல்லா தகுதியும் வந்துவிட்டது. ஆகவே ஆண்ட வெள்ளையர்களை விரட்டிவிட்டு, ஆளும் கொள்ளையர்களாக இருக்கும் காங்கிரசுக்கு ஆதரவாக உண்ணும் விரதம் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அப்படி அவர் காங்கிரசில் இணைந்தால் தங்கபாலும், நானும் ஒற்றுமையாகி ஒரே கோஷ்டியாக, புதிய தமிழக காங்கிரஸ் தலைவரை எதிர்ப்போம்.

அண்மைச்செய்தி:

ஜெயலலிதாவின் சுதந்திர தின விழா உரை:

சமச்சீர் கல்வியை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வகையில், அரசுக்கு உண்டான அனைத்து செலவுகளையும், தனது கழக ரத்தத்தின் ரத்தங்கள் சார்பில் தானே அரசுக்கு வழங்க உள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். (சமூக நீதி காத்த வீராங்கனை பட்டத்தை மீண்டும் ஒரு முறை ஜெயலலிதாவுக்கு வழங்க, வீரமணியார் இந்த அறிவிப்பை பயன்படுத்திக்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது)

அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..


மீண்டும் வெடித்தது சமச்சீர்கல்வி பிரச்சனை: இப்பவே கண்ணைக்கட்டுதே..ஒரு வழியாக சமச்சீர் பாடத்திட்டத்தினால் உண்டான பிரச்சனையை உச்சநீதி மன்றம் வரை சென்று, தீர்த்துக்கொண்ட சமயத்தில், அடுத்ததாக தனியார் பள்ளிகளின் "பெயர்" காரணமாக மீண்டும் நீண்டதொரு விவாதம் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் மெட்ரிக் பாடத்திட்டத்தினை பின்பற்றும் தனியார் பள்ளிகளின் பெயரில் இருக்கும் "மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்" என்பதில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என்று மெட்ரிக் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சமமான பாடத்திட்டம் கொண்டு வரப்பட்ட பின் அனைத்து பள்ளிகளும் சமம் என்ற நிலையை உறுதிப்படுத்த, தனியார்களால் நடத்தப்படும் பள்ளிகளின் பெயரில் இருந்து, மெட்ரிக் என்னும் வார்த்தையை நீக்க வேண்டும், மெட்ரிக் என்றொரு பாடத்திட்டமே இல்லாத நிலையில் ஏன் பெயரில் "மெட்ரிக்" என்பது நீடிக்க வேண்டும் என்பது சமச்சீர் கல்வியாளர்களின் கருத்து.

மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் என்னும் பெயரை, பெயரளவில் வைத்துக்கொண்டு அதன் மூலம் மீண்டும் கட்டணக்கொள்ளையில் தனியார் பள்ளி முதலாளிகள் ஈடுபடுவார்கள் என்பது அவர்களின் வாதம்.

இந்த விஷயத்தில் தமிழக அரசால் தாங்கள் கட்டாயப்படுத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு போட இருப்பதாக தற்போது தனியார் பள்ளிகள் முடிவெடுத்துள்ளன.

உண்மையில் சமச்சீர் கல்வி குறித்த முனைவர்.திரு.முத்துக்குமரனின் பரிந்துரைகள் மொத்தம் 109. அதில் ஒன்றுதான் பொதுப்பாடத்திட்டம். தற்போது சமச்சீர் பாடத்திட்டம் என்ற ஒன்று மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்கே அரசியல் சாயம் பூசப்பட்டதால் நீண்ட இழுபறியாகிவிட்ட்து.

அடுத்தடுத்த கட்டத்திற்கு இன்னும் ஏராளமான சிக்கல்கள் உண்டாகும் என்பதற்கான அறிகுறியே இப்போதைய பெயர் மாற்ற பிரச்சனை. இதற்கும் தெளிவான முடிவு செய்யப்பட்டால் தான் உண்மையில் சமச்சீர் கல்வி வந்ததாக அர்த்தம்.

