குறைந்த பட்சம் அதர்மமாவது, அதர்மத்தை அழிக்கட்டும்.



முன்பொரு முறை ராஜபக்சேவுக்கு புற்றுநோய் என்று தகவல்கள் வந்த போது, கொஞ்சமாய் சந்தோஷம் பரவியது   என் உள்மனதில்.

அடுத்தவன் மரணிக்க நினைக்கும் நீயெல்லாம் மனுசனா, மிருகமா என்று நீங்கள் நினைக்கூடும்.

ஒருவனின் மரணத்தை நினைத்த, எதிர்பார்த்த நான் மிருகம் என்றால், ஒரு இனத்தை மரணிக்க வைத்த அவனை என்னென்று சொல்வீர்கள்.

நானும் மனுசன், ராஜபக்சேவும் மனிதன் என்று, ஒரே தட்டில் எங்கள் இருவரையும் நிறுத்தப்படுவதாக இருத்தால், மனிதம் என்ற போர்வையே வேண்டாம் எனக்கு. எனக்கு மட்டுமல்ல இன்னும் பல சாமானியனுக்கும் இந்த எண்ணம் இருக்கும் என்று நம்புகிறேன்.

ராஜபக்சேவுக்கு புற்று நோய் என்றவுடன் கிளம்பிய சின்னதொரு சந்தோஷம் மீண்டும் உருவெடுத்து இருக்கிறது எனக்குள் இப்போது.

தான் விதவையானதால், தமிழ் இனத்தை சார்ந்த பல பெண்களை விதவையாக காரணமாக இருந்த, அன்னை இப்போது ஆஸ்பத்திரியில்.

சத்தம் இல்லாமல் அமெரிக்காவில் சிகிச்சையாம். ஆனால் நிச்சயம் வலித்திருக்கும் தானே?

வலிக்கும் போது என் இன பச்சினம்குழந்தைகள் கூட அனுபவித்த ரணவலி, அந்த "அன்னைக்கும்(???)" உண்டாகியிருந்தால், தெய்வம் என்பது இருக்கிறது என்னும் என் நம்பிக்கை இன்னும் உறுதிப்படும்.

தர்மம், நியாயம் என்று முறைப்படி வாழ்ந்துவிட்டு, இன்று நேசம் தொலைத்து, தேசம் மறந்து, கனவுகள் களைந்து, 1000 ரூபாய் தர்மம்  வாங்கி பிழைக்கும் வண்ணம், வாழ்க்கையின் கசப்புக்களை  நிதம் நிதம் விழுங்கிக்கொண்டிருக்கும் என் இனத்தை நினைக்கும் போதெல்லாம்,

அதர்மத்தை, தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நம்பிக்கை இப்போதெல்லாம் இற்றுப்போய் விட்டது எனக்குள்.

குறைந்த பட்சம் அதர்மமாவது, அதர்மத்தை அழிக்கட்டும்.

இன்னொரு உயிரைக்கொன்று புசிப்பவன் அரக்கன் என்றால்,
என் இனத்தை அழித்து புசித்த, அந்த அரக்கத்தனம் மிக்கவர்களுக்கு வாழ்வில், இறக்கும் போதாவது புரியட்டும் எம்மக்கள் அனுபவித்த கொடுமை எத்தகையது என்று.
 படங்கள்
http://dreambigalwaysss.blogspot.com/2009_05_01_archive.html



வாக்களிக்க மட்டுமே தெரிந்த இன்னுமொரு வாயில்லா பூச்சியின் வார்த்தைகளாய், என் வார்த்தைகள் கோர்வையில்லாது தடுமாறுவது, எனக்கே கூட நன்றாக தெரிகிறது எனினும் என் உணர்வுகள், உங்களுக்கு புரியுமென்று நம்புகிறேன்.

நட்பில் நம்பிக்கை இருக்கிறதா உங்களுக்கு..எனக்கு இல்லை..



