விபத்துக்கள் ஆயிரம் - தீர்வுகள் எங்கே?

இன்று அதிகமான சாலை விபத்துகளுக்கான காரணங்கள் : (தீர்வுகளும் இதுக்குள்ளே இருக்கிறது)
#படித்ததில் பிடித்தது.

1. தரமற்ற சாலைகள்:

குண்டும் குழியுமாக மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக வாகன ஓட்டிகளுக்கு மரணக்குழிகளாக காட்சியளிக்கின்றன.

2. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது:

உலகத்தில் 44 முதல் 67 சதவீதம் வரையிலான சாலை விபத்து இறப்புகளுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணம் என்ற அதிர்ச்சித் தகவலை உலக சுகாதார நிறுவனம் ஓர் ஆய்வில் தெரிவித்திருக்கிறது.

3.கட்டுப்பாடில்லாத அசுர வேகம்:
அவசரம் கூட விபத்துகளுக்கு காரணமாகி விடுகின்றது. நிதானத்தைக் கடைபிடிப்பது மிகமுக்கியமானது. இதைக் கடைபிடித்தால் அவசரத்தினால் ஏற்படும் விபத்துகளை தடுக்கமுடியும்.

4. நீயா? நானா? என்ற போட்டி மனப்பான்மை:

இதுவும் விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. வாகனங்களை முந்துவதில் காட்டுகின்ற ஆர்வத்தை நல்லகாரியங்களில் காட்ட முனையவேண்டும்.

5. ஆணவம்:

பொறுமையான நல்ல சாதுவான மனிதர்கள் கூட வாகனங்கள் ஓட்டும்போது தங்கள் இயல்பிற்கு மாற்றமாக நடந்துகொள்கிறார்கள் என சர்வதேச ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆணவமும், அகம்பாவமும் கூடவே வந்துவிடுகின்றன. பின்னால் வரும் வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பினாலோ அல்லது நம்மை ஓவர்டேக் செய்தாலோ நாம் நம் இயல்பை மறந்து விடுகிறோம். அங்கே ஆணவம் மேலோங்குகிறது. இதுவே விபத்துக்களுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.

6.கைப்பேசி:

மக்களின் அத்தியவாசியத் தேவைகளில் முதலிடம் வகிப்பது கைப்பேசி தான். மக்களின் மூன்றாவது கரம் என்று சொல்லுமளவிற்கு செல்போன் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் செல்போன்களே அவர்களின் உயிர்களையும் பறித்துவிடுகிறது. செல்போன்களில் பேசிக்கொண்டே ரோட்டைக் கடக்கும்போது இரயில்வே லைனை கடக்கும்போது வாகனங்கள் ஓட்டும்போது சாலைவிபத்துகள் நடக்கின்றன இதற்கு இன்னொரு காரணம் கவனமின்மை.

7. பெற்றோர்கள்:

விலை உயர்ந்த வாகனங்களை தங்களின் பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுப்பதும் இல்லையெனில் பிள்ளைகளே பெற்றோர்களை மிரட்டுவதும் சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. சாலை விபத்துகளுக்கு பெற்றோர்களும் ஒரு காரணமாக அமைந்துவிடுகின்றனர். தங்களின் செல்லப்பிள்ளைகளுக்கு கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் பழக்கம் அவர்களின் உயிர்களை பறித்து விடுகிறது.

8.ஹீரோயிஸம்.

வாகனங்களில் அதிகம் சப்தம் எழுப்பிக்கொண்டும், மற்ற வாகனஓட்டிகளை அச்சுறுத்தும் வண்ணமும் பொதுமக்களை அச்சுறுத்திக்கொண்டும் வாகனம் ஓட்டுவது இன்று பிரபலமாகப் பார்க்கப்படுகிறது.

எழுத்து: காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி

புன்னகை செய் -படித்ததில் சிறந்தது.

டாக்டர் ஜெரோம் மோட்டோ 1950-1970 களில் அமெரிக்கா சான் ப்ரான்சிஸ்கோவில் வசித்த புகழ் பெற்ற மன நல மருத்துவர்.

அவரை மிகவும் பாதித்த ஒரு நிகழ்வு அவரது பேஷண்ட் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதுதான்.