மெட்ரிக் என்னும் வார்த்தையை இதுவரை பயன்படுத்தியதே தவறு என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். ஏனெனில் மெட்ரிக் என்னும் வார்த்தைக்கு மேற்படிப்புக்கு தகுதி பெறுவதற்கான நுழைவுத்தேர்வு என்பது தான் உண்மையான அர்த்தம். ஆனால் இப்போது நுழைவுத்தேர்வு என்ற வகையில், மாநில பாடத்திட்டத்தின் ஆண்டு இறுதித்தேர்வு மட்டுமே கணக்கில் கொள்ளப்படுவதால் ஏதற்காக அந்த பெயரை வைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு தரப்பினர் முன் வைக்கும் வாதம்.

பெயரில் என்ன இருக்கிறது என்று விட்டுவிட்டால், பள்ளிக்கல்வியில் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் இன்னும் அதிகரித்து , அவர்களின் கல்வி வியாபாரம் கொடி கட்டி பறக்கவே செய்யும் என்ற வாதத்தினையும் புறம் தள்ளிவிட முடியாது. ஏனெனில் கடந்த பத்து,பதினைந்து ஆண்டுகளில் தனியார் பள்ளிகள் அடைந்த "அசுர வளர்ச்சி" மிக அதிகம். (பள்ளிக்கட்டணம் அதிகரித்த அளவும் மிக அதிகம்)

இப்போது கூட சமச்சீர் கல்விக்கான ஆங்கில வழி பாடபுத்தகங்களை தனியார் பதிப்பகங்களின் மூலம் பெறப்போவதாகவும், தமிழ் வழி பாடப்புத்தகங்களை மட்டும் தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளன.

பாடத்திட்டம், கல்வி அமைப்பு, கட்டட வசதி, ஆசிரியர்கள் எண்ணிக்கை, மாணவர்களுக்கான ஆய்வக வசதிகள் என எல்லா வகையிலும் சமச்சீர் நிலை வந்தால் மட்டுமே உண்மையில் சமச்சீர் கல்வியை தமிழகம் அடைந்ததாக அர்த்தம். இல்லையெனில் அது வெறும் சமரச கல்வித்திட்டமாக மட்டுமே இருக்கும்.

எது எப்படியாலும், இந்த முறை எழுந்துள்ள பெயர் பிரச்சனையால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவது இல்லை என்பது கொஞ்சம் ஆறுதல் அளிக்கப்படக்கூடிய விஷயமாகும்.

அரசியல் மங்காத்தாவில் உயிர்த்தெழுகிறதா திமுக? - அசால்ட்டு ஆறுமுகத்தின் அதிரடி அலசல்.கட்சி ஆரம்பித்த பிறகு இப்படியொரு தோல்வியை சந்தித்ததில்லை என்ற அளவு சென்ற சட்டமன்ற தேர்தலில் மரணஅடி வாங்கிய திமுக இப்போது கொஞ்சம் ஐ.சி.யூ.விலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படும் வகையில்; சமச்சீர் கல்வி பற்றிய உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தெம்பாகியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பரபரக்கின்றன.

"இது யாருக்கும் வெற்றி தோல்வி அல்ல" என்று கலைஞர் சொல்லிக்கொண்டாலும், உச்சநீதிமன்ற தீர்ப்பு திமுகவின் வெற்றி என்று நிரூபிக்கும் முயற்சியில், திமுக தொண்டர்கள் இறங்கியதை மறுக்க முடியாது. பட்டாசு வெடித்து, லட்டு கொடுத்து, சமச்சீர் கல்வி தீர்ப்புக்கு "கறுப்பு வெள்ளை சாயம்" பூசும் முயற்சி தமிழகமெங்கும் நடந்தது.

கலைஞர் டிவியும் பொதுமக்கள் உற்சாகம், தமிழகமெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் என்று செய்திகளில் "கொண்டாடி" உற்சாகமானது.

பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்த திமுகவுக்கு, செயற்கை சுவாசமளித்த புண்ணியம் ஜெயலலிதாவுக்கே.

