வீட்டில் வேலையே செய்யாமல் தப்பிப்பது எப்படி? - செங்கோவிஆபீஸ்லதான் நச்சு நச்சுன்னு உயிர வாங்குறானுங்கன்னா, வீட்டுக்கு வந்தா சப்பாத்தி சுடு, வெங்காய்த்த வெட்டு, பாத்திரம் கழுவு, டாய்லெட்ட கழுவுன்னு பெரிய கொடுமையா இருக்குன்னு நம்ம ஒருத்தர் கண்ணுல தண்ணி வெச்சிட்டார்....  அவருக்கு சிலபல ஐடியாக்கள் கொடுத்து இப்போ அவர கொஞ்சம் தெம்பா நடமாட விட்டிருக்கோம். அதே மாதிரி நாட்ல பல பேர் இருக்காங்க, அதுனால அவங்களுக்கும் பயன்படனும்னு சொல்லி அத ஒரு பதிவா போடுங்கன்னு அவர் கால்ல விழுந்து கெஞ்சுனதால இப்போ இந்த பதிவு.

1. வீட்டுக்கு ஆபீஸ்ல இருந்து போகும் போது எல்லாம் கைல ஏதாச்சும் ஆபீஸ் டாகுமெண்ட்ஸ் எடுத்து வெச்சுக்குங்க. அதுக்காக முக்கியமான டாகுமெண்ட எடுத்துட்டு போயி அதுல ரசம் கொட்டி டேமேஜர்கிட்ட வாங்கிக்கட்டிக்க வேணாம். ஏதாச்சும் கிழிச்சிப்போட வேண்டிய பேப்பர்ஸ் இருந்தா அத எடுத்துட்டு போனா போதும்.  வீட்டுக்கு வந்த உடனே அந்த பேப்பர்களை போட்டு சும்மா பொரட்டிக்கிட்டு இருங்க. அத பார்த்தாவே போதும், வீட்டம்மா உங்க பக்கத்துல கூட வரமாட்டாங்க.

2. வீட்டுக்கு போன உடனே கம்ப்யூட்டர்ல போய் உக்காந்துடுங்க. ரெண்டு எக்செல், ரெண்டு வொர்டு ஃபைல் ஓப்பன் பண்ணிவெச்சிட்டு நீங்கபாட்டுக்கு ஃபேஸ்புக், ப்ளாக்னு மேயலாம். ஆனா என்ன வீட்டம்மா பக்கத்துல வரும் போது மூஞ்சிய கொஞ்சம் சீரியசா வெச்சிகிட்டு  வொர்டு/ எக்செல் ஃபைலுக்கு போய் எதையாவது நோண்டனும்....... பட் மூஞ்சில பதட்டமே தெரியப்படாது பீ கேர்ஃபுல்...........

3. அப்புறம் இருக்கவே இருக்கு போன். மொபைல எடுத்து ஏதாச்சும் ஆபீஸ் நம்பருக்கு டயல் பண்ணி, ரிங் போகமுன்னாடி கட் பண்ணிடுங்க. அப்புறம் காதுல வெச்சி படு சீரியசா, எஸ் சார், ஓகே சார், நைட்டே முடிச்சிடுறேன் சார் அப்படின்னு வெரப்பா பேசுங்க (பீ கேர்புல், போன் சைலண்ட் மோடுல இருக்கனும்). அதுக்கப்புறம் வீட்டம்மாவே உங்க டேபிளுக்கு வந்து சாப்பாடு ஊட்டிவிடவும் வாய்ப்பு இருக்கு. பட் இத அடிக்கடி யூஸ் பண்ணா சந்தேகம் வந்துடும், மாட்டிக்கிட்டா எல்லா வழிகளும் அடைபட்டிரும்...அப்புறம் காலம்பூரா கைல கரிச்சட்டியும் பினாயிலும்தான்....

4. நீங்க ஒரேடியா டேபிள்லயே உக்காந்திருந்தாலும் மாட்டிப்பீங்க. அதுனால கொஞ்ச நேரத்துக்கு ஒருவாட்டி எந்திரிச்சி உலாத்தனும். மூஞ்சிய கொஞ்சம் சீரியசா வெச்சிட்டு காத்துலயே கணக்கு போடனும். அப்பப்போ வீட்டம்மா கிட்ட ஏதாச்சும் கேட்கனும், இன்னிக்கு என்ன கிழமை..... போனமாசம் 5-ம் தேதி எங்க போனோம் அப்படின்னு டக் டக்குனு கேட்கனும்.... பதில் சொல்ல முன்னாடி ஓகே ஓகேன்னு சொல்லிட்டு மறுக்கா போய் கம்ப்யூட்டர்ல/ஆபீஸ் டாகுமெண்ட்ஸ்ல உக்காந்துடனும். அப்புறம் ரொம்ப டயர்டாகிட்ட மாதிரி அப்பப்போ கொட்டாவி விடுறதும் நல்லது. இதுக்கு  டீ, காபி, ஸ்னாக்ஸ்னு நல்ல பலனும் கிடைக்க வாய்ப்பிருக்கு.

5. இன்னொரு முக்கியமான விஷயம், நீங்க ஆபீஸ்ல இருந்து கொண்டு வந்த பேப்பர்சை அடுத்த நாள் காலைல எடுத்துட்டு போகனும். மறந்தீங்கன்னா தொலஞ்சீங்க. மேட்டர் ஓவர். சும்மா சோம்பேறித்தனமா அதே பேப்பர்களை திரும்ப திரும்ப கொண்டு வரக்கூடாது. கண்டுபுடிச்சிடுவாங்க. வெறும் பேப்பர்களுக்கு பதிலா ஃபைலா கொண்டுவரலாம், பட் ஆபீஸ்ல மாட்டிக்காம கொண்டுவரனும். இல்லேன்னா அப்புறம் நெலமை ரெண்டுபக்கமும் இடிவாங்குற மத்தளமாகிடும்.

6. கடைசியா ரொம்ப ரொம்ப முக்கியமான பாய்ண்ட். இந்தப் பதிவ உங்க வீட்டம்மா படிச்சிடாம இருக்கனும். படிச்சிட்டாங்கன்னா அப்புறம் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.
-செங்கோவி

தேர்ந்தெடுக்கப்பட்ட அசத்தல் கவிதைகள் 1 - மினிமீன்ஸ் ர

கடவுளைத் தேடி ...
 -மீரா.

"இருக்கிறார் கடவுள்

இல்லை கடவுள்?"

வாதம் பிறந்தது;

மோதல் வளர்ந்தது.


இப்போது

இல்லை ஒருவர் இங்கே

இருக்கிறார் ஒருவர்

தலைமறை வாக!


போத்தனூர்க் காவலர்

புலனாய் கின்றார்!

..........


புரியாத வார்த்தைகள்...
-துறையூர் மணி

ஊர் சுத்தலாம் வாங்க -பாரத் பாரதி

யாராவது ராகுல் ஜி யின் "ஊர் சுற்றிப்புராணம்" படிச்சியிருக்கீங்களா?

அது மாதிரி ஒரு பயணக்கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்து தான், எஸ்.ராமகிருஷ்ணன் "துணையெழுத்து" எழுதியதாகச் சொல்லுவார். மாற்றம் வேண்டும் என்பதற்காக , ஊர்சுத்திய அனுபவம் மட்டும் எழுதாமல், அங்க சந்தித்த "மாறுபட்ட மனிதர்களை" பற்றி எழுதியதாக சொல்லுவார்.

பயணம் என்பது எதை நோக்கியது?
ஊர் ஊராக நகர்வதா?
இல்லை மாறுபட்ட மனிதர்களை சந்திப்பதா?

எப்படியாயினும் எனக்கு தனித்திருப்பது எவ்வாறு  மிக பிடிக்குமோ , அப்படியே பயணிப்பதும் மிக விருப்பம்.