உங்களுக்கு நட்பு என்பதில் நம்பிக்கை இருக்கிறது எனில் மிக்க மகிழ்ச்சி.உலகத்தில் இருக்கும் எல்லா உறவுகளை விட சிறந்த உறவு நட்பு தான் என்பது இங்குள்ள பலரின் வாதமும் கூட. நானும் கூட முந்தைய பள்ளி, கல்லூரி நாட்களில் நட்பினை புகழ்ந்து ஏராளமான கவிதைகளும் எழுதி, நட்பு வட்டத்துக்கு பரிசளித்த காலமும் உண்டு.

ஒன்றாகி சந்தோஷித்து, கவலையுற்று, ஒன்றாய் உண்டு உறங்கிய காலமும் உண்டு.

ஆயிரம் நண்பர்களை கொண்ட நட்பு வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று "லட்சியத்தோடு" நடைப்போட்ட நாட்களும் உண்டு.

ஆனால் சமீப காலமாய், நட்பின் மீதான நம்பிக்கை சற்று இற்றுக்கொண்டே வருகிறது. ஆயிரம் எண்ணிக்கை வரை எதிர்பார்த்த நண்பர்கள் புத்தகத்தில், பல பக்கங்களை பணம் கிழித்து விசி விட்டது, சில பக்கங்களை காலம் கலைத்து போட்டு விட்டது.

"தனித்து நின்றால், அதிரடியாய் வரும் புயல் காற்றில் தாக்குபிடிக்க முடியாமல் போய்விடுவதால், தற்காப்புக்காக, பயத்தின் காரணமாக கைக்கோர்த்து இணைந்து நிற்கிறோம். "தனி மரம் தோப்பாகாது" என்று வசனம் பேசுகிறோம்"  என்றொரு பாலகுமாரனின் ஏதோ ஒரு கதாபாத்திரத்தை போலவே என்னுடைய இன்றைய மனநிலை இருக்கிறது.

உங்களுடைய தந்தையின் வயதில் இருக்கும் ஒருவரை ஆராய்ந்து பாருங்கள். அவருக்கு எத்தனை நண்பர்கள் இருக்கக்கூடும் இத்தனை வருடம் வாழ்ந்து விட்டபின்?

நான் வாழ்ந்தது கொஞ்சமே என்ற போதும், உண்மை நண்பர்களை விரல் விட்டு எண்ணும் போது, வலது கையில் கூட, இன்னும் சில விரல்கள் மிச்சமிருக்கிறது எனக்கு.

பணத்தின் பின் ஓடும் இன்றைய வாழ்க்கையில் அதுவும் கூட இன்னும் குறைந்து விடுமோ என்று கவலையாய் இருக்கிறது. அவரவர் கவலைகளையும் , அவரவர் சந்தோஷங்களையும் சின்னதொரு வாழ்க்கை வட்டத்தை அமைத்து, அதற்குள்ளாகவே "உழல" ஆரம்பித்து விட்டோமோ என்று தோணுகிறது.

இரண்டு வருடம் நட்பாய் இருந்த ஒருவரை ஏதேச்சையாய் சந்திக்கும் போது கூட, அரை மணி நேரத்திற்கு அதிகமாய் பேசுவதற்கு விஷயம் இல்லாமல் வாழ்க்கை ஓட்டத்தோடு ஓட வேண்டியதாய் இருப்பது வரமா சாபமா?

நட்பு என்பது வெறுமனே கடந்த காலத்திற்கான அவயமா?

நிகழ்கால பரபரப்பில் கடந்த காலத்தை தொலைத்துவிட்டது தான் நம் சாதனையா?

பள்ளி, கல்லூரி, பணி புரியும் இடம் என்று இடம் சார்ந்து, இப்போதைய காலம் சார்ந்து  நம்முடைய நட்பு வட்டாரம் இருக்கிறதே, ஏன் இடம், தாண்டி காலம் தாண்டி, நட்பால் நிலைக்க இயலுவதில்லை???