சமச்சீர் கல்வி விவகாரத்தை தவிர்த்து விட்டு, திமுக எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஸ்டாலினின் நடவடிக்கைகளை வைத்தே அளந்து விடலாம்.

தேர்தலின் போது ஊர் ஊராக சென்று, சென்று பிரச்சாரம் செய்த ஸ்டாலினுக்கு அந்த களைப்பு தீரும் முன் அடுத்த தொடர்பயணம் செல்ல வேண்டிய சூழல்.

கோவை சென்று வீரபாண்டி ஆறுமுகம், ப.ரங்கநாதன் மற்றும் ஜெ.அன்பழகன் ஆகியோரை பார்த்து விட்டு, பாளையங்கோட்டை வழியாக, தற்போது திருச்சியில் அவரின் முதல் கட்ட "ஊர் சுற்றலாம் வாங்க" நிகழ்ச்சி முடிவடைந்திருக்கிறது.

அடுத்தாக திஹார் செல்லக்கூடும். அவரின் இரண்டாம் கட்ட பயணத்தை ஜெயலலிதா தான் முடிவு செய்ய வேண்டும். (அடுத்த கைது யார் என்பதை அவர் தானே முடிவு செய்ய வேண்டும்)
அண்மைச்செய்திகளின் படி, அடுத்ததாக தூத்துக்குடி செல்ல நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாலினின் இந்த தொடர் ஓட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது அண்ணன் அழகிரி தான். அவர் வீரபாண்டி ஆறுமுகத்தை பார்த்து, சிறையில் பார்த்து விட்டு வந்த பின்னர் தான், ஸ்டாலினும் கியர் மாற்றி கிளம்ப தயாரானார் என்பது ஊரறிந்த பெரிய குடும்பத்து ரகசியம்.

இக்கட்டான இந்த சூழ்நிலையில், திமுகவுக்கு கொஞ்சம் உதவிய சமச்சீர் ஆயுதமும் உச்சநீதி மன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்து விட்டது.

திமுக-வின் ஒரே பிரம்மாஸ்திரமாக இருந்த சமச்சீர் கல்வி என்னும் ஆயுதம் இப்போது காலாவதியாகி விட்டது என்பது தான் உண்மை.

திமுக-வின் அடுத்த போராட்டம் என்பது சிறை நிரப்பும் போராட்டம் தான். அதனை கிட்டத்தட்ட ஜெயலலிதாவே தற்போது நடத்திக்கொண்டிருக்கிறார்.

கட்சியினர் மீதான அடக்குமுறைக்கு எதிராக போராடுகிறோம் என்று கிளம்பினால், நிச்சயம் அதற்கு மக்கள் ஆதரவு கிடைக்காது என்பது தான் எதார்த்தம்.

 "ஆட்சியில் இருக்கும் போது பதவி சுகத்தை அனுபவித்தார்கள், இப்போது சிறைச்சாலை சோகத்தை அனுபவிக்கட்டுமே.... வினை விதைத்தவர்கள்; வினையை அறுக்கிறார்கள்... இதில் பரிதாபப்பட இருக்கிறது" என்ற மனநிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள்.

மக்கள் பிரச்சனைக்காக போராடலாம் என்றால், தற்போது மக்களுடைய பிரச்சனைகளாக இருக்கும் விலைவாசி உயர்வு, ஊழல், இலங்கை பிரச்சனை, மீனவர் பிரச்சனை என்ற எதற்கும் திமுக முன் நிற்க முடியாது. இந்த பிரச்சனைகளின் காரணமாகத்தான் திமுகவுக்கு ஓய்வு கொடுத்து, முக்காடு போட்டனர் மக்கள்.

ஆட்சியில் இல்லாதபோது கட்சியை நடத்தி செல்வது என்பது தான், ஒரு தலைவனுக்கு சவாலான விஷயம். ஆட்சியில் இருந்தால் கூட அதிருப்தி ஆட்களுக்கு, வாரியத்தலைவர் பதவியாவது கொடுத்து, வாரியணைத்து போகலாம். இப்போது என்ன செய்ய முடியும்?