தனியொருவனாய், கட்டுப்பாடு ஏதும் இன்றி ,நாடோடியாய், தேசாந்திரியாய் சுற்றித்திரிய வேண்டும் என்பது இளமையின் தொடக்கத்தில் இருந்த பேராசை.இனி அதற்கு வாய்ப்பில்லை என நெற்றியில் அடித்து சொல்கிறது எதார்த்தம்.

உண்மையில் பயணித்துக்கொண்டே இருப்பவனுக்கு வீடு சிறை. நண்பர்களின் வீடுகளில் தங்கி, தங்கி மூன்று மாதம் கழித்து, வீடு திரும்பல் நடந்தது ஒரு  பொற்காலத்தில்,

தங்கும் வசதி, உணவு, உடை இதெல்லாம் ஒரு பொருட்டாய் தெரிந்ததில்லை அப்போது.

இருப்பதை வைத்து இயல்பாய் நகர்ந்து விட முடிந்தது அப்பொழுதெல்லாம்.

இப்பொழுது கூட ஒரு பயணத்தில் தான் இருக்கிறேன்.

 வாழ்க்கைத்துணை அமைவதை விட அதிக அதிர்ஷடம் தேவைப்படுகிறது பயணத்தின் போதான வழித்துணை அமைவதற்கு.

"யார் வந்து உட்காரப்போறங்க" அப்படிங்கிறது தான் சில பயணங்களின் ஆரம்ப த்ரில்.

பொருத்தம் இல்லைனா அவங்க மனநிலைக்கு ஏத்தமாதிரி , நம்மையும் தகவமைச்சுகிட வேண்டியது தான். சில சமயம் நம்ம அலைவரிசையில் இருப்பவர்களும் கிடைப்பாங்க. சட்டென்று வளவள குறைத்து கேட்க ஆரம்பித்துவிடுவேன் எனக்கு கேட்டுக்கொள்ளுதல் ரொம்ப பிடிக்கும். "கொளுத்தி போட்டு'' விட்டு , கேட்க தயாராய் உட்கார்ந்துக்கொள்ள வேண்டியது.

சில சமயம் பேசவே பிடிக்காது. அப்புறம் என்ன, தூங்கற மாதிரி நடிக்க வேண்டியது தான்.

பகல் நேர பயணத்துக்கும், இரவு நேர பயணத்துக்கும் வேறுபட்ட முகங்கள்.

"என்ன ஊர் இது" என தெரிந்து கொள்ளுவதற்காக , ஒவ்வொரு நிறுத்தத்திலும் மெர்குரி வெளிச்சதில் கடைகளின் பெயர் பலகையினை விடிய விடிய விழித்திருந்து பார்ப்பது, தேடலின் ரசனையான புதுவகை.

பகல் நேர பயணத்தின்  நிறம் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

வித விதமான மனிதர்கள் . அவர்தம் மாறுபட்ட மனநிலைகள்...கலவையான சூழ்நிலை சூழ்ந்திருப்பது பகல் நேர பயணம்.

எது, எப்படியாகினும் , எப்படா வீடு திரும்புவோம் என்ற எண்ணமும், என்ன இருந்தாலும் நம்ம வீடு மாதிரி வருமா என்று இப்பொழுதெல்லாம் தோணுகிறது என்பது தான் எதார்த்தம்.( வயசாயிடுச்சோ?)

அது சரி.,
உங்களுக்கு பயணம் பிடிக்குமா?

-பாரத்...பாரதி.

கூண்டுப்புலிகள் -விக்கிரமாதித்யன் கவிதை #ரசித்ததில் சிறந்தது

கூண்டுப் புலிகள்
நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக் கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்துக்கு இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்கு தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச் சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப் புலிகள்.!


-விக்கிரமாதித்யன்

ஹலோ மை சன்!! டேய் தகப்பா!!

A extract from writer Sujathas biography.


குழந்தைகளை படிக்க வைக்கும் எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு...
நாளைக்காக மட்டும் வாழமுடியுமா?

சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. வழக்கம்போல வாசகர் எழுதியதல்ல, வாசகரின் தந்தை எழுதியது. தன்னை அறிமுகம் செய்துகொண்டார் அவர்.

மத்திய அரசில் ஆரம்பநிலை அதிகாரியாக இருந்தவர். இரண்டாம்நிலை அதிகாரியாக ஓய்வு பெற்றார். இரு பிள்ளைகள். இருவருமே நன்றாகப்படித்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலுமாக வேலைபார்க்கிறார்கள்.

இவர் திருச்சியில் மனைவியுடன் வாழ்கிறார்.
அவரது பிரச்சினை தனிமைதான். மனைவிக்கு கடுமையான கீல்வாதம். ஆகவே குளிர்நாடுகளில் சென்று வாழமுடியாது. அவருக்கு ஆஸ்துமாபிரச்சினை உண்டு. பிள்ளைகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழ்கிறார்கள்.

அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட ஊருக்கு வருவதில்லை என்பதே அவரது மனக்குறை. வந்தால் அதிகபட்சம் ஐந்துநாட்கள். உடனே கிளம்பிவிடுகிறார்கள்.

அந்த ஐந்து நாட்களிலும் மொத்தமாக ஐந்துமணிநேரம் பெற்றோரிடம் செலவழித்தால் அதிகம்
‘உங்கள் நூல்களை இங்கே வரும்போது என் இரண்டாவது மகன் கட்டுக்கட்டாக வாங்கிச்செல்கிறான். நீங்கள் ஏன் இதை அவனிடம் பேசக்கூடாது? நீங்கள் பேசினால் அவன் கேட்பான்’ என்றார் அவர்.

இம்மாதிரி குடும்ப விஷயங்களில் தலையிடக்கூடாதென்பது என் கொள்கை. ஆனால் அவர் மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியபோது அதை அவரது மகனுக்கு அப்படியே திருப்பி விட்டேன்.
அவர் மகன் ஒருவாரம் கழித்து மிகநீளமான ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

என்னை பலகோணங்களில் சிந்திக்கவைத்த கடிதம் அது. ‘நான் திருச்சியில் இருபத்திரண்டு வருடம் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் திருச்சியுடன் எனக்கு மானசீகமாக எந்த உறவும் இல்லை.

இருபத்திரண்டு வருடம் அப்பா அம்மாவுடன் வாழ்ந்தேன். ஆனால் அவர்களைப்பற்றி ஒரு நல்ல நினைவுகூட இல்லை’ என்றார் அவரது மகன். அவரது தந்தை அவரை ஒரு பொறியியலாளராக ஆக்கவேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் சிந்தனை செய்தார்.

அதுவும் அவர் எல்.கெ.ஜியில் சேர்வதற்கு முன்னதாகவே.
ஒவொருநாளும் அவரே காலையிலும் மாலையிலும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார். அதைத்தவிர அவர்களின் அன்னையும் பாடம் சொல்லிக்கொடுப்பதுண்டு.

பள்ளிக்கூடப்படிப்பு, வீட்டில் படிப்பு தவிர இளமை நினைவுகள் என்று எதுவுமே இல்லை. ஞாயிற்றுக்கிழமைகள், விடுமுறைநாட்களில் முழுக்கமுழுக்க பாடங்கள்தான்.

கோடைவிடுமுறை முழுக்க ஆங்கிலமொழியறிவுக்கும் கணிதத்திறமைக்கும் வகுப்புகள். தீபாவளி, பொங்கல் தினங்களில்கூட கொண்டாட்டம் இல்லை. படிப்புதான
்.
‘சிலசமயம் இரவில் படுத்து சிந்திப்பேன்.

