அனுஜாவின் கேள்வி - கவிதை



ஈழ நாட்டில்
தாத்தா, பாட்டி வாழ்க்கை
பஞ்சத்தில் போனது.

தாய், தந்தை
வாழ்க்கை
யுத்தத்தில் போனது.

இன்று
அகதியாய் அலைக்கழிக்கப்படுகிறது
என் வாழ்க்கை.


என்று வாழ்வோம்
எங்களுக்கான வாழ்க்கையை?

எங்கே தேடுவது
நிம்மதியை?
எங்களை
தொலைத்த இடத்திலா?
நாங்களே
தொலைந்த இடத்திலா?

- அனுஜா.அ.
பன்னிரெண்டாம் வகுப்பு அ பிரிவு.

யாரோ யாருக்காகவோ எழுதிய கவிதைகளில் வெறும் வார்த்தை அலங்காரங்கள் மட்டும் மீதமிருக்கும்.

தனக்காக எழுதிய கவிதையில் வரும் வார்த்தைகள் தேர்ச்சி அற்றவையாக இருப்பினும், வலி வெளிபாடு உச்சமாய் இருக்கும்.

இது தனக்காக எழுதப்பட்ட கவிதை.

சாதிக்கலாம் வாங்க...

பிளஸ் டூ - வில் சாதிக்க...
  
என்னதான் ஒரு வருடம் முழுவதும் படித்தாலும் கூட, தேர்வுக்கு முந்தைய விடுமுறை நாட்களை சரியான முறையில் திருப்புதல்(Revision) செய்வதற்கு பயன்படுத்தினால் மட்டுமே, மதிப்பெண்களை கில்லியாய் சொல்லியடிக்க முடியும்.

மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புக்களுக்கு சேர , இயற்பியல் (Physics) பாடத்தின் மதிப்பெண் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில் வரும் 11-03-2011 வெள்ளியன்று பிளஸ் டூ - இயற்பியல் தேர்வு நடைப்பெற உள்ளது. 

இயற்பியலுக்கு இரு நாட்கள் படிப்பதற்கு விடுமுறை உள்ள நிலையில் அதற்காக திட்டமிடலை படி நிலைகளாக குறிப்பிட்டுள்ளோம்.

இயற்பியலில் சென்டம் எடுக்க பத்து படி நிலைகள் :
Ten Steps to Achieve Centum in Plus Two Physics.

படி நிலை STEP 1 :

அனைத்து பாடங்களிலுள்ள விதிகள் (law), வரையறைகள்(Definition), பண்புகள்(Properties), பயன்கள்(Applications), வரம்புகள்(Limitations), ஒப்பீடுகள்(Comparison), வேறுபாடுகள்(Distingush), அலகுகள்(Units), காரணம் கூறுதல்(Reasoning) போன்ற விஷயங்களை படித்தல்.

இவை தேர்ச்சி பெற கியாரண்டி தரும் விஷயங்கள்.இவைகளை படிக்க  பெரிய புத்திச்சாலித்தனம் தேவையில்லை என்பதால் அனைத்து வகை மாணவர்களும் இதனை படிக்கலாம். இந்த தலைப்புக்களை தவறு இன்றி படித்து விட்டால் சுமார் ஐம்பது மதிப்பெண்கள் வாங்கிவிடலாம், வேண்டுமெனில் முந்தைய வினாத்தாள்களை அலசிப்பாருங்கள். 

படி நிலை 2 :

மொத்தமுள்ள பத்து பாடங்களில், ஏதேனும் நான்கு பாடங்களை தேர்வு செய்து அதனை ஒரு வரிகூட விடாமல் படித்தல்.
  
இருபத்து ஐந்து மதிப்பெண்கள் இருக்ககூடிய நான்கு பாடங்களை தேர்வு செய்து, A TO Z  படித்தால், கடினமாக வினா வந்தாலும் கூட நூறு மதிப்பெண்கள் நிச்சயம் பெற்று விடலாம்.

படி நிலை 3 :

இதற்கு முன் நடைப்பெற்ற பொதுத்தேர்வுகளின் வினாத்தாளிலுள்ள வினாக்களை படித்தல்.