மொத்ததில் அரசியல் மங்காத்தாவில், இனி திமுகவின் அடுத்த கட்டம் என்பது ஜெயலலிதா செய்யப்போகும், தவறான ஆட்டத்தை மட்டுமே நம்பியிருக்கிறது.

அரசியல் வித்தகர், நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையை, பல்வேறு விதமான பிரச்சனைகளை தாண்டி வந்தவர் என்ற பின்புலங்களை கொண்ட கலைஞர், தற்போது ஜெயலிலிதாவின் அடுத்த தவறுக்காக காத்திருந்து தான் அரசியல நடத்த வேண்டும் என்ற நிலையில் இருப்பது அந்த மூத்த அரசியல்வாதிக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டமே.

அம்மா, சும்மா இருப்பாரா இல்லை அய்யாவுக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அன்புடன்
அசால்ட்டு ஆறுமுகம் (அரசியல் பிரிவு)
படங்கள் :விகடன் 

ஞானம் பிறந்த கதை - கவிதையாகிய போது...


கடவுளைத் தேடித் தேடி 
தேய்ந்து போனது
கால்கள்.


காண முடியாமல்
காய்ந்து போயின 
கண்கள்.


இறுதியில் இமைகளை
மூடிக்கொண்டு 
தேடினேன்.


ஞானம் பிறந்தது....


பத்து மாதங்களாய் 
கருவறையில்
காத்து
பெற்று 
வளர்த்த 
தாயே கடவுள்!கவிதையாக்கம்:
ம.புவனேஸ்வரி
பதினொன்றாம் வகுப்பு மாணவிவிளம்பரம்:
நாளை சூடான அரசியல் அலசல் 
விகடன் பார்வைக்காக சில கலக்கல் கலாய்ப்பு டிவிட்டுகள். இந்த வார தெரிவுகள்...

 
 

சிறிய கரித்துண்டால் ஒருவருடைய மானத்தை தீர்மானித்துவிடுகிறோம்.

பிச்சைக்காரர்கள் ஒரு ரூபாய்க்கு கம்மியாய் வாங்குவதில்லை. போலீஸ்காரர்கள் நூறு ரூபாய்க்கு கம்மியாய் வாங்குவதில்லை.
 
 
விக்ரம் நன்றாக நடிப்பார். அஜித் நன்றாக நடப்பார். விஜய் நன்றாக பறப்பார்.
@pokkiris  Is this true? If so, Explosive information!!!!

டிஸ்கி:
இந்த வாரம் எமது கண்ணில் பட்ட ட்விட்டுகளில், சிறப்பான சில மட்டும் இங்கே. 
இவற்றில் மிக சிறந்த ஒன்றை தெரிவு செய்து, பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
இந்த பட்டியலில் விடுபட்ட சிறந்த ட்விட்டுகள் ஏதேனும் இருந்தாலும்
உங்கள் பரிந்துரையாக சொல்லலாம்.

குறைந்த பட்சம் அதர்மமாவது, அதர்மத்தை அழிக்கட்டும்.முன்பொரு முறை ராஜபக்சேவுக்கு புற்றுநோய் என்று தகவல்கள் வந்த போது, கொஞ்சமாய் சந்தோஷம் பரவியது   என் உள்மனதில்.

அடுத்தவன் மரணிக்க நினைக்கும் நீயெல்லாம் மனுசனா, மிருகமா என்று நீங்கள் நினைக்கூடும்.

ஒருவனின் மரணத்தை நினைத்த, எதிர்பார்த்த நான் மிருகம் என்றால், ஒரு இனத்தை மரணிக்க வைத்த அவனை என்னென்று சொல்வீர்கள்.

நானும் மனுசன், ராஜபக்சேவும் மனிதன் என்று, ஒரே தட்டில் எங்கள் இருவரையும் நிறுத்தப்படுவதாக இருத்தால், மனிதம் என்ற போர்வையே வேண்டாம் எனக்கு. எனக்கு மட்டுமல்ல இன்னும் பல சாமானியனுக்கும் இந்த எண்ணம் இருக்கும் என்று நம்புகிறேன்.