 இளமைக்காலத்தைப்பற்றிய ஒரே ஒரு மகிழ்ச்சியான நினைவாவது மனதில் எஞ்சியிருக்கிறதா என்று. எவ்வளவு நினைத்தாலும் ஒரு சிறிய நிகழ்ச்சிகூட நினைவுக்கு வரவில்லை. பின்பு ஒருமுறை எண்ணிக்கொண்டேன்.

சரி, ஒன்றிரண்டு துயரமான நினைவாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று. அந்த நினைவுகள் வழியாகக்கூட என் வீட்டுடனும் ஊருடனும் மானசீகமாக தொடர்புபடுத்திக்கொள்ளலாமே என்று.

அப்படியும் ஒரு நினைவு கிடையாது. படிப்பு படிப்பு படிப்புதான்’
‘வீட்டைவிட மோசம் என் பள்ளி’ என அவரது மகன் எழுதியிருந்தார். ’தனியார் பள்ளி அது. மிக உயர்மதிப்பெண்கள் பெற்றுத்தரும் செலவேறிய பள்ளி.

அங்கே பிள்ளைகளைச் சேர்க்க mm நிற்பார்கள்.பள்ளிக்கு உள்ளே நுழைந்த கணம் முதல் வெளியே செல்லும் கணம் வரை கூடவே ஆசிரியர்கள் இருப்பார்கள்.

பேசவோ சிரிக்கவோ விளையாடவோ அனுமதி இல்லை. படிப்பு மட்டும்தான்’
அந்தப்படிப்பிலும் எந்த சுவாரசியமும் இல்லை. ‘பள்ளிப்படிப்புக்கு வெளியே நான் எதையுமே வாசித்ததில்லை.

யாருமே எனக்கு இலக்கியத்தையோ கலைகளையோ அறிமுகம் செய்ததில்லை. நானறிந்த படிப்பு என்பது புத்தகத்தில் உள்ளதை அச்சு அசலாக திருப்பி எழுதுவதற்கான பயிற்சி மட்டும்தான்’ என்று எழுதியிருந்தார்.


அப்படியே பொறியியல் படித்து வேலைக்காக அமெரிக்கா சென்றபோதுதான் அவருக்குத் தெரிந்தது மனிதவாழ்க்கை என்பது எவ்வளவு மகிழ்ச்சிகள் கொண்டது என்று.

பயணங்கள், நண்பர்களுடனான சந்திப்புகள், இலக்கியவாசிப்பு, இசை. அவர் எழுதினார் ’ எந்த இடத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அந்த இடத்தில் நம் மனம் படிந்துவிடுகிறது.

அதுதான் நமது ஊர் என்று நினைக்கிறோம். எனக்கு அமெரிக்காவின் நகரங்கள்தான் பிடித்திருக்கின்றன. திருச்சி எனக்கு அன்னிய ஊராகத் தெரிகிறது. ஒருநாளுக்குள் சலித்துவிடுகிறது’
‘என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு.

அவர்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அவர்களுடன் அரைமணிநேரம் என்னால் பேசிக்கொண்டிருக்க முடியாது. இருபத்திரண்டுவருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவுதான்.

அவர்களை நான் நேசிக்கவேண்டும் என்றால் அவர்களை எனக்கு தெரிந்திருக்கவேண்டும். அவர்களின் மனம் எனக்குப்புரிந்திருக்கவேண்டும்.

எனக்கு அவர்கள் அன்னியர்கள்போல தெரிகிறார்கள்’
‘இருபத்திரண்டு வருடம் அவர்கள் எங்களிடம் பொதுவாக எதையும் உரையாடியதே இல்லை. படிப்பையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலைகளை கொட்டிக்கொண்டே இருப்பார்கள்.

இப்போது அவர்கள் பேசநினைத்தாலும் பேசுவதற்கான தொடர்பு இல்லை. இப்போதுகூட நீ என்ன சம்பளம் வாங்குகிறாய், என்ன மிச்சம் பிடித்தாய் என்று பயம்காட்டமட்டுமே அவர்களால் முடிகிறது.

புத்தகம் வாங்காதே, பயணம்செய்யாதே என்று அவர்கள் வாழ்ந்ததுபோல என்னை வாழச்சொல்கிறார்கள்’
‘நீங்களே சொல்லுங்கள், அரைமணிநேரம்கூட பேசிக்கொள்ள பொதுவாக ஏதும் இல்லாதவர்களிடம் நாம் எவ்வளவுதான் செயற்கையாக முயன்றாலும் பேசிக்கொண்டிருக்கமுடியுமா?

முற்றிலும் அன்னியமாக தெரியும் ஓர் ஊரில் எவ்வளவுநாள் வாழமுடியும்? மரியாதைக்காகவோ நன்றிக்காகவோ ஐந்துநாள் இருக்கலாம். அதற்குமேல் என்ன செய்வது?’ என்று மகன் கேட்டார் ‘என் இளமைப்பருவம் முழுக்க வீணாகிவிட்டது என்றுதான் நினைக்கிறேன்’


அந்தக்கடிதத்தை அப்படியே அவரது தந்தைக்கு அனுப்பினேன். ’இதைவிட தெளிவாக எதையும் நான் சொல்லிவிடமுடியாது’ என்றேன். அவர் புரிந்துகொள்ளாமல் ‘நன்றிகெட்டதனம்.
 பொறுப்பற்றத்தனம்’ என்று மகனை வசைபாடி ஒரு கடிதம் அனுப்பி எனக்கும் பிரதி அனுப்பியிருந்தார்.

மேலும் ஒருமாதம் கழித்து ‘இந்த தீபாவளிக்கு அவனை வரச்சொல்லமுடியுமா?’ என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் எனக்கு அனுப்பினார்
‘தீபாவளி என்பது இளமையில் கொண்டாடவேண்டிய ஒரு பண்டிகை. அன்றுதான் அந்த உற்சாகம் இருக்கும்.

வளர்ந்தபின் அந்த நினைவுகளைத்தான் கொண்டாடிக்கொண்டிருப்போம். உங்கள் மகனுக்கு நினைவுகளே இல்லை என்கிறார். நீங்கள் அவருக்கு உரிமைப்பட்ட பண்டிகைக்கொண்டாட்டங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டுவிட்டீர்கள் என்கிறார்’ என நான் பதில் எழுதினேன். அவர் மீண்டும் பதில் போடவில்லை.


வாழ்க்கை என்பது எதிர்காலத்துக்கான போராட்டம் அல்ல. வாழும் தருணங்களை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வதுதான்.

அதற்காகவே பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் நம் முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளன.

நாளை முக்கியம்தான், இன்று அதைவிட முக்கியம்.

பாரதி-25 நினைவு நாள் பகிர்வு.தமிழ் நிலத்தில்  ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த  சொல் உழவன். மண்ணுள்ள காலம்  வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்!

சுப்பிரமணியன் – பெற்றோர் வைத்த பெயர். சுப்பையா என்பது செல்லப் பெயர். புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி. பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிகளுக்கு அர்த்தம் தந்த அண்ணன்!

எட்டயபுரம், பிறந்த ஊர், சென்னை, வாழ வந்த ஊர். புதுச்சேரி, 13 ஆண்டுகள் பதுங்கி இருந்த ஊர், மூன்று வீடுகளும் இன்று நினைவுச் சின்னங்கள்!

சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் பால பாரதா என்ற ஆங்கில இதழிலும் தொடர்ந்து பணியாற்றியவர். வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளன்!

எட்டயபுரம் ஜமீனைவிட்டு விலகியதும் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக இரண்டு மாதங்கள் பணியாற்றினார். அன்று அவருக்கு 17 ½ ரூபாய் மாதச் சம்பளம். இன்றும் அந்தப் பள்ளி,'பாரதியார் பணியாற்றிய பெருமையுடைத்து!’