இதுவரை புதிய பாடத்திட்டத்தின் படி மார்ச்-2006 நடைப்பெற்றுள்ள  
15 தேர்வுகளின் வினாக்களை, எந்த கேள்வியையும் விட்டு விடாமல் படித்தால், பெரும்பாலான வினாக்களை விடையளிக்க முடியும். இதன் மூலம் 120 மதிப்பெண்கள் வரை பெற முடியும். கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் 140 மதிப்பெண் வரை கூட பெற முடியும். (இயற்பியலை பொறுத்தவரை, சில வினாக்கள் திரும்ப, திரும்ப கேட்கப்படுவதால்)

படி நிலை 4:

புத்தகத்தின் பின் (Book back)) உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை படித்தல் மற்றும் பாடத்தின் உள்ளே இருக்கும் முக்கியமான தலைப்புக்களின் இறுதி விடைகள், எண்மதிப்புகள் ஆகியவற்றை மனப்பாடம் செய்தல்.

ஒரு மதிப்பெண் வினாக்கள் சவால் விடுபவையாக இருந்தாலும் கூட, ஆறு வினாக்கள் தவிர மீதமுள்ள வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாகயிருக்கும்.

படி நிலை 5 :

கணக்குகளை (Problems) செய்து பார்த்தல்.

வினாத்தாளில் மொத்தமிருக்கும் 230 மதிப்பெண்களில், கிட்டத்தட்ட 35 மதிப்பெண்களுக்கு கணக்குகள் கேட்கப்படலாம். Part I - 5 numerical Problems,  Part II - 5 numerical Problems, Part III - 3 numerical Problems.
கணக்கிடுதல் வினாக்களில் ஒன்று கட்டாயம் விடையளிக்க வேண்டிய கணக்காக இருப்பதால் (Compulsory Sum) இதற்கான பயிற்சியையும் கட்டாயம் பெற்றிருந்தால் மட்டுமே சென்டம் கனவு நிறைவேறும்.((Compulsory Sum ல் கேட்கப்படும் கணக்கில் ஒன்று, தீர்க்கப்பட்ட பகுதியிலிருந்து வரும் என்பதும், இரண்டில் ஒன்று சமன்பாடில் பிரதியிட்டால் விடைகிடைக்கும் வகையில் எளிதாக இருக்கும் என்பது சமீபத்திய கண்டுபிடிப்புகள்.)

படி நிலை 6 :

மீதமுள்ள பாடங்களில் மூன்று பாடங்களை படித்தல்.

படி நிலை 7:

வராது என மற்றவர்கள் ஒதுக்கிய கேள்விகளை, தனியே பட்டியலிட்டு அதனையும் படித்தல்.

படி நிலை 8 :

இறுதியாய் மீதமுள்ள மூன்று பாடங்களை படித்தல்.

ஐந்து வரையுள்ள படி நிலைகளை நன்றாக படித்தாலே 145 மதிப்பெண்களை தொட்டு விடலாம் என்றாக இருந்தாலும் கூட, ஒரு வேளை எதிர்பாராத கேள்விகள் அதிகம் வந்தால் அதனையும் எதிர்கொள்ள படி நிலைகள் 6, 7, 8 ஆகியவை உதவும்.
  
படி நிலை 9 :

மூன்று மணி நேர பயிற்சித்தேர்வு எழுதுதல்.

நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வதையும், தேர்வெழுதும் போது உண்டாககூடிய சிக்கல்களையும் கண்டறிய இந்தமூன்று மணி நேர பயிற்சித்தேர்வு உதவும்.

படி நிலை 10:

ரிலாக்ஸ் செய்துக்கொள்ளுதல்.

தேர்வின் போது அதிக சந்தோஷமாக இருந்தாலும், அதிக துக்கமாக இருந்தாலும், அவை தேர்வை பாதிக்கும் என்பதால் ரிலாக்ஸ் செய்துக்கொள்ளுதல் அவசியம்.

டிஸ்கி: 

1.படி நிலைகளின் வரிசையில் படித்துக்கொண்டு வரும் போது, ஒரு வேளை நேரமில்லை என்றால் நேரடியாக ஒன்பதாம் படி நிலைக்கு வந்து விடலாம். (அதற்கேற்ப மதிப்பெண் இருக்கும்)

2.மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்த பதிவினை அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில் ஆதரவளிக்க பதிவர்களை வேண்டுகிறோம்..