ராஜபக்சேவுக்கு புற்று நோய் என்றவுடன் கிளம்பிய சின்னதொரு சந்தோஷம் மீண்டும் உருவெடுத்து இருக்கிறது எனக்குள் இப்போது.

தான் விதவையானதால், தமிழ் இனத்தை சார்ந்த பல பெண்களை விதவையாக காரணமாக இருந்த, அன்னை இப்போது ஆஸ்பத்திரியில்.

சத்தம் இல்லாமல் அமெரிக்காவில் சிகிச்சையாம். ஆனால் நிச்சயம் வலித்திருக்கும் தானே?

வலிக்கும் போது என் இன பச்சினம்குழந்தைகள் கூட அனுபவித்த ரணவலி, அந்த "அன்னைக்கும்(???)" உண்டாகியிருந்தால், தெய்வம் என்பது இருக்கிறது என்னும் என் நம்பிக்கை இன்னும் உறுதிப்படும்.

தர்மம், நியாயம் என்று முறைப்படி வாழ்ந்துவிட்டு, இன்று நேசம் தொலைத்து, தேசம் மறந்து, கனவுகள் களைந்து, 1000 ரூபாய் தர்மம்  வாங்கி பிழைக்கும் வண்ணம், வாழ்க்கையின் கசப்புக்களை  நிதம் நிதம் விழுங்கிக்கொண்டிருக்கும் என் இனத்தை நினைக்கும் போதெல்லாம்,

அதர்மத்தை, தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நம்பிக்கை இப்போதெல்லாம் இற்றுப்போய் விட்டது எனக்குள்.

குறைந்த பட்சம் அதர்மமாவது, அதர்மத்தை அழிக்கட்டும்.

இன்னொரு உயிரைக்கொன்று புசிப்பவன் அரக்கன் என்றால்,
என் இனத்தை அழித்து புசித்த, அந்த அரக்கத்தனம் மிக்கவர்களுக்கு வாழ்வில், இறக்கும் போதாவது புரியட்டும் எம்மக்கள் அனுபவித்த கொடுமை எத்தகையது என்று.
 படங்கள்
http://dreambigalwaysss.blogspot.com/2009_05_01_archive.htmlவாக்களிக்க மட்டுமே தெரிந்த இன்னுமொரு வாயில்லா பூச்சியின் வார்த்தைகளாய், என் வார்த்தைகள் கோர்வையில்லாது தடுமாறுவது, எனக்கே கூட நன்றாக தெரிகிறது எனினும் என் உணர்வுகள், உங்களுக்கு புரியுமென்று நம்புகிறேன்.

நட்பில் நம்பிக்கை இருக்கிறதா உங்களுக்கு..எனக்கு இல்லை..உங்களுக்கு நட்பு என்பதில் நம்பிக்கை இருக்கிறது எனில் மிக்க மகிழ்ச்சி.உலகத்தில் இருக்கும் எல்லா உறவுகளை விட சிறந்த உறவு நட்பு தான் என்பது இங்குள்ள பலரின் வாதமும் கூட. நானும் கூட முந்தைய பள்ளி, கல்லூரி நாட்களில் நட்பினை புகழ்ந்து ஏராளமான கவிதைகளும் எழுதி, நட்பு வட்டத்துக்கு பரிசளித்த காலமும் உண்டு.

ஒன்றாகி சந்தோஷித்து, கவலையுற்று, ஒன்றாய் உண்டு உறங்கிய காலமும் உண்டு.

ஆயிரம் நண்பர்களை கொண்ட நட்பு வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று "லட்சியத்தோடு" நடைப்போட்ட நாட்களும் உண்டு.

ஆனால் சமீப காலமாய், நட்பின் மீதான நம்பிக்கை சற்று இற்றுக்கொண்டே வருகிறது. ஆயிரம் எண்ணிக்கை வரை எதிர்பார்த்த நண்பர்கள் புத்தகத்தில், பல பக்கங்களை பணம் கிழித்து விசி விட்டது, சில பக்கங்களை காலம் கலைத்து போட்டு விட்டது.