ஏழு வயதிலேயே பாடல்கள் புனையம் ஆற்றல் பெற்றார். 11 வயதில் போட்டிவைத்து பாரதி என்று பட்டம் கொடுத்தார்கள் பாரதி என்றால் சரஸ்வதி!

இளசை சுப்பிரமணியம் என்று ஆரம்ப காலத்தில் எழுத ஆரம்பித்த இவர், வேதாந்தி நித்திய தீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன், சக்தி தாசன், சாவித்திரி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்!

14 ½ வயதில் ஏழு வயது செல்லம்மாவை மணந்துகொண்டார். இந்தத் தம்பதியருக்கு தங்கம்மாள், சகுந்தலா என்று இரண்டு மகள்கள்!

காலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன் முதலாகத் தமிழுக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார். உலக விநோதங்கள், பட்டணத்துச் செய்திகள், ரஸத்திரட்டு, தராசு ஆகிய தலைப்புக்களில் நடைச் சித்திரங்களாகத் தொடர் கட்டுரைகள் எழுதினார்!

முதன் முதலாக அரசியல் கார்ட்டூன்களைப் பயன்படுத்திய வரும் பாரதியே, `சித்ராவளி’ என்ற பெயரில் கார்ட்டூன் இதழ் நடத்த அவர் எடுத்த முயற்சி மட்டும் நிறைவேறவில்லை!

பாரதிக்கு பத்திரிகை குரு `தி இந்து’ ஜி சுப்பிரமணிய ஐயர், அரசியல் ஆசான், திலகர், ஆன்மிக வழிகாட்டி அரவிந்தர், பெண்ணியம் போதித்தவர், நிவேதிதா தேவி!

தனிமையிரக்கம் என்பது பாரதி பாடிய முதல் பாடலாகவும். `பாரத சமுதாயம் வாழ்கவே’ என்பது கடைசிப் பாடலாகவும் சொல்லப்படுகிறது. `ஸ்வதேச கீதங்கள்’ இவரது முதல் புத்தகம்!

மணியாச்சி சந்திப்பில் கலெக்டர் ஆஷ் கொலை செய்யப்பட்ட நிகழ்வின்போது பாரதியின் மீதும் சந்தேக ரேகை விழுந்தது. வழக்கில் இவரும் விசாரிக்கப்பட்டார்!

பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்ற வைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு சிரம்ப்படுவார்கள் என்பதை உணர்ந்து `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்று தான் எழுதினார் பாரதி. மனைவியைத் திட்டுவதையும் நிறுத்தினாராம்!

அந்தக் காலத்தில் ஆசாரத்துக்கு விரோதமானது எதுவோ அனைத்தையும் செய்தார். `என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்’ என்று சொன்னவர்!

லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன் ஆகிய மூன்று தெய்வங்களின் படங்களும் வைத்திருப்பார். கிருஷ்ணர் படத்துக்குக் கீழே பிச்சுவா கத்தி இருக்கும். அதில் பெரிய பொட்டும் இருக்கும். தினமும் இதை வணங்கிய பிறகுதான் வழக்கமான வேலைகள் தொடங்கும்!

கனகலிங்கம், நாகலிங்கம் ஆகிய இருவருக்கும் காயத்ரி மந்திரம் சொல்லிக் கொடுத்து பூணூல் அணிய மாட்டார். பூணூல் அணிய மாட்டார். `பூணுலை எடுத்துவிட்டவர்’ என்று போலீஸ் கொடுத்த விளம்பரம் சொல்கிறது!

கறுப்பு கோட் தலைப்பாகை தான் அவரது அடையாளம் வேட்டி, சட்டையில் அழுக்கு இருந்தாலும் பார்க்க மாட்டார். இருந்தாலும் பார்க்க மாட்டார். கிழிசல் இருந்தாலும் கவலை இல்லை ஆனால், சட்டையில் ரோஜா, மல்லிகை என ஒரு பூவைச் சொருகிவைத்திருப்பார்!

"மிஸ்டர் காந்தி! கடற்கரையில் நாளை பேசுகிறேன். நீங்கள் தலைமை வகிக்க வர வேண்டும்" என்று இவர் சொன்னபோது, "கூட்டத்தை மறு நாளுக்கு மாற்ற முடியுமா?" என்று கேட்டார் காந்தி. ``அது முடியாது ஆனால், நீங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்துக்கு என்னுடைய ஆசி’’ என்று சொல்லிவிட்டு வெளியேறிய பாரதியைப் பார்த்துக்கொண்டே இருந்தார் காந்தி.`` இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்’’ என்று அருகில் இருந்தவர்களிடம் கவலைப்பட்டார் காந்தி!

தன்னுடைய எழுத்துக்களை 40 தொகுதிகளாகப் பிரித்து புத்தகங்கள் வெளியிடத் திட்டமிட்டார். ஆளுக்கு 100 ரூபாய் அனுப்பக் கோரிக்கைவைத்தார். யாரும் பணம் அனுப்பவில்லை!

எப்போதும் மனைவி செல்லம்மாளின் தோளில் கையைப் போட்டுத்தான் சாலையில் அழைத்துச் செல்வார். `பைத்தியங்கள் உலவப் போகின்றன’ என்று ஊரார் கிண்டலடிக்க, இவர் பாடியதுதான், `நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ பாட்டு!

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும் போலீஸ் விசாரணையின் போது ``நீங்கள் லண்டனில் படித்தவரா? உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே?” என்று ஆச்சர்யப்பட்டாராம் அதிகாரி!

தமிழ், தமிழ்நாட்டின் சிறப்பு குறித்துப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானபோது, இவர் எழுதி அனுப்பிய கவிதைதான், `செந்தமிழ் நாடெனும் போதினிலே’ அதற்கு அன்று 100 ரூபாய் சன்மானம் கிடைத்தது!

விவேகானந்தரின் கிஷ்யையான நிவேதிதா தேவி இவருக்கு ஒரு ஆல மர இலையைக் கொடுத்திருந்தார். இமயமலையில் இருந்து எடுத்து வந்ததாம் அது தான் மரணிக்கும் வரையில் அந்த இலையைப் பொக்கிஷமாக வைத்திருந்தார் பாரதி!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு வெல்லத்தை இவர் கொடுக்க.... அது தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டவர் `கோயில் யானை என்ற கட்டுரையைக் கொடுத்தார்!

'ஆப்கன் மன்னன் அமரனுல்லா கானைப்பத்தி நாளை காலையில எழுதி எடுத்துட்டுப் போகணும்’ என்று சொல்லிவிட்டுப் படுத்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்தது. அவரது உடல் புதைக்கப்பட்ட இடம், சென்னை கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாடு. அன்றைய தினம் இருந்தவர்கள் 20 –க்கும் குறைவானவர்களே!நன்றி:
பேஸ் புக் நாச்சியார் உடனுறை கூகுள் ஆண்டவர்
நான் தற்கொலை செய்ய போன போது - மினிமீன்ஸ் ஜாலி பதிவு.

பயணம்னு சொன்னா பத்தாவது படிக்கையில் என் தற்கொலைக்கான பயணத்தை சொல்லலாம்.

அப்பாவுக்கும் எனக்கும் எப்பவுமே ஒத்துவராது. மூத்த பையன்களுக்கு அப்பாவின் பாசம் அபூர்வம்தான்.

விளையாட்டுக்கு அனுமதிக்காத அப்பாவை நான் புத்தகங்கள் படித்து ஏமாற்றுவேன்.

பாடப்புத்தகங்கள் தவிர வேறு படிக்கக் கூடாது அப்பாவுக்கு.

நமக்கோ சங்கர்லால், கணேஷ் வசந்த், பரத் சுசி, நரேன் வைஜயந்தி எல்லாம் ஃப்ரண்டு.