அந்த பேஷண்ட் கோல்டன் கேட் என்ற பாலத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தைப் படித்துதான் டாக்டர் மிகவும் மனம் நொந்து போனார். அந்த கடிதத்தில்

" நான் பாலத்தின் ஒரு முனையில் இருந்து மறு முனை வரை நடந்து கொண்டே செல்வேன். எதிர்படும் ஒரு மனிதராவது என்னைப் பார்த்து புன்னகைத்தால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை மாற்றிக் கொள்வேன் " என்று எழுதப்பட்டு இருந்தது.

சத்தமும், நிசப்தமும் - தேவதச்சன் கவிதை micro post

தேவதச்சன் கவிதை...

துணி துவைத்துக்கொண்டிருந்தேன்

காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்

தொடர்ந்து துவைத்துக்கொண்டிருந்தேன்

காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்

அடுத்த துணி எடுத்தேன்

காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்

நேரம்டா நேரம்... #ரசித்ததில் சிறந்தது.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு கௌதமை சந்தித்தேன். நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு வழக்கம் போல சினிமா பற்றி பேச்சு திரும்பியது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'இன்டர்ஸ்டெல்லர்' பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தான்.

டைம் மெஷின், டைம் டிராவல் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தமிழில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் என்று பெருமைப்படும் 'இன்று நேற்று நாளை' படத்தையும் பேச்சுவாக்கில் தொட்டுச் சென்றான்.

''ஃபேன்டஸி படமா இருந்தாலும் அளவா, கச்சிதமா, எந்த எல்லையும் மீறாம இருந்தது ரொம்ப நல்ல அனுபவம்'' என்றான்.

என் மனசு 'இன் டைம்' படத்தையே சுற்றிச் சுற்றி வந்தது. 2011-ல் வெளியான அமெரிக்கன் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் 'இன் டைம்'.

'இன் டைம்' திரைப்படம் காட்டும் உலகம் வித்தியாசமானது. அங்கு எல்லோரும் 25 வயது வரை இயல்பாக வளர முடியும். 25 வயது முடிந்த பிறகு ஒரு வருடம் மட்டுமே ஆயுள் தரப்படும். அதற்குப் பிறகு வாழ விரும்புவர்கள் தன்னுடைய வாழ்நாளை உழைத்து சம்பாதிக்கலாம். பிறரிடம் இருந்து கடன் வாங்கலாம். கொஞ்சம் குறுக்குப்புத்தியோடு அடித்துப் பிழைப்பவர்கள் பிறரிடம் திருடலாம். இது எதுவுமே செய்யாவிட்டால் அவர்கள் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் செத்துவிடுவார்கள்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நம் சமூகத்தில் பணத்தை கடன் வாங்குகிறார்கள். திருடுகிறார்கள். வங்கியில் சேமிக்கிறார்கள். அந்த உலகத்தில் வாழ்பவர்கள் பணத்துக்குப் பதிலாக நேரத்தை சம்பாதிக்கிறார்கள். நேரத்தைக் கடனாக கொடுத்து காபி குடிக்கிறார்கள். கார் வாங்குகிறார்கள். எல்லாவற்றுக்கும் நேரம்தான் முதலீடு.

அதிக நேரம் வைத்திருப்பவர்தான் பணக்காரர். அவர்தான் ஹீரோ. அப்படி ஹீரோவுக்கு ஒருத்தர் 100 வருஷம் கொடுத்து செத்துப்போய்டறார். அப்புறம் என்ன நடக்குதுங்கிறதுதான் த்ரில்.

கெளதமுடன் உரையாடல் தொடர்ந்தது.

''இன் டைம் பார்த்திருக்கியாடா?''

''பார்க்கலைடா. ஏன்?''

''செம படம்டா. ஒருத்தன் நெனைச்சா இன்னொருத்தனுக்கு எவ்ளோ நாள் வேணும்னாலும் வாழ டைம் கொடுக்கலாம். அதே சமயம் அதைப் பிடுங்குறதுக்கும் ஒரு கூட்டம் இருக்கும்.''

''இப்போ எதுக்கு இவ்ளோ டீட்டெயில்?''

''இதை நம்ம தமிழ் இலக்கியத்துல ஒரு வரியில சொல்லிட்டாங்க''

''என்னடா சொல்ற?''

'' 'யான் வாழு நாளும் பண்ணன் வாழிய.' புறநானூற்றுப் பாடல். என்னுடைய வாழ்நாளை எல்லாம் எடுத்துக்கொண்டு பண்ணன் வாழட்டும்னு அரசன் கிள்ளிவளவன் நில ஊர்கள் தலைவன் பண்ணனை வாழ்த்துறாரே... அதனோட அடுத்த டைமன்ஷன் தான் இந்தப் படம். அதை இப்ப கலைச்சு போட்டாலும் வேற ஒரு கான்செப்ட் கிடைக்கும்.