காசு இருந்தே போதும், மகிழ்ச்சி இருந்த போது இணைந்திருக்கும் நட்பு,
சாகும் வரை நீடிக்காமல்; துன்பத்தின் போது, தலைமறைவாகி சாகும் வரம் வாங்கிக்கொள்வது இன்றைய நவநாகரீக பாஸ்ட் புட் வாழ்க்கையின் மிச்சமா?

"நட்பின் மேல் நம்பிக்கை இல்லை" என்னும் பில்லா பாடல் வரிகள் இனி தேசிய கீதமாகி விடுமோ என்ற எண்ணம் வந்து விட்டது இப்போது.

இது தவறான சிந்தனை என்று நீங்கள் சொன்னால், உங்களுடைய வார்த்தைகளையும் செவிமடுக்க நானும் தயாராகவே இருக்கிறேன்.

வெறுமனே வாரத்திற்கு ஒரு முறை கூடி, உற்சாக பனம் அருந்தி மகிழ்வதும், குறுஞ்செய்திகள் மூலம் நட்புக்கான வார்த்தைகளை பரிமாறிக்கொள்வது தான் நட்புக்கான அடையாளம் எனில் நான் இப்படியே இருந்து விட்டு போகிறேன். விட்டு விடுங்கள் என்னை.

தனியார் தற்கொலை களங்கள்...ஒரு அதிர்ச்சியூட்டும் பதிவு.


இன்று பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. வழக்கம் போல அரசுப்பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்கள் அதிகம் மதிப்பெண்களை பெற்றியிருக்கிறார்கள்.

ஆனால் வருடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வாங்கிக்கொண்டு இந்த மதிப்பெண்களை தனியார் பள்ளிகள் "வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள்" என்பது தான் உண்மை.

பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களை சேர்க்காமல் கழித்து கட்டி விட்டு, நானூறு அல்லது நானூற்று ஐம்பது மதிப்பெண்களை விட அதிகமான மதிப்பெண்களை பெற்றவர்களை மட்டுமே அட்மிஷன் கொடுத்து, அவர்களை பிளஸ் டூ-வில் அதிக மதிப்பெண்களை பெற வைப்பது தான் சாதனையா?

அரசுப்பள்ளிகளில் எந்த வகுப்பிலும் எந்த மாணவனையும் எப்போது வேண்டுமானலும் சேர்த்திக்கொள்ளவேண்டும் என்பது நடைமுறை. எந்த தனியார் பள்ளியிலாவது, கல்வியாண்டின் பாதியில் ஒரு மாணவனை சேர்த்திக்கொள்வார்களா?

பதினொன்றாம் வகுப்பிலேயே பிளஸ் டூ பாடங்களை நடத்திவிட்டு, இரண்டு வருடம் ஒரு பாடத்திட்டத்தை படிக்கவைத்து, வெறுமனே மதிப்பெண்களை குவிப்பது சரியானதாக உங்களுக்கு தெரியக்கூடும். அந்த வாய்ப்பு ஏன் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.

மிக நன்றாக படிக்கக்கூடிய ஒரு மாணவன் ஒரு பாடத்திட்டத்தை இரண்டு வருடம் படித்து எழுதுகிறான். சராசரி மாணவன் ஒரு வருடம் மட்டும் படித்து எழுதுகிறான். எப்படி இது சமமாகும்?

வெற்றி மட்டுமே குறிக்கோள் என்றால் எப்படி வேண்டுமானாலும் ஜெயிக்கலாமே?

வாரத்தின் ஏழு நாட்களும் வகுப்பு, அதுவும் காலை ஏழு மணி முதல் மாலை ஏழு மணி வரை என்று மாணவர்களின் மண்டைக்குள் பாடங்களை திணிக்க கூடாது என்ற கல்விக்கோட்பாடுகள் எல்லாம் ஒரு சாராருக்கு மட்டும் தானா?