அப்படித்தான் ஒரு நாள் புத்தகம் படிக்கும் போது மாட்டிக்கிட்டேன்.

தம்பி தங்கை முன்னாடியே அடி பின்னி எடுத்துட்டாரு அப்பா.
இனி இந்தாளு கூட வாழக்கூடாதுனு தற்கொலை செய்ய முடிவு பண்ணியாச்சு.

வீட்டுலருந்து மாக்கினாம்பட்டி ரயில்வே ட்ராக்கு 5கிமீ.
நடந்துதான் போகணும்.

கோபமா போகைல ஒரு எண்ணம்.
குமுதத்துல சாண்டில்யன் எழுதும் விஜயமகா தேவி தொடர் வந்துட்டிருந்தது அப்ப.

அடடா... இப்ப செத்துட்டா கதை முடிவு தெரியாம போயிடுமேனு யோசனை.

சரி... விஜயமகா தேவி முடிஞ்சதும் தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி... ஒரு கிலோ மீட்டர்ல யூடர்ன் போட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

விஜயமகா தேவி முடிஞ்ச பின்னால ஏன் தற்கொலை பண்ணிக்கலைனு யாருக்காவது தோணலாம்.

அங்கதான் ஆண்டவன் வச்சாரு ஒரு ட்விஸ்ட்டு.

கதைய முடிக்கும் முன்னாடியே சாண்டில்யன் இறந்து போய்ட்டாரு.

ஆக, பல சரித்திரக்கதைகள் எழுதின சாண்டில்யன் தான் என் சரித்திரக் கதையை இப்ப நான் எழுதவும் காரணம்.
-மினிமீன்ஸ்

நல்ல "டேமேஜராக" திகழ சில ஆலோசனைகள் -பாரத் பாரதி


💥நல்ல வேலை செய்ய தெரிந்த நாலு பேர் எப்பவும் நம்ம பக்க இருக்கிற மாதிரி பாத்துக்கோங்க, சட்டுன்னு நம்ம சொன்னா செய்யறமாதிரி இருக்கணும்.

💥ரூல்ஸ் எல்லாத்தையும் நல்லா தெரிஞ்சு வைச்சு கிட்டு பூச்சாண்டி காட்டணும். ஆனா தேவைப்பட்டா மட்டுமே அதிரடியில் இருங்கணும்.

💥பணியை சிறப்பாக செய்யாவிட்டால் "சிங்க முகம்" காட்டுங்க., தப்பில்ல, ஆனா நல்ல பண்ணுறவங்களுக்கு, "பெருமாள்" முகம் காட்டி, ஏதாவது சலுகை கொடுத்து தக்க வச்சுக்கோங்க.

💥எல்லாத்தையும் நீங்க கவனிச்சிக்கிட்டே இருக்கிற மாதிரி பில்டப் கொடுங்க.

💥வேலைய பிரிச்சுக் குடுங்க. "எல்லாத்தையும்" தலைல ஏத்திக்கிட்டு தலைவலி, தலக்கனத்தோட இருக்காதீங்க.

💥கடுமையா இருங்க, ஆனா தேவைக்கேற்ப , "கொஞ்சம்" வளைந்து கொடுங்க.

💥இக்கட்டான சூழ்நிலைகளில் அவர்களுக்கு துணை நில்லுங்க. தேவைனா தனியா கூப்பிட்டு காய்ச்சுங்க.

💥அவுங்க குடும்ப நிலவரத்த தெரிஞ்சு வச்சுக்கோங்க. "எதற்காவது" பயன்படும்.

💥நீங்க உதாரணமா இருங்க.  சிரமமாத்தான் இருக்கும். தனியே போய் அழுதுகோங்க.

💥இது வரைக்கும் யார் என்ன சொன்னாலும் வெரைப்பா, "லொள்ளு நாயம் " பேசியிருப்பீங்க. அது தொழிலாளி வர்க்கம். இப்ப அது மாதிரி பேச முடியாது . பேசினா நீங்களும் அவ்வாறான மனிதர்களையே எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

💥அப்புறம் வீட்டுல பிரச்சனையில்லாமல் கனிவா போய்யிடுங்க. இல்லைனா ரெண்டு பக்கமும் நரகமாயிடும்.

💥கடைசியா இந்த மாதிரி ஐடியா கொடுக்கும் நண்பர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையா நடந்துக்கோங்க..

-பாரத்.

குழம்பியதே தெளியும் - பாலகுமாரன் # இதன் தொடர்ச்சியாய் சிந்திக்க

ஒரு விஷயத்தை எப்படி எதிர்கொள்வது? இங்கே என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? எதற்கு நான் யோக்கியதையானவன். எதற்கு யோக்கியதை இல்லை என்றெல்லாம் நான் என்னுள் தெளிவாக்கிக் கொண்டேன்.

 பெண்களை வெறித்துப் பார்ப்பதிலிருந்தும், தேவையில்லாமல் பேசி வழிவதிலிருந்தும் நான் கவனமாகத் தப்பித்தேன். இதனால் இது பற்றியே பேசுகின்ற நண்பர்களிடமிருந்தும் நான் அப்புறப்படுத்தப்பட்டேன். இவையெல்லாம் இருந்தால்தான் நார்மலான ஆள். இல்லையெனில் அப்நார்மல் என்று என்னுள் ஏற்றினார்கள்.
இம்மாதிரி விஷயங்களில் மாட்டிக்கொண்டு முழித்தவர்களும், அவமானப்பட்டவர்களும், அடிதடிகளில் இறங்கியவர்களும், சிறை சென்றவர்களும், வாழ்க்கையைத் தொலைத்தவர்களையும் நான் கூர்ந்து கவனித்து என் இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டேன். நான் முன்னால் செய்த தவறுகளும் மிகுந்த உதவி செய்தன. நண்பர்கள் நெருக்கம் அதிகமில்லாததை நான் பயன்படுத்திக்கொண்டேன்.

அதிகம் படிக்கத் துவங்கினேன். இலக்கியமும், கடவுள் தேடலும் அருகருகே இருந்தன.

இலக்கிய நண்பர்கள் பலபேர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தார்கள். அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாகக் காட்டிக்கொண்டார்கள்.

கடவுள் என்பது தன்னைத் தேடுதலே என்ற கொள்கை தெளிவாக இருக்க, நான் படிக்கின்ற புத்தகங்கள் தன்னைத் தேடுதலுக்கு அருகேதான் இருந்தன. வெளிப்பார்வைக்கு நான் பிளவுபட்டதுபோல் தோன்றினும் உண்மையில் நான் பிளவுபடவில்லை.

ஆன்மிக சம்பந்தமான உணர்வை அது அதிகரித்தது. மரணம் பற்றி சிந்திக்கும்போது எது நான் என்ற கேள்வியும் எழுந்தது. இவை எல்லாமும் கலந்துகட்டிய ஒரு குழப்பவாதியாக என் வாலிபப் பருவம் நகர்ந்தது. குழம்பியதே தெளியும் என்பது மகா வாக்கியம். அது விஷாத யோகம். இது குழப்பத்திலிருந்து தெளிவு பெறுகின்ற விஷயத்தை சொல்லுகின்ற வார்த்தை. நான் தெளிவேன் என்ற நம்பிக்கையும் எனக்கு திடமாக இருந்தது.
-பாலகுமாரன்.

மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது என்ன? -ஆய்வு முடிவு பகிர்வு

ஆங்கில இதழான fox நடத்திய கருத்துக்கணிப்பில் மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது என்ன ?

ஆய்வின் முடிவு இது ....

குறைந்தப்பட்சம் ஒரு நாளைக்கு 30 நிமிடமாவது கணவன் தன்னுடன் பேச வேண்டும். கைபேசியில் அல்ல நேரில்.