நலமறிய விருப்பமில்லை...


நான் பித்தன் பேசுகிறேன். என்னை உங்களுக்கு மறந்திருக்காது. எப்போதும் எதிர்மறையாக யோசிப்பது என் பித்தம்.

என் பித்தத்தை நீங்கள் தெளிய வைப்பீர்கள் என்று நம்பி உங்களிடம் பேச்சு கொடுக்கிறேன். கடைசியில் நீங்களும் என்னை போல மாறிவிடக்கூடாது என்பது என் கவலை.

எல்லா நலம் விசாரித்தல்களும் நமக்கு ஆறுதலை தருகிறதா என்பது தான் பித்தனின் இன்றைய கேள்வி.

ஒரு பெண்ணின் குடும்ப விழாவில் "எங்கே உங்க வீட்டுக்காரர்?" அப்படினு கேட்க்கிறார் ஒருவர். அந்த பெண் சட்டென்று அந்த கேள்வியை சமாளிக்க இயலாது "நான் அப்புறமா சொல்லுறேன் சார்" என்கிறாள். அப்படியும் இவர் விடாமல், தொடர்ச்சியாய் விசாரிக்க , ஒரு கட்டத்தில் அந்தப்பெண் கண்கலங்கி பதில் ஏதும் பேச இயலாது, தன் மகளை இழுத்துக்கொண்டு ஒரு அறைக்குள் சென்று கதவடைக்கிறாள். வெகுநேரம் அந்த அறையின் கதவு திறக்கப்படவே இல்லை. குடும்ப விழா உற்சாகமிழந்தது.

ஒரு கல்யாணம் காட்சி-னு வந்துட்டா இந்த நலம் விசாரிப்பவர்களின் தொல்லை தாங்க முடியாது. "என்னப்பா அடுத்த கல்யாணம் உனக்கு தானே, இத்தனை வயசாச்சு இன்னும் யோசிக்காம இருக்கே"
(அட பாவிகளா, சின்ன வயசுல கல்யாணம் பண்ணுனா, மொளைச்சு மூணு இல விடல.. என்னடா அவசரம் உங்களுக்கு அப்படிங்கிறீங்க)

கூடவே சுத்தறீயே செவ்வாழ நீயாவது சொல்லக்கூடாதா?" இதில கூட வர்றவனை சேர்த்து விரட்டுறது.

(கல்யாண வீட்டுல இத்தன வயாசாச்சே, நீ இன்னுமா கல்யாணம் பண்ணலை கேட்குற ஒருத்தர , ஏதாவது சாவு வீட்டில் பார்க்கும் போது இத்தன வயசாச்சே நீ இன்னுமா சாகல? அப்படினு நம்ம பருத்தி வீரன் திருப்பி கேட்டா என்னாவது?)

"என்னம்மா, கல்யாணமாகி இத்தனை வருஷமாச்சே,இன்னுமா ஒரு புழு பூச்சி இல்லை"
இந்த வார்த்தைகள் காதில் வாங்கும் அந்த பெண்ணுக்கு அன்னிக்கு முழுவதும் நரகமாக இருக்கும். (இவுங்க பாட்டுக்கு பிட்ட போட்டுட்டு போயிடுவாங்க)
 
சில வேளைகளில் இந்த மாதிரியான நலம் விசாரிப்புக்கள் பெயரிலான குத்தல்கள் நீண்டுக்கொண்டே போகும், அவர்கள் குறை என்னவென்று கண்டறிந்து நாம் குத்திக்காட்டும் வரை.

ஒரு ஜெயகாந்தன் சிறுகதை ஒன்று. ஒரு கிராமத்தில் ஒரு மிகப்பெரிய ரவுடி இருந்தான். ஊராருக்கு அவன் கொடுக்கும் துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. உடல் வலிமையால் அவனை வெல்ல முடியாது என முடிவெடுத்த ஊர்மக்கள் அவனை உளவியல் வலிமையால் வெல்ல முடிவெடுக்கிறார்கள். அப்போது முதல் அவனை பார்க்கும் போதெல்லாம், "என்னப்பா உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா?" என விசாரிக்கத்தொடங்குகிறார்கள். "என்னாச்சு, உடம்பு துரும்பா இளைச்சு போச்சு, ஏதாவது பெரிய வியாதியா" என தொடர்ந்து ஊர்மக்கள் விசாரிக்க, விசாரிக்க, இறுதியில் அந்த ரவுடி படுத்த படுக்கையாகிறான்.
கதை சொல்லும் நீதி : அடுத்தவனை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்ல எளிய வழி நலம் விசாரித்தல்...  

