இறுதி வரி நெத்தியடி...



இயற்கையே...
உன்னிடம் உள்ள சிறந்த மூங்கில் கொண்டு
என் மகளுக்கு இன்னிசை பாடு...
அவளின் கனவுகள் முடிவின்றி நீளட்டும்..

உச்சி வானத்து சூரியனே.,
இரவின் நிலவிடம் குளுமையை
கடன் வாங்கி.,
உன் வெப்பத்தின் வேகத்தை குறைத்துக்கொள்...
என் தேவதை கண் உறங்குகிறாள்..

என் இதயம் போல
வெண்மை காட்டி,
சிலிர்த்திடும் பறவைகளே
உங்கள் இறக்கைகளின் வேகங்களை
கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்..

என் இளவல் தூங்குகிறாள்.

இப்படியாய்...
இன்னுமாய்..
இயற்கையிடம் மட்டுமல்லாது
செயற்கை மனிதர்களிடமும்
என் குழந்தைக்காக வேண்டிக்கொள்ள

ஏ... இரக்கமற்ற இறைவா
எனக்கொரு குழந்தை வரம் கொடு...

கவிதையாக்கம்: 
க.ரேணுகா.

டிஸ்கி:
ரேணுகாவின் கவிதைக்கான பின்னூட்டம்; இந்த பதிவுக்கான  தலைப்பாகி விட்டதால், பின்னூட்டமாக கவிதைக்கான தலைப்பை தர முடியுமா உங்களால்..

டுபாக்கூர் அரசியல் செய்திகள் -இது கலாய்ப்பு சிறப்பிதழ். சிரிக்க மட்டும்..


டுபாக்கூர் டிவியின் "சிறப்பு சிரிப்பு செய்திகள்" வழங்கி வாசிப்பது வக்கீல் வண்டுஊஊ முருகன்...

தனிக்கோர்ட்டு நீதிபதிகளுக்கு ஜெயலலிதா புதிய சலுகை அறிவிப்பு:

தன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க மறுத்த பெங்களூர் தனிக்கோர்ட்டு நீதிபதிகள், சென்னை வந்து, தன் முன் நேரில் அஜராகி விசாரிக்க விரும்பினால் தான் முழு ஒத்துழைப்பு வழங்கப்போவதாக ஜெயலலிதா அறிவிப்பு.

கோத்தபய- மன்மோகன் ரகசிய சந்திப்பு:

ராஜபக்ஷே மற்றும் சோனியா ஆகியோர்க்கு புற்று நோய் என்று பரவிவரும், மருத்துவமனை செய்திகளால், அவர்களுக்கு "தமிழர் தர்மம் வெல்லும், மீனவர் சாபம் கொல்லும்" என்னும் பாடலை விடாது கறுப்பு இயக்கத்தினர் அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையில் கோத்தபய- மன்மோகன் நேற்று கோவாவில் ரகசியமாக சந்தித்து, திண்ணை காலியாக போகும் மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்ந்துள்ளதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

ராமதாஸ் அறிவிப்பால் பன்னாட்டு பொருளாதாரம் பாதிப்பு:

49 ஆண்டுகள் தமிழகத்தை சீரழித்த திராவிடக் கட்சிகளை ஒழிப்பது தான் நம் முதல் வேலை என மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறைக்கூவல் காரணமாக ஏற்பட்ட பயத்தால் , தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள், தம்முடைய கட்சியின் பெயரில் உள்ள திராவிட என்னும் வார்த்தையை "தார்" ஊற்றி அழிக்க முற்பட்டுள்ளதால், உலகச் சந்தையில் தார் விலை கிடுகிடுவென உயர்ந்தது. எதிரொலியாக பங்கு சந்தை, பத்தாயிரம் புள்ளிகள் உயர்ந்து, அழகிய "கோலமாக" மாறியது.

சச்சின்... சச்சின்...சச்சின்..

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சச்சின் நூறாவது நூறு அடிப்பார் என காத்திருந்து, காத்திருந்து, நூறு டிகிரி அளவுக்கு காய்ச்சல் கண்ட நூறு பேர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனுமதி.

ஸ்விஸ் வங்கி பணம் - கலைஞர் காட்டம்.

ஸ்விஸ் வங்கியில் தமக்கு கணக்கு இருப்பதாக செய்தித்தாள்களில்
வெளிவந்த செய்தியை கலைஞர் கடுமையாக சாடியுள்ளார். சொந்த பேங்கில் எனக்கு கணக்கு வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அழகிரி தனது குடும்பத்தாருடன் லண்டனுக்கு "எஸ்" ஆகலாம்
என்ற பீதியின் காரணமாகவே கலவரம் உண்டானது என்ற செய்தியும் ஆளும் அதிமுக அரசால் பரப்பபட்டதே - கலைஞர்

மண்ணுமோகனுக்கு தமிழக மக்களின் கேள்வி:

வெறும் ஒண்ணரை கோடி மக்களை கொண்டுள்ள இலங்கையின் வெத்து பய, ஏழரை கோடி மக்களின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிண்டலடித்திருப்பது மண்ணு மோகனின் , மத்திய அரசுக்கு ஏன் தீவிரமான விஷயமாக தோன்றவில்லை. இந்திய இறையாண்மை என்னும் ரோஷம் தமிழுணர்வாளர்களுக்கு எதிராக மட்டுமா?