தன் சிறந்த செயல்களுக்கு பாராட்டு வேண்டும் .

புரிதல் வேண்டும். அதாவது பரஸ்பர நம்பிக்கை.

வாரம் ஒருமுறையாவது வெளியில் செல்ல வேண்டும். இயந்திர வாழ்வில் இருந்து விடுதலை.

அலுவலக இடைவேளையில்... உணவு எப்படி இருந்தது.பரிசு தந்த சட்டையை நண்பர்கள் பாராட்டினார்கள் ...போன்ற உணர்வு பரிமாறல் வேண்டும்.

வேலைகளை பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

சின்ன சின்னப் பரிசுகள் பெரு மகிழ்வு தரும்.

இவைதான் உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்.

எந்த இடத்திலும் பெண்கள் பணம் வேண்டும் சொத்து வேண்டும் நகை வேண்டும் என்று பதிவு செய்யவில்லை. ..!

- பேராசிரியர் இளங்கோவன்
அண்ணா பல்கலைக்கழக வானொலியில் 90.4 எப்.எம்

உடனே வீட்டுக்கு ஒரு போன் போடுங்கப்பா....

தூக்கி தூரப்போடுங்க பாஸ்...#ரசித்ததில் சிறந்தது.

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து…”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

இது தான் மனவியல் ரீதிலான தீர்வு.

பகிர்வு: மினிமீன்ஸ்.

காலம் அறிந்து காரியம் செய் -கவியரசு கண்ணதாசன்


காலங்கள் கடவுள் பாடும் ராகங்கள், அவை வீணடிக்கப்பட்டு விட்டால் திரும்பக் கிடைப்பதில்லை.

ஒரு வருஷம் முடிகிறது என்றால், ஒரு வயது முடிகிறது என்று பொருள்.

வயதுக்கு ஏறுகிற சக்தி உண்டே தவிர, இறங்குகிற சக்தி கிடையாது.

எத்தனை வயது வரை ஒருவன் வாழ்ந்தான் என்பது கேள்வியல்ல; ஒவ்வொரு வயதிலும் அவன் என்ன செய்தான் என்பதே கேள்வி.

மராட்டிய வீரன் சிவாஜியின் வயதைப்பற்றி யார் கவலைப்பட்டார்கள்? அவன் நடத்திய வீர சாகஸங்கள் வரலாறாயின!

ஆதிசங்கரர் சமாதி அடையும்போது வயது முப்பத்து இரண்டுதான்.

ஆனால், அந்த வயதுக்குள் அவர் ஆற்றிய காரியங்களின் பயனே இன்றைய பீடங்கள்.

இந்து தர்மத்தின் மறுமலர்ச்சிக்கு ஆதிசங்கரர் ஒரு மைல்கல்.

இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இலக்கணம் வகுத்தவரும் அவரே.

வயதுகள் கூடலாம், குறையலாம்; ஆனால் ஓடுகிற வருஷங்கள் உருப்படியான வருஷங்களாக இருக்க வேண்டும்.

இன்ன ஆண்டில், இன்ன காரியம் நடந்தது என்று வரலாறு எழுதப்படுமானால், அந்த வரலாற்றில் எங்காவது ஒரு மூலையில் நம்முடைய பெயர் இருக்க வேண்டும்.

உண்டோம், உறங்கினோம், விழித்தோம் என்று வாழ்கிறவர்கள் விலங்குகளே!

பயனற்ற காரியங்களில் பொழுதைச் செலவழிப்போர் பயனற்ற பிறவிகளே!

எந்தக் காரியத்தை எந்தக் காலத்தில் செய்ய வேண்டுமோ, அந்தக் காலத்தில் செய்துவிட வேண்டும். இல்லையேல் பின்னால் வருந்த நேரிடும்.

எனது இளமைக் காலங்கள்- அவற்றை நான் எண்ணிப் பார்க்கிறேன்.

எழுத உட்கார்ந்தால் மளமளவென்று என் கைப்படவே நாற்பது ஐம்பது பக்கங்கள் எழுதியதை எண்ணிப் பார்க்கிறேன்.

பரபரப்பான நடை; சுறுசுறுப்பான சிந்தனை; துருதுருவென்றிருந்த மூளை.

எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்கிறேன்.

அவை, எவ்வளவு வீணாகி விட்டன என்பதை எண்ணும் போது, `இறைவா, இன்னொரு முறை இளமையைத் தர மாட்டாயா?’ என்று கெஞ்சத் தோன்றுகிறது.

`அதைப் புத்தகமாக எழுத வேண்டும். இதைப் புத்தகமாக எழுத வேண்டும்’ என்றெல்லாம் இப்போது ஆசை பெருக்கெடுத்து ஓடுகிறது.

திடீர் திடீரென்று உடம்பு சோதனை செய்கிறது.இந்தச் சோதனை இல்லாத காலங்களில் பயனற்ற அரசியல் கட்டுரைகளை எழுதினேன்; பயனற்ற மேடைகளில் காட்சியளித்தேன்; வீண் வம்புகளில் ஈடுபட்டேன்; விளையாட்டுகளையே வாழ்க்கை என்று கருதினேன்.

சிந்தனைகளைச் செயல்படுத்தும் ஆசைகள் வளர்ந்தபோது அந்தச் சக்தியை வழங்க, உடம்பு அடிக்கடி மறுக்கிறது.

இரணியனுக்கும் பிரஹலாதனுடைய வயதிருந்தால் அவன் நரசிம்ம அவதாரத்துடனேயே சண்டை போட்டுப் பார்த்திருப்பான்.

அறிவும் உணர்ச்சியும் தாமதித்தே வருகின்றன; ஆனால், காலம் முந்திக் கொண்டு வருகிறது.

இருபது வருஷங்களுக்கு முன்பு குமரியாக இருந்தவள் இப்போது கிழவியாகக் காட்சியளிக்கிறாள்.

அப்போது அவளுக்காக ஏங்கிய ஆடவர்களும், இப்போது அவளிடம் ஆத்ம விசாரம்தான் பேச முடிகிறது.

முன்பு எனக்கு வந்த வருமானம் இப்போது இல்லை.

அந்த வருமானத்தை நான் செலவழித்த போது இதே போல் வந்து கொண்டே இருக்கும் என்று கருதினேன்.

ஆனால், அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் உள்ள பேதம் இப்போதுதான் புரிகிறது.

மலர் பூத்தவுடனேயே அது கூந்தலுக்குப் போகாவிட்டால், அது வாடியவுடனேயே காலடியில் விழத்தான் வேண்டியிருக்கும்.

ஈயம் பத்திரமாக இல்லாவிட்டால், அது பேரீச்சம் பழத்துக்குத்தான் விலையாக இருக்கும்.

குருஷேத்திரம் எப்போது நடந்தது?

பாண்டவர்கள் வனவாசம் முடிந்த பிறகு.

அதற்கு முன்னாலேயே கண்ணன் அந்தப் போரைத் துவக்கி இருக்கலாம். ஆனால் அந்தக் காலம், யுத்த தர்மத்திற்கு நியாயமான காலமாக இருக்காது.

இரண்டாவது உலக யுத்தத்தை ஹிட்லர் தொடங்கிய காலம் அற்புதமான காலம்.

அவன் திட்டம் ஒழுங்காக இருந்திருக்குமானால் அவனே உலகத்தின் ராஜா!

அதுபோலவே, தாமதித்து அமெரிக்கா போரில் இறங்கின காலமும் அற்புதமான காலம்.

பங்களா தேசத்துக்குள் இந்தியா புகுந்த காலமே அருமையான காலம். அதற்கு முந்தி இருந்தால் உலகத்தின் வசை இருந்திருக்கும்; பிந்தி இருந்தால் இந்தியப் பொருளாதாரம் நாசமாகி இருக்கும்.