யாரும் இங்கே முழுமையான வாழ்க்கையை பெற்றுவிட்டவர்கள் கிடையாது. எல்லோருடைய வாழ்க்கையிலும் மறக்க விரும்பும் விஷயங்கள் என்று ஏதாவது நிச்சயம் இருக்கும். நமது விசாரிப்புக்கள் அதனை கிளறிவிட்டு ரணத்தை அதிகப்படுத்திவிடக்கூடாது.

டிஸ்கி:

புதுசா புடவை கட்டிக்கொண்டு வரும் பெண், புதுசா கார் வாங்கியவர் போன்ற வகையில் இருப்பவர்கள் தங்களை யாரேனும் விசாரிக்க மாட்டார்களா ஏங்குவதும் உண்மைதான்.(புதிய பொருளைப்பற்றி அள்ளிவிட)



*******************************************************************************

தொடர்புடைய பதிவு:

பித்தன் பேசுகிறேன்..



எழுத்தாளர்களின் குழு அரசியல் - நாஞ்சில் நாடன்.



சமீபத்தில் நாஞ்சில் நாடன் அவர்களின் பேட்டி, தினமலரில் படிக்க நேரிட்டது.  அதன் சாராம்சமும், அதனைத்தொடர்ந்து நம் சிந்தனையில் விளைந்த கருத்து கத்திரிக்காய்களும்...

நாஞ்சில் நாடன் சொன்னது:

எல்லா எழுத்தாளர்களும் தங்கள் வாழ்க்கையைச் சார்ந்து, வாழ்ந்த நிலம் சார்ந்துதான் எழுதுகிறார்கள். நானும் அப்படித்தான். ஆனால் என் எழுத்தை நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு எழுத்து என்ற ஒரு வட்டத்திற்குள் நிறுத்துவதை நான் ஏற்கமாட்டேன். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே அந்த வட்டத்தை விட்டு வந்துவிட்டேன்.

ஒரு நாவல் என்பது அந்த எழுத்தாளரின் சுயசரிதம் அல்ல. பல்வேறு சம்பவங்களில் அவனுக்கு நேர்ந்த அனுபவங்கள் என்று சொல்லலாம். என் நாவலில் வரும் கதைமாந்தர்களில் என் அனுபவமும் இருக்கும், முழு பாத்திரமும் நான் அல்ல.

எழுத்தாளனுக்கு யாரும் குரு கிடையாது. ஆனால் பிடித்தமான எழுத்தாளரின் தாக்கம் இருக்கும்.

மற்ற எல்லா மொழி எழுத்தாளர்களிடமும் குழு அரசியல் இருக்கிறது. ஆனால் இங்கு அதிகம். அங்கு காழ்ப்பு இல்லை. ஆனால், இங்கிருக்கிறது. மற்ற மொழிகளில் இரண்டு எழுத்தாளர்கள் சந்தித்துக்கொண்டால் சிகரெட்டை மாற்றிப் புகைக்கும் அளவுக்கு சகஜமாகப் பழகுவார்கள். இங்கு நேருக்கு நேர் பார்த்தால் கூட பேசுவதில்லை.

என் படைப்புக்குள் இந்து வெள்ளாளர் மனம் செயல்படுவதாக அ.மார்க்ஸ் விமர்சித்தது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எழுத்தாளன் சாதி, மதம் அற்றவன்.

இலக்கியம் படைக்க வேண்டும் என்று யோசிப்பேனே தவிர அதை நவீனத்துவத்தில் எழுதுவதாக இல்லை பின்நவீனத்தில் எழுதுவதா இல்லை மேஜிக்கல் ரியலிசத்தில் எழுதுவதா என்று யோசிப்பதில்லை. எனக்கு இந்த இசங்கள் மீது நம்பிக்கை இல்லை. இந்த இசங்கள் தோன்றிய நாடுகளிலேயே தோற்றுப்போனவை. பின் நவீனத்துவம் இறந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. போஸ்ட்மார்டனிசம் இங்கு அவசியமில்லை.