"தனித்து நின்றால், அதிரடியாய் வரும் புயல் காற்றில் தாக்குபிடிக்க முடியாமல் போய்விடுவதால், தற்காப்புக்காக, பயத்தின் காரணமாக கைக்கோர்த்து இணைந்து நிற்கிறோம். "தனி மரம் தோப்பாகாது" என்று வசனம் பேசுகிறோம்"  என்றொரு பாலகுமாரனின் ஏதோ ஒரு கதாபாத்திரத்தை போலவே என்னுடைய இன்றைய மனநிலை இருக்கிறது.

உங்களுடைய தந்தையின் வயதில் இருக்கும் ஒருவரை ஆராய்ந்து பாருங்கள். அவருக்கு எத்தனை நண்பர்கள் இருக்கக்கூடும் இத்தனை வருடம் வாழ்ந்து விட்டபின்?

நான் வாழ்ந்தது கொஞ்சமே என்ற போதும், உண்மை நண்பர்களை விரல் விட்டு எண்ணும் போது, வலது கையில் கூட, இன்னும் சில விரல்கள் மிச்சமிருக்கிறது எனக்கு.

பணத்தின் பின் ஓடும் இன்றைய வாழ்க்கையில் அதுவும் கூட இன்னும் குறைந்து விடுமோ என்று கவலையாய் இருக்கிறது. அவரவர் கவலைகளையும் , அவரவர் சந்தோஷங்களையும் சின்னதொரு வாழ்க்கை வட்டத்தை அமைத்து, அதற்குள்ளாகவே "உழல" ஆரம்பித்து விட்டோமோ என்று தோணுகிறது.

இரண்டு வருடம் நட்பாய் இருந்த ஒருவரை ஏதேச்சையாய் சந்திக்கும் போது கூட, அரை மணி நேரத்திற்கு அதிகமாய் பேசுவதற்கு விஷயம் இல்லாமல் வாழ்க்கை ஓட்டத்தோடு ஓட வேண்டியதாய் இருப்பது வரமா சாபமா?

நட்பு என்பது வெறுமனே கடந்த காலத்திற்கான அவயமா?

நிகழ்கால பரபரப்பில் கடந்த காலத்தை தொலைத்துவிட்டது தான் நம் சாதனையா?

பள்ளி, கல்லூரி, பணி புரியும் இடம் என்று இடம் சார்ந்து, இப்போதைய காலம் சார்ந்து  நம்முடைய நட்பு வட்டாரம் இருக்கிறதே, ஏன் இடம், தாண்டி காலம் தாண்டி, நட்பால் நிலைக்க இயலுவதில்லை???

காசு இருந்தே போதும், மகிழ்ச்சி இருந்த போது இணைந்திருக்கும் நட்பு,
சாகும் வரை நீடிக்காமல்; துன்பத்தின் போது, தலைமறைவாகி சாகும் வரம் வாங்கிக்கொள்வது இன்றைய நவநாகரீக பாஸ்ட் புட் வாழ்க்கையின் மிச்சமா?

"நட்பின் மேல் நம்பிக்கை இல்லை" என்னும் பில்லா பாடல் வரிகள் இனி தேசிய கீதமாகி விடுமோ என்ற எண்ணம் வந்து விட்டது இப்போது.

இது தவறான சிந்தனை என்று நீங்கள் சொன்னால், உங்களுடைய வார்த்தைகளையும் செவிமடுக்க நானும் தயாராகவே இருக்கிறேன்.

வெறுமனே வாரத்திற்கு ஒரு முறை கூடி, உற்சாக பனம் அருந்தி மகிழ்வதும், குறுஞ்செய்திகள் மூலம் நட்புக்கான வார்த்தைகளை பரிமாறிக்கொள்வது தான் நட்புக்கான அடையாளம் எனில் நான் இப்படியே இருந்து விட்டு போகிறேன். விட்டு விடுங்கள் என்னை.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்