இளம் பருவத்தில் பைரன் ஒரு இளம் பெண்ணைக் காதலித்தான்; அவள் மறுத்து விட்டாள்.

நாற்பது வயதுக்கு மேல் அவளே அவனைத் தேடி வந்தாள் ஆசையோடு; அவன் மறுத்து விட்டான்.

சகல வசதிகளும் படைத்த இராவணன், சீதையின் சுயம்வரத்திற்கு முன்பே அவளை சிறையெடுத்திருந்தால் அவன் மீது பழி வந்திருக்காது. ஒரு வேளை சீதையே அவனை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும்.

அரசாங்க வேலையில் சேருவதற்குக் குறிப்பிட்ட ஒரு வயது நிர்ணயித்திருக்கிறார்கள். அந்த வயது கடப்பதற்கு முன்னாலேயே அதில் சேர்ந்து விடவேண்டும். காலம் போய்விட்டால், பிறகு கடைகளில் தான் வேலை பார்க்க வேண்டிவரும்.

சபரிமலை, ஜோதி கூட ஒரு குறிப்பிட்ட நாளில்தான் தெரிகிறது; தினசரி தெரிவதில்லை.

காலத்தின் பெருமையை உணர்ந்தவன்தான் காரியத்திலும் பெருமை கொள்ள முடியும்.

இன்று நான் செய்யும் புத்தகப் பணிகளைப் பத்து ஆண்டுகளுக்கு முன் நான் துவங்கியிருந்தால், எதிர்கால மாணவன் சிலப்பதிகாரத்திற்கும், மணிமேகலைக்கும் என் உரையைத்தான் படிப்பான்.

`இப்போது திருக்குறள் உரையை மட்டுமாவது எழுதி முடித்து விட முடியாதா?’ என்று தோன்றுகிறது.

`முடியும்’ என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே எனது சினிமாப் பாடல்களையும், இசைத் தட்டுக்களையும் தொகுத்து வைத்திருந்தால், இன்று இது ஒரு தனி `லைப்ரரி’ ஆகியிருக்கும்.

முறையாக 1944-ல் இருந்தே நான் டைரி எழுதத் தொடங்கி இருந்தால், உலகத்தில் வேறு எவனுக்கும் இல்லாத வரலாறு எனக்கு இருப்பதை உலகம் கண்டு கொண்டிருக்கும்.

வெள்ளம் போல வருமானம் வந்தபோது ஒரு தோட்டத்தையும் வாங்கி, ஒரு கிருஷ்ணன் கோயிலையும் கட்டி வைத்திருந்தால், இப்போது அந்த ஆசையால் வெந்து சாக வேண்டியிருக்காது.

அப்போது குழந்தைகள் பெயரால் குறைந்த பட்ச டெபாசிட் போட்டிருந்தால்கூட, மரணத்தைப் பற்றிய நினைப்பு வரும்போது குழந்தைகளைப் பற்றிய கவலை வராது.

அப்போது வாங்கிய சொத்துகளை விற்காமல் இருந்திருந்தால் கூட இப்போது எதிர்காலத்தைப் பற்றிய கவலையிராது.

அப்போது காலம் கனிவாக இருந்தது.

பணம் வந்தது; உடம்பு துடிதுடிப்பாக இருந்தது; `போனால் போகட்டும் போடா’ என்ற புத்தியும் இருந்தது.

இப்போது பழங்கணக்குகள் பரிசீலிக்கப்படுகின்றன.

பாய்மரக் கப்பல், காற்றை நம்பிப் போய்க் கொண்டிருக்கிறது.

புயல் காலத்தில் வானளாவி எழுந்த அலைகள், இப்போது அமைதியாக நாக நர்த்தனமாடுகின்றன.

நம்முடைய நண்பர்களும் காலங்களே; பகைவர்களும் காலங்களே.

காலங்களே தருகின்றன; அவையே பறிக்கின்றன.

காலங்களே சிரிக்கச் செய்கின்றன; அவையே அழவும் வைக்கின்றன.

`ஞாலம் கருதினும் கைகூடும்; காலம்
கருதி இடத்தால் செயின்’

என்றான் வள்ளுவன்.

காலம் பார்த்துக் காரியம் செய்தால், பூமியையே விலைக்கு வாங்கலாம்.

பத்து வருடங்களுக்கு முன்னால் கேரளாவில் பரபரப்பான கொலை ஒன்று நடந்தது.

கேரளா முழுவதிலும் அதைப்பற்றிய பேச்சாகவே இருந்தது. அடுத்த மாதமே அதைக் கதையாக எழுதிப் படமாக எடுத்து விட்டார் ஒருவர். அவர் லட்சாதிபதியாகி விட்டார்.

கைவண்டிக்காரர்கள் காய்கறி விற்கிறார்கள்; மாம்பழ சீஸன் வந்தால் மாம்பழம் விற்கிறார்கள்.

பனிக்காலத்தில் ஐஸ் கட்டியையும், காற்றடிக்கிற காலத்தில் மாவையும் வியாபாரம் பண்ணக்கூடாது.

`முறைகோடி மன்னவன் செய்யின்; உறைகோடி
ஒவ்வாது வானம் பெயல்’

-என்றான் வள்ளுவன்.

சித்திரை வைகாசி மாதங்களில் ஏரி குளங்களைத் தூரெடுக்க வேண்டும். அப்படித் தூரெடுக்கத் தவறினால், ஐப்பசி கார்த்திகையில் பெய்கிற மழைத் தண்ணீர் குளங்களிலும், ஏரிகளிலும் தங்காது.

வானம் பார்த்த பூமியில் பங்குனி மாதம் விதை விதைக்கின்றவன் விதைத்த விதையையும் சேர்ந்தே இழப்பான்.

`ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பார்கள்.

ஆவணியில் தண்ணீர் இறைத்தால் போதும், புரட்டாசியில் இருந்து மழை உதவி செய்துவிடும்.

காலங்களிலேயே காரியங்களின் வெற்றி தோல்விகள் அடங்கி இருக்கின்றன.

நல்ல பெண் கிடைக்கும் போது திருமணத்தை முடிக்காமல் விட்டுவிட்டால், பிறகு எந்தப் பெண் கிடைத்தாலும் போதும் என்ற நிலைமை வந்து விடும்.

காலத்தால் கிடைக்கும் நல்ல நண்பர்கள் மீண்டும் கிடைக்க மாட்டார்கள்.

இராவணன் தோற்ற பிறகு விபீஷணன் ராமனைத் தேடி வந்திருந்தால், ராமனே அவனை ஒரு அடிமையாகத்தான் நடத்தி இருப்பான்.

காலம் பார்த்து சுக்ரீவன், ராமனைச் சேராமல் இருந்திருந்தால், வாலி வதமும் நடந்திருக்காது; சுக்ரீவனுக்குப் பட்டமும் கிடைத்திருக்காது.

கம்சன் போட்ட தவறான காலக் கணக்கினால் தான் கிருஷ்ணாவதாரம் நமக்குக் கிடைத்தது.

காலத்தின் கருணையால்தான் அசுரக் கூட்டம் அழிந்தது.

காலத்தைச் சரியாகப் பிடித்துக் கொண்டால், தெருப் பிச்சைக்காரியும் மகாராணியாகலாம்.

சினிமா உலகிலேயே நான் பார்க்கிறேன். காலத்தால் தவறான ஆட்களைச் சந்தித்து, கல்யாணம் என்ற பெயரில் வாழ்வு இழந்து போன நடிகைகளும் உண்டு. பெரும் பணக்காரர்களைப் பிடித்துக் கொண்டு உலகம் முழுவதும் விஜயம் செய்யும் நடிகைகளும் உண்டு.