பேட்டியிலிருந்து நாம் கற்றதும் பெற்றதும்:

எழுத்துக்களை விட எழுத்தாளர்கள் அதிகம் கவனிக்கப்படுகிறார்கள்.(விமர்சிக்கப்படுகிறார்கள்). திறமை இருக்கும் இடமெல்லாம் சச்சரவுகளும் உடன்பிறந்தாளாக இருக்கும் போல.

எழுத்தாளர்கள் ஜாதி, மதம் தாண்டியவர்கள். (இருப்பினும் ஏதேனும் வரம்புக்குள், வட்டாரத்திற்குள் சிக்குகிறார்களா என கவனித்து கொண்டே இருக்கிறது இந்த உலகு)

இசங்கள் என்பதெல்லாம் வெறும் பம்மாத்து வேலை. ஆனால் இசங்களின் பெயர்களை எழுத்தாளர்களும், வாசகர்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். (அப்போது தான் மற்றவர்களின் சட்டையை கிழிக்க முடியும், குறைந்த பட்சம் தன் சட்டையை கிழித்துக்கொள்ள முடியும்).

கொசுறு:

எழுத்துகளில் தரம் தாழ்ந்து போகும் போது, அவனுடைய தனிப்பட்ட  வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும் என பெரும்பாலும் கருதப்படுகிறது. (நல்லா இருக்கும் போது????)

தனித்திருப்பவனின் வீதி வழி உலா



அறை எண் 15.
என் அன்பு சாம்ராஜ்யம்.

வகுப்புவாரி பிரிவினை பார்க்காமல்
அங்கிருக்கும்
77 பேரும் எம் மக்கள்..

இது என் உலகம்.

நானே வடிவமைத்த
சின்னஞ்சிறு சொர்க்கம்.

நேரம் ஒதுக்கி
நேசம் குழைத்து
நானே வடிவமைத்த
சின்னஞ்சிறு மனிதர்களுக்கான
கனவுலகம்.

கொஞ்சம் கோபம்
கொஞ்சம் புன்னகை
என்று எனக்குத் தெரிந்த
பாஷையில்
அன்பு பகிர்ந்த இடம்.

இது எனக்கான உலகம்.

எனக்கான வரம்புகள் ஏராளம்
என்பதால்
பாசத்தை மறைத்தே
வைத்த இடம்.

இங்குள்ள சிறிய மனிதர்களை
வெறும் புத்தக புழுவாக
மாற்றாமல்
யதார்த்தையும்
பயின்றுவித்திருக்கிறேன்.

தங்கம் எனக்கு வேண்டாம்;
என நான் மறுத்ததால்
தங்கப்புதையலை எனக்கு
பரிசளிக்க காத்திருக்கிறார்கள்.

எனக்கு மதிப்பெண் மூலம்
மதிப்பளிக்க
காத்திருக்கிறார்கள்.

என்னிடமிருந்து
எட்டி போகும்
இவர்கள்;
ஜெயிக்க
வாழ்த்து சொல்லும் நேரம் இது.

பரீட்சைக்கு மட்டுமல்ல
வாழ்க்கையிலும்
என் மக்கள்
ஜெயிக்க...

"இறைவன் அருள்
துணை நிற்க"

வாழ்த்தி சந்தோஷிக்கும்...

- தாயுமானவன்.

********************************************************************************
இன்று தனித்திருப்பவன்.

தம் மக்களை தேர்வு களத்திற்கு அனுப்பிவிட்டு
தனித்திருப்பவனின் வீதி வழி உலா வந்ததற்கு நன்றிகள்.

அடைக்கும் தாழ் தாண்டி மெல்லிய மௌனம் கசிந்திருப்பதை கணிக்க இயலாதவர்க்கு இது வெற்று வார்த்தைகளின் கோர்வையாக இருக்கலாம்.

எல்லாவற்றையும் எல்லோரும் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு தானே. எனினும் ஒரு சிலரேனும் புரிந்துக்கொள்ளக்கூடும் மக்களற்ற தனிமையின் வலியை.

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்