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் கற்பித்தல் என்பதை விட கோச்சிங் எனப்படும் பயிற்சி அளித்தல் என்பதற்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விஷயம் என்னவென்று புரிந்துக்கொள்ளப்படாமல் வெறுமனே மனப்பாடம் செய்து அதனை மதிப்பெண்களுக்காக வாந்தியெடுப்பவர்களைத்தான் தனியார் பள்ளிகள் தயார் செய்து அனுப்புகின்றன என்பதுதான் நடைமுறை உண்மை.

தமிழ்நாட்டிலேயே சிறந்த தனியார் பள்ளி என்று பெயர் பெற்ற பள்ளிகளிலிருந்து வெளிவரும் மாணவர்கள் மருத்துவ, இன்ஜீனிரிங் படிப்புக்களில் ஒன்றும் புரியாமல் தடுமாறுகிறார்கள் என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டும். புரிந்துக்கொள்ளாமல் படித்த அடிப்படைக்கல்வியின் பாதிப்பு இது.

தனியார் பள்ளிகளால் மட்டுமே சாதிக்க முடியும் என்பது உண்மையல்ல. அரசுப்பள்ளி மாணவர்களும் சாதித்திருக்கிறார்கள்.

இன்று டி.வி.பேட்டிகளில் பொளந்துக்கட்டிகொண்டிருக்கும் வசதி வாய்ப்புக்களின் பாதுகாப்போடு ஜெயித்தவர்களை விட, வாழ்க்கையோடும், அது தந்த கசப்புக்களோடும் போராடி, மிக சாதாரணமாக மதிப்பெண்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணவனே உண்மையான சாதனையாளன்.

வறுமையோடு போராடி, ஏழுநூறு மதிபெண்களை பெற்றவனின் சாதனையின் தூசுக்கு கூட இணையாக முடியாது , பணம் தரும் சகல வசதியோடு படித்து ஆயிரத்து நூறு தாண்டியவனின் மதிப்பெண்கள்.

எவ்வளவு உயரம் வந்திருக்கிறான் என்பதை விட, எவ்வளவு பள்ளத்திலிருந்து இந்த உயரம் வந்திருக்கிறான் என்பதை பாருங்கள் சாமானியனின் சாதனைக்கான அர்த்தம் புலப்படும் உங்களுக்கு.

அரசர்களை மட்டும் பதிவு செய்வது தான் சரித்திரத்தின் வழக்கம் என்றாலும், சாமானியனுக்கும் வலி இருக்கிறது என்பதை ஏன் மறக்கப்படுகிறது.

மேலும் கடந்த பதினைந்து ஆண்டுகளாகத்தான் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம், தமிழ்நாட்டில் பல்கி பெருகி விட்டன. இப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகவும், பிரபலங்களாகவும் இருப்பவர்கள் எல்லாம் கார்பரேஷன் பள்ளிகளில் படித்தவர்கள் தான் என்பதை மறந்துவிடக்கூடாது.

மனதை கொன்று விட்டு, இதயங்களை தூக்கில் இட்டுவிட்டு, மூளைக்காரர்களை மட்டும் அனுப்பும் இடங்களை தற்கொலைக்கூடங்கள் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது.

தேர்வுக்கு பிந்தைய கருத்துக்கள்.. தேர்தலுக்கு பிந்தைய அல்ல..


அரசுப்பள்ளிகள் சறுக்குவதற்கான காரணங்கள்:

ஒரு மாணவனின் படிப்புக்கு, அவனது பெற்றோர்களே தடையாய் இருக்கும் சூழ்நிலைகள் சில அரசுப்பள்ளிகளில் இருக்கின்றது என்ற தகவலை உங்களில் எத்தனைப்பேர் ஏற்றுக்கொள்வீர்கள்?

விடியற்காலை எழுந்து தோட்டத்தில் தண்ணீர் கட்டிவிட்டு, பின்னர் பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஏராளம்.

குடும்பச்சூழல் காரணமாகவே அல்லது வேறு பிற காரணங்களுக்காகவோ சனி மற்றும் ஞாயிறுகளில் ஏதேனும் ஒரு வேலைக்கு போய்விட்டு பள்ளிக்கு வரும் மாணவர்களும் ஏராளம்.