-க.நாகப்பன்.

குறிப்பு:
இன் சைட் படம் பத்தின குறிப்பு படிச்சிங்களா? அது மாதிரி வாய்ப்பிருந்தா , யாருக்கு தருவீர்கள் உங்க நேரத்தை?

அப்பா- எஸ்.ராமகிருஷ்ணன் #ப.பி.

அப்பாவிற்கு எங்கள் யாரோடும் சேர்ந்து இருப்பதற்குப் பிடிக்கவேயில்லை. அதை என் பெரிய அக்கா ஒரு முறை அவரிடமே சொல்லியும் விட்டாள்.

அதற்கு அப்பா ‘தூரத்தில் வசிக்கும்போது மட்டும் தான் நீங்கள் என் பிள்ளைகள் என்ற நினைப்பு வருகிறது. அருகில் இருந்தால் வேறு யாரையோ போலிருக்கிறீர்கள்’ என்றிருக்கிறார்.

அப்படித்தான் அப்பாவின் பேச்சு எப்போதுமிருக்கும். அது இயல்பானதா அல்லது தன்னை மறைத்துக் கொள்ள அப்படி பேசுகிறாரா என்ற சந்தேகம் எனக்குண்டு. நானே சில வேளை அப்படி பேசுகிறேன் என்று என் மனைவி சொல்கிறாள். எதற்காக இந்தப் பழக்கம்.

அப்பாவிடம் பகிர்ந்துகொள்ளப்படாத ரகசியங்களும் அவமானங்களும் வலிகளும் நிறைய இருக்கின்றன என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்.

சொற்ப வருமானத்தில் பெரிய குடும்பம் ஒன்றை வளர்த்து காப்பாற்றி வருவது எளிதானதில்லை.யாரையும் திருப்தி செய்ய முடிந்திருக்காது.

சில வேளைகளில் அப்பாவை என் கூடவே வைத்து ஏசி செய்யப்பட்ட அறையைத் தந்து அவரை காரில் அழைத்துக் கொண்டு போய் தேவைப்படும் உடைகள் உணவுகள்’ வாங்கித் தந்து அன்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றும்.

ஆனால் அவரை நேரில் பார்த்தவுடன் அந்த கனவுக்குமிழ் தானே உடைந்து போய்விடும். அல்லது அவரே உடைத்துவிடுகிறார்.

குதிரைகள் பேச மறுக்கின்றன –
எஸ்.ராமகிருஷ்ணன்

தேடல்- பாலகுமாரன் வரிகள். #ப.பி

“சனியும் ஞாயிறும் தலைமறைவாகும்- வேலை என்னும் ஒரு பூதம்’ என்று ஒரு தமிழ்க்கவிஞர் எழுதினார். மற்ற நாட்களில் வேலை என்றும், சனியும் ஞாயிறும் அந்த பூதம் தொல்லை கொடுக்காது என்றும் அந்த எண்ணத்தில் எழுதினார். எனக்கும் அந்த எண்ணம் இருந்தது.

ஆனால் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அந்த பூதத்தோடு கைகோர்த்துக் கொண்டு நான் உல்லாசமாக ஊர் சுற்றினேன்.

உல்லாசமாக ஊர் சுற்ற வேண்டுமென்றால் மற்ற நாட்களில் நாயாய் பேயாய் வேலை செய்ய வேண்டுமென்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டேன்.

ஒவ்வொரு பயணத்திலும் விதம்விதமான அனுபவங்கள் ஏற்பட்டன. எல்லாமும் கதை எழுதப் பயன்பட்டன. சரித்திர சம்பந்தமான உணர்வு அதிகரிக்க, தனித்திருத்தலே உதவி செய்தது. ஆன்மிக சம்பந்தமான உணர்வை அது அதிகரித்தது. மரணம் பற்றி சிந்திக்கும்போது எது நான் என்ற கேள்வியும் எழுந்தது. இவை எல்லாமும் கலந்துகட்டிய ஒரு குழப்பவாதியாக என் வாலிபப் பருவம் நகர்ந்தது. குழம்பியதே தெளியும் என்பது மகா வாக்கியம்.