அதிர்ஷ்டம் என்பது வேறொன்றுமில்லை; வருகின்ற காலத்தை ஒழுங்காகப் பிடித்துக் கொள்வதே.

நீங்கள் அதிர்ஷ்டக்காரர்களா என்பதைச் சோதிக்கக் காலம் அறிந்து காரியம் செய்தீர்களா, என்பதை எண்ணிப்பாருங்கள்.

புத்தனின் மனைவியாய் இருப்பது சுலபமில்லை-மினிமீன்ஸ்-ரசித்ததில் சிறந்தது.

புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?

புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்.

மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?”
புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார்.

மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.
அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள்.

அது இது தான்: “நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா?”

புத்தர் சொல்கிறார்: “தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல”

புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை.

புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா... ஓடுகாலி என்றிருக்கும்.
சரி, புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது... அவளை வாழாவெட்டி என்றது.

அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை. ஒற்றைக் குழந்தை ராகுலன். விடுமா ஆண்வர்க்கம்.?

சாதாரணமாய் இருந்தாலே விடாது. உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் வேறு.
எவ்வளவு போராடியிருப்பாள்.?
புத்தர் போனதும் தன் தலையை மழித்துக் கொண்டாள். தன் ஆடை அலங்கோலமாக்கிக் கொண்டாள். ஒற்றைப் பிள்ளையின் "அப்பா எங்கே" எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப் போராடினாள்.

எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்.
எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.

எது கடினம்.?
சொல்லுங்கள் யார் துறவி இப்போது.!!!

அப்பா... அப்புறம் அந்த சைக்கிள் - பரிசல்காரன் #ப.பி.

எப்போதும் எங்கும் நடந்தே செல்லும் குடும்பம்தான் எங்களுடையது. மோட்டார் வாகனங்கள் வாங்கும் எண்ணமோ, வசதியோ கிஞ்சித்தும் இருக்க வில்லை. சைக்கிள் வாங்குவோம் என்று கூட நினைத்ததில்லை ஒரு கட்டத்தில்.


அப்பாவுக்கு சைக்கிள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதிலிருந்து இருந்தது என்று என்னால் கணிக்க முடியவில்லை. அப்பாவுக்கு மூக்குப் பொடி போடும் பழக்கம் இருந்தது. உடுமலை தளி ரோட்டில் சரஸ்வதி ஏஜன்சீஸில் வாங்கும் டி ஏ எஸ் பட்டணம் பொடிதான் அவர் ஃபேவரைட் ப்ராண்ட். அதற்காக தளி ரோட்டில் நானும் அவரும் நடந்து செல்வதுண்டு. அப்போதெல்லாம் எதிரிலிருக்கும் சைக்கிள் கடை ஒன்றை அவர் பார்ப்பதை கவனித்திருக்கிறேன்.


ஒரு நாள் அந்தக் கடைக்கு என்னை அழைத்துச் சென்றார். வெளியிலேயே சைக்கிள்கள் பார்வைக்கு நிறுத்தப்பட்டிருக்கும். கடைக்குள் அப்பா அழைத்துப் போனதே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சைக்கிள் விலைகளைக் கேட்டறிந்து வந்தார். அதன்பிறகு சில மாதங்கள், அந்தப் பேச்சே இருக்கவில்லை. ஆனால் அவர் மனது முழுதும் அந்த சைக்கிளை வாங்கியே ஆகவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கக் கூடும்.

திடுமென்று ஒரு நாள் சைக்கிளோடு வீட்டுக்கு வந்தார். அப்பா சந்தோஷமாக சிரித்தபடி இருந்த தருணங்களை நினைவுகூர்ந்தால் இந்த சைக்கிள் வீட்டுக்கு வந்த தினமும் ஒன்று. முகமெல்லாம் அத்தனை மகிழ்ச்சி அவருக்கு இருந்தது. ஒரு நாள் விடாமல் தினமும் துடைத்து வைப்பார். சைக்கிளுக்கு பெல் மாட்டிவந்தது, டைனமோவை இயக்கி லைட் எரிவதை எங்களுக்குக் காண்பிப்பது என்று சந்தோஷமான தினங்கள் அவை.


ஆரம்பநாட்களில் அவர் சைக்கிளை கொஞ்சம் தயக்கமாகவேதான் ஓட்டினார். யாராவது எதிரில் வந்தால் முடிந்த அளவு ஒதுங்கிவிடுவார். நாளாக நாளாக எங்களையும் அழைத்து டபிள்ஸ் போக ஆரம்பித்தார்.

சைக்கிள் வாங்கி சிலபல மாதங்கள் கழித்து சைக்கிளின் செய்ன் கவரில் K.R.Balasubramanian என்று தன் பெயரை உடுமலை ராயல் ஆர்ட்ஸில் சொல்லி எழுதிக் கொண்டார். தினமும் துடைக்கும்போது அதையும் கர்மசிரத்தையாக துடைப்பார். சைக்கிள் ரிம், செய்ன் கவரின் பின்பக்கம், மர்காட் என்று அவர் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து துடைத்துக் கொண்டிருப்பார். (பின்னாளில் என் தம்பி அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்ததும் அவன் பெயரைச் சுருக்கி எழுதிக் கொடுத்தேன்.)

நான் கொஞ்சம் பெரியவனானதும் என்னை சைக்கிளை எடுத்துச் செல்ல அனுமதித்தார். ஒரு டிசம்பர் 31 அன்று அதை எடுத்துக் கொண்டு போய் நண்பர்களோடு இருந்துவிட்டு இரவு 1 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். இருட்டில் முள்ளில் விட்டதில் டயர் பஞ்சர். அடுத்த நாள் அப்பா சைக்கிளை எடுக்கப் போனபோது பார்த்து, பஞ்சர் ஒட்ட காசில்லாமல் நடந்தே அவர் வேலைக்குப் போனார். திட்டியிருந்தாலும் தேவலாம். ஒன்றுமே சொல்லவில்லை. இரண்டு தினங்கள் கழித்துதான் பஞ்சர் ஒட்டப்பட்டது.

ஊருக்குப் போகும்போதெல்லாம் அந்த சைக்கிளை ஒரு பாசப்பார்வை பார்ப்பதுண்டு. எடுத்து ஓட்டுவதும் உண்டு. தம்பிதான் அதை உபயோகித்துக் கொண்டிருக்கிறான். சமீபத்தில் போனபோது சைக்கிள் அருகே ஒரு யமஹா RX நின்று கொண்டிருந்தது. தம்பியின் நண்பனுடையது என்றான்.


நானும் எப்போது போனாலும் என் பைக்கை அந்த சைக்கிளை விட்டு கொஞ்சம் இந்தப் பக்கமாகத்தான் நிறுத்துவேன். என்ன ஆனாலும் அதற்கு ஈடாகாது என்பது என் மனது சொல்கிற பாடம்.


ஆனால் - எப்போது அந்த சைக்கிளைப் பார்த்தாலும் எனக்கு இடறும் விஷயம் ஒன்று உண்டு.


என்னையும் என் தம்பியையும் தவிர, என் பெரியம்மா மகன் கிருஷ்ணமூர்த்திதான் அப்பாவுடன் அதிகமாக சைக்கிளில் டபிள்ஸ் போனது. அதே போல சொந்தக்காரர்கள் வீட்டிலிருக்கும் எல்லா குழந்தைகளும் அப்பாவின் சைக்கிள் பின்னால் அமர்ந்து சவாரி சென்றிருக்கிறார்கள். ஆனால், எத்தனை முறை யோசித்தாலும் அப்பா, அம்மாவை வைத்து சைக்கிளில் போனதாய் என் நினைவிலேயே இல்லை. அம்மாவை அவர் சைக்கிளில் உட்காரவைத்துச் சென்றதே இல்லை

-பரிசல்

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்