இதே போல காலாண்டு, அரையாண்டுத்தேர்வு விடுமுறை நாட்களில் வேலைக்கு போய் கையில் கொஞ்சம் காசு பார்த்துவிட்ட பின், அந்த பணம் சம்பாரிக்கும் சுகம் சுண்டிழுத்ததால் திரும்ப பள்ளிக்கு வராமல் போனவர்களும் ஏராளம் அல்லது ஆண்டின் இறுதி நாட்களில் தேர்வுக்கு மட்டும் வந்து, தலைக்காட்டுபவர்களும் ஏராளம்.
அதிக நேரம் மாணவர்களை புத்தகம் கையுமாக இருக்க வைப்பது, படிப்புக்கும் மாணவர்களுக்குமான தொடர்பினை அதிகரிக்க வைக்கும் என்ற நம்பிக்கையில், தனியார் பள்ளிகள், காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புக்கள் வைக்கிறார்கள், அது போல அரசுப்பள்ளிகளும் செய்யலாமே என்று நீங்கள் எண்ணலாம். நிறைய சிக்கல்களை தாண்டி அதுவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

காலை உணவு சாப்பிடாமல் வரும் மாணவர்களும் இருக்கிறார்கள். வெகு நேரத்தில் வரும் போது அவர்களுக்கு அது மிக சிக்கலாகி விடுகின்றது என்பது நடைமுறை சிக்கலாக இருக்கிறது. இரவு வீடு திரும்பும் வரை தாக்குப்பிடிக்க வேண்டுமே.

என் பையன் தான் ஸ்கூலில் படிக்கிறானே எதுக்கு வீட்டில் படிக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர் கூட இங்கே உண்டு. காலை முதல் மாலை தன் பையன் கூடவே இருந்து, ஒரு நாளைக்கு நான்கு டியூசன் அனுப்பி வைக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இவர்கள் எப்படி போட்டியை கொடுக்க இயலும் என்று தெரியவில்லை.

வீட்டில் அனைவரும் டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போது, அந்த சத்தத்தின் ஊடே படிக்க வேண்டும் என்ற "கஷ்டமான"
நிலைமையெல்லாம் தனியார் பள்ளிகளில் பயிலும் "கனவான் மாணவர்களுக்கு" இல்லை.

வரலாறு போன்ற பாடப்பிரிவு படிக்கும் திறமையுள்ள மாணவர்களை, பக்கத்து வீட்டில் இருக்கும் யாரோ ஒரு புண்ணியவான் வழங்கும் இலவச ஆலோசனையை கேட்டு, இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தோடு போராட விட்டு விடுகிறார்கள்.

பள்ளியில் சேர்ப்பதோடு தங்கள் வேலை முடிந்துவிட்டது என்று பெற்றோர் ஒதுங்கிக்கொள்ள, அந்த மாணவன் இரண்டு வருட நரகத்திற்குள் தள்ளப்படுகிறான்.

மாணவிகளை பொறுத்தவரை பிளஸ் டூ முடித்தவுடன் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் பல பகுதிகளில் இருக்கின்றன. எப்படியும் திருமணம் செய்துக்கொடுக்கத்தானே போகிறார்கள் என்ற மனநிலையில் இருக்கும் இளவயதினருக்கு எப்படி படிப்பில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

ஒரு வித்தியாசமான முரண்பாடும் சில இடங்களில் இருக்கிறது.
குடும்பச்சூழல் எவ்வாறு இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி, கையில் ஒரு செல்போன் சுமப்பது பள்ளி மாணவர்களிடையே  நாகரீகமாக மாறி இருக்கிறது. ஒரு மெமரிகார்டின் "ரகசியங்களுக்குள்" மூழ்கி தன்னுடைய நேரங்களை தற்கொலைக்கு உட்படுத்தியவர்களும் ஏராளம்.(சில மிடில்கிளாஸ் மாணவர்கள் கூட, ஆசிரியர்களை விட
லேட்டஸ்ட் மாடல்செல்போன்கள் வைத்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது)

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பற்றி வைக்கப்படும் விமர்சனங்களிலும் உண்மை இல்லாமல் இல்லை. மனச்சாட்சிக்கோ, மாணவர்களின் எதிர்காலத்திற்கோ பயப்படாமல்  தன்னுடைய தலைமையாசிரியர்களுக்கு மட்டும் பயந்து வேலைச்செய்பவர்களும் இருப்பது தான் வேதனைக்குரிய விஷயம்.