மதங்கள் வேறு, கடவுள் தேடுதல் வேறு என்ற எண்ணம் பலப்பட்டது.

மிக ஆரம்பத்திலேயே நான் இந்த குழப்பத்திலிருந்து வெளிப்பட்டேன். எந்த மதமும் கிடையாது என்று சொல்வதைவிட, ஏதோ ஒரு மதத்தில் ஏதோ சில சடங்குகளைச் செய்துகொண்டு, அதைப்பற்றி அதிகம் விவாதிக்காது கடவுள் தேடுதலை ஒரு தனிமனித காரியமாக நான் வைத்துக்கொண்டேன். இது சில புத்தகங்களால் தெளிவாயிற்று. இந்து மதம் தவறே இல்லை. அது தெளிவாகப் பல விஷயங்களைச் சொல்கிறது. அதேபோலமற்ற மதங்களிலும் கடவுள் பற்றிய விஷயங்கள் தெளிவாக இருக்கக்கூடும். ஆனால் இப்போது மதத்தை முன்னின்று நடத்துபவரிடம் இது காணோம். இப்போது இருக்கின்ற உபதேசிகள் இதை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

இடைஞ்சல் என்பது அலுவலகத்தின் மூலம் ஏற்பட்டது. கடும் சண்டையும் துரோகங்களும், ஒருவரை ஒருவர் போட்டுக்கொடுப்பதும் எளிதாக நடந்தன. ஒவ்வொருநாள் காலையும் அலுவலகத்தில் நுழையும்போது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினை என்ன என்பது ஒரு பெரும் கவலையைக் கொடுத்தது.

ஆனால் என் தாயார் அதற்கு விதிவிலக்காக இருந்தார். தமிழ்க்கவிதைகளை அவர் ரசிப்பதே தனி அழகாக இருந்தது. அதைச் சொல்லித் தருவது இன்னும் சுவையாக இருந்தது. கூரிய புத்தி படைத்தவராக, கலை இலக்கியங்களில் ஆர்வம் உள்ளவராக, ஒருவர் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிந்தவராக இருந்தார்.

“எப்பாடு பட்டாவது வீடு வாங்கிடு. இப்ப எல்லாத்தையும் செலவு பண்ணிடாதே” என்று என்னிடம் உரிமையாகப் பேசுவார். நான் வாய்விட்டு சிரிப்பேன். அவரும் கலந்துகொள்வார். “நமக்குன்னு ஒரு சொந்தவீடு எப்பதான் கிடைக்குமோ, அந்தமாதிரியெல்லாம் ஆசைப்படணும். வெறுமே புத்தகப்புழுவா இருக்காதே. உலகம் தெரிஞ்சுக்கோ” என்று சொல்ல, இளைஞன் புத்தகப் புழுவாக இருப்பதா அல்லது போக்கிரி உலகத்தோடு சண்டையிடுபவனாக இருப்பதா. எனக்குள் பெரும் குழப்பம் வந்தது.

-பாலகுமாரன்.

தேடல்- ஆக்கம் -சி.ஆர்.

இந்த மாதம் சம்பளம் வாங்க ஆதார் எண் அவசியம் வேண்டும் என்ற செய்தி எனக்கு இடியோசை போல வந்திறங்கியது!ஆதார் அட்டையை என்றோ ஒரு நாள் எடுத்துப்பார்த்து விட்டு எதோ ஒரு புத்தகத்தில் சொருகி வைத்த ஞாபகம்! அதை இரண்டு நாட்களாக தேடிவருகிறேன்! கிடைக்கவில்லை! வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் "என்ன தேடுறீங்க?"ன்னு கேட்டாலும் கண்டுப்பிடிச்சுட்டு சொல்றேன் என சுருக்கமாக சொல்லிவிட்டு விரிவாக தேட ஆரம்பித்துவிடுவேன்! இன்று அந்த தேடலுக்கு
ஒரு முடிவு கட்டவேண்டும்.இந்த தேடுதல் வேட்டையில் எப்போதோ பையன் புத்தகத்தில் ஒளித்து வைத்த மயிலிறகு கிடைத்தது! தேடியது கிடைக்காவிட்டால் என்ன? மயிலிறகு கிடைத்ததே!இப்படி தான் சில வேளைகளில் வாழ்க்கையை ஓட்டவேண்டியிருக்கிறது! மயிலிறகில் வருடுதல் சுகமானதே!!
-சி.ராஜேந்திரன்.

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்