குறைந்தபட்சம் தான் வாங்கும் சம்பளத்திற்காவது பயந்து வேலை செய்யும் நாகரீகம் கூட இல்லாமல் போனது மிக வருத்தமான சூழ்நிலைதான் இங்கே இருக்கிறது. சிலரால் பெரும்பாலான ஆசிரியர்களும் வசவுகளை வாங்கிகட்டிக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டார்கள்.

மிக நேர்மையாக வேலை செய்த கல்வி அதிகாரிகளை, தங்களது "வலுமிக்க" சங்கங்களின் மூலம் அவமானப்படுத்தும் செயல்களும் இங்கே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு குழந்தையின் எதிர்காலம் தன்னை நம்பி ஒப்படைக்கப்படுகிறது என்ற தார்மீக பொறுப்புணர்வு இல்லாத ஆசிரியர்கள் தான் இன்றைய அனைத்து சமூக சீரழிவுகளுக்கும் முழுமுதற்காரணம். '

தங்களின் பிள்ளையை இப்படி பொறுப்பில்லாமல் விட்டுவிட மனசு வருமா இவர்களுக்கு?

நல்ல வழிகாட்டலுக்கு இன்றைய மாணவர்கள் ஏங்கிக்கிடக்கிறார்கள் என்பது தான் நிகழ்கால உண்மை. அதனை கொடுக்க தவறுகின்ற ஆசிரியர்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு துரோகம் இழைத்தவர்களாக மாறுகிறார்கள்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என்னும் இந்த கல்வி முக்கோணத்தில், யார் கடமை தவறினாலும்,. வழிமாறினாலும் பாதிப்பு என்பது நாட்டிற்குத்தான்.

டிஸ்கி:

சொல்லுவதற்கு இன்னும் இன்னும் ஏராளமான காரணங்கள்
இருக்கின்றன.  நீங்களும் உங்கள் பார்வையை பகிரலாமே..

இனி நானே நிரந்தர முதல்வர் என்றால்,அது சொந்த செலவில் சூன்யம் வைத்தது போலத்தான்.

 கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை, கிட்டத்தட்ட ஒரு நம்பியார் ரேஞ்சுக்கு தான் அடிதட்டு மக்கள் அவரை நினைத்திருந்தனர்.   எம்.ஜி.ஆர்.க்கு பிறகு  கடந்த 2006ல் ஆட்சியை பிடித்த பிறகுதான் ஒரு கிலோ அரிசி மற்றும் இலவசங்களின் புண்ணியத்தால் அந்த இமேஜ் கொஞ்சம் மறக்கப்பட்ட நிலையில் இருந்தது.

நகரங்களில் அதிக ஓட்டு வங்கியை வைத்திருந்த  திமுகவை கிராமங்கள் வரை கொண்டு சேர்த்தது இந்த இலவசங்கள் தான்.இலவசங்களால் கிடைத்த நற்பெயரை கிராமங்களில் நுழைவதற்கான,  ஒரு அடையாள அட்டையாக மட்டுமே திமுக பயன்படுத்தியிருந்தால் கூட திமுக தப்பியிருக்ககூடும். அது மட்டுமே தனக்கான ஒட்டு மொத்த வழி என்று திமுக நம்பியது தான் இன்றைய திமுகவின் பரிதாப நிலைக்கு காரணம்.

இலவசங்கள் என்பது  மக்களுக்கு ஓ.கே. தான் ஆனால் அதற்கு விலையாக, மிகப்பெரும் விலையை  மற்ற பொருள்களுக்கு கொடுக்க வேண்டியிருந்தது தான் கொடூரமாக போய்விட்டது.
 

ஒரு ரூபாய் அரிசி வேகுவதற்குள், மற்ற பொருள்களின் விலை, மக்களை வெந்து போக வைத்தது.
                   
முள்ளை முள்ளால் எடுக்கிறேன் என்று திமுகவின் இலவசங்களுக்கு போட்டியாக இலவசங்களை அறிவித்த ஜெயலலிதாவும் கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். இலவசங்கள் உங்களுக்கு எந்த நேரத்திலும் சூன்யம் வைக்கும் விஷயமாக மாறலாம்.


இந்த முறை சொந்த செலவில் திமுக, சூன்யம் வைத்துக்கொண்ட மற்றொரு விஷயம் ஓட்டுக்கு பணம் கொடுத்தது தான்.

இதற்கு முன்  நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வரை கூட, திமுகவினருக்கு திருமங்கலம் பார்முலா கைக்கொடுத்து தான் வந்ததது. காசு கொடுத்து விட்டு வெத்தலையில் சத்தியம்  வாங்குவது என்பது தான் திருமங்கலம் பார்முலாவின் ஹைலைட்டான விஷயம். வாங்கிய காசுக்கு துரோகம் இல்லாமல் ஓட்டு விழுந்து என்னவோ  உண்மை தான்.

ஆனால் இந்த முறை ஓட்டுக்கு பணம் என்பதற்கு, தேர்தல் கமிஷன் வேட்டைக்காரனாக மாற, இந்த வகை பணப்புழுக்கம் குறைந்தது.

அதையும் மீறி கடைசி சில நாட்களில் வழங்கப்பட்ட பணத்தை வாங்கியவர்களும் சத்தியம் எங்களுக்கு சர்க்கரை பொங்கல்,
என்ற பாணியில், தான் விரும்பிய கட்சிக்கே, வாக்களிக்க இப்போது திருமங்கலம் பார்முலா, 108 ஆம்புலன்சில் எடுத்து செல்லப்ப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

மீண்டும் அது கண் விழிக்காத வரை ஜனநாயகத்திற்கு நல்லது.
இனி வரும் காலங்களில் ஓட்டுக்கு பணம் என்பது எடுபடாது என்று நம்பலாம். அரசியல்வாதிகள் நம்மிடம் திருடிய நம் வரிபணத்தை நமக்கு தருகிறார்கள் எனவே இது நமக்கான பணம் தான் என்ற எண்ணவோட்டம் மக்களிடையே வந்து விட்டது.

ஊழல் செய்யும் அரசியல்வியாதிகள் மக்களையும் தங்களைப்போல மாற்ற பரப்பிய தொற்று நோய்  ஓட்டுக்கு பணம் என்பது.

எம்.ஜி.ஆர். காலத்தில் பதினான்கு ஆண்டுகள்  ஆட்சியை இழந்து வனவாசம் இருந்த கருணாநிதி, தமக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தாமல் விட்டது, அவருக்கு மீண்டும் ஒரு ஓய்வை  ஏற்ப்படுத்தி கொடுத்துவிட்டது. இது நிரந்தர ஓய்வா என்பது இப்போது ஜெயித்த ஜெயலலிதாவின் ஆட்சி முறையில் இருக்கிறது.

ஜெயலலிதாவும் தடம் மாறினால் அவரை ஓய்வெடுக்க
மீண்டும் கொடநாடு அனுப்பி விடுவார்கள் என்பதும் உண்மையே.


டிஸ்கி:

செய்வதை எல்லாம் செய்துவிட்டு, கடைசியில் மக்களை சரி செய்துவிடலாம், நாமே தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்று ஏதேனும் ஒரு அரசியல்வாதி நினைப்பார்  என்றால் அவருக்கு விழித்துக்கொண்ட மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்