ஹசாரேவும் பற்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

என்னைப்பொறுத்தவரையில் அன்னா ஹசாரேவும் ஊழல்வாதி
தான். ஆதலால் அவருக்கு காங்கிரசில் சேரும் எல்லா தகுதியும் வந்துவிட்டது. ஆகவே ஆண்ட வெள்ளையர்களை விரட்டிவிட்டு, ஆளும் கொள்ளையர்களாக இருக்கும் காங்கிரசுக்கு ஆதரவாக உண்ணும் விரதம் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அப்படி அவர் காங்கிரசில் இணைந்தால் தங்கபாலும், நானும் ஒற்றுமையாகி ஒரே கோஷ்டியாக, புதிய தமிழக காங்கிரஸ் தலைவரை எதிர்ப்போம்.

அண்மைச்செய்தி:

ஜெயலலிதாவின் சுதந்திர தின விழா உரை:

சமச்சீர் கல்வியை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வகையில், அரசுக்கு உண்டான அனைத்து செலவுகளையும், தனது கழக ரத்தத்தின் ரத்தங்கள் சார்பில் தானே அரசுக்கு வழங்க உள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். (சமூக நீதி காத்த வீராங்கனை பட்டத்தை மீண்டும் ஒரு முறை ஜெயலலிதாவுக்கு வழங்க, வீரமணியார் இந்த அறிவிப்பை பயன்படுத்திக்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது)

அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..


மீண்டும் வெடித்தது சமச்சீர்கல்வி பிரச்சனை: இப்பவே கண்ணைக்கட்டுதே..



ஒரு வழியாக சமச்சீர் பாடத்திட்டத்தினால் உண்டான பிரச்சனையை உச்சநீதி மன்றம் வரை சென்று, தீர்த்துக்கொண்ட சமயத்தில், அடுத்ததாக தனியார் பள்ளிகளின் "பெயர்" காரணமாக மீண்டும் நீண்டதொரு விவாதம் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் மெட்ரிக் பாடத்திட்டத்தினை பின்பற்றும் தனியார் பள்ளிகளின் பெயரில் இருக்கும் "மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்" என்பதில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என்று மெட்ரிக் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சமமான பாடத்திட்டம் கொண்டு வரப்பட்ட பின் அனைத்து பள்ளிகளும் சமம் என்ற நிலையை உறுதிப்படுத்த, தனியார்களால் நடத்தப்படும் பள்ளிகளின் பெயரில் இருந்து, மெட்ரிக் என்னும் வார்த்தையை நீக்க வேண்டும், மெட்ரிக் என்றொரு பாடத்திட்டமே இல்லாத நிலையில் ஏன் பெயரில் "மெட்ரிக்" என்பது நீடிக்க வேண்டும் என்பது சமச்சீர் கல்வியாளர்களின் கருத்து.

மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் என்னும் பெயரை, பெயரளவில் வைத்துக்கொண்டு அதன் மூலம் மீண்டும் கட்டணக்கொள்ளையில் தனியார் பள்ளி முதலாளிகள் ஈடுபடுவார்கள் என்பது அவர்களின் வாதம்.

இந்த விஷயத்தில் தமிழக அரசால் தாங்கள் கட்டாயப்படுத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு போட இருப்பதாக தற்போது தனியார் பள்ளிகள் முடிவெடுத்துள்ளன.

உண்மையில் சமச்சீர் கல்வி குறித்த முனைவர்.திரு.முத்துக்குமரனின் பரிந்துரைகள் மொத்தம் 109. அதில் ஒன்றுதான் பொதுப்பாடத்திட்டம். தற்போது சமச்சீர் பாடத்திட்டம் என்ற ஒன்று மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்கே அரசியல் சாயம் பூசப்பட்டதால் நீண்ட இழுபறியாகிவிட்ட்து.

அடுத்தடுத்த கட்டத்திற்கு இன்னும் ஏராளமான சிக்கல்கள் உண்டாகும் என்பதற்கான அறிகுறியே இப்போதைய பெயர் மாற்ற பிரச்சனை. இதற்கும் தெளிவான முடிவு செய்யப்பட்டால் தான் உண்மையில் சமச்சீர் கல்வி வந்ததாக அர்த்தம்.

மெட்ரிக் என்னும் வார்த்தையை இதுவரை பயன்படுத்தியதே தவறு என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். ஏனெனில் மெட்ரிக் என்னும் வார்த்தைக்கு மேற்படிப்புக்கு தகுதி பெறுவதற்கான நுழைவுத்தேர்வு என்பது தான் உண்மையான அர்த்தம். ஆனால் இப்போது நுழைவுத்தேர்வு என்ற வகையில், மாநில பாடத்திட்டத்தின் ஆண்டு இறுதித்தேர்வு மட்டுமே கணக்கில் கொள்ளப்படுவதால் ஏதற்காக அந்த பெயரை வைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு தரப்பினர் முன் வைக்கும் வாதம்.

பெயரில் என்ன இருக்கிறது என்று விட்டுவிட்டால், பள்ளிக்கல்வியில் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் இன்னும் அதிகரித்து , அவர்களின் கல்வி வியாபாரம் கொடி கட்டி பறக்கவே செய்யும் என்ற வாதத்தினையும் புறம் தள்ளிவிட முடியாது. ஏனெனில் கடந்த பத்து,பதினைந்து ஆண்டுகளில் தனியார் பள்ளிகள் அடைந்த "அசுர வளர்ச்சி" மிக அதிகம். (பள்ளிக்கட்டணம் அதிகரித்த அளவும் மிக அதிகம்)

இப்போது கூட சமச்சீர் கல்விக்கான ஆங்கில வழி பாடபுத்தகங்களை தனியார் பதிப்பகங்களின் மூலம் பெறப்போவதாகவும், தமிழ் வழி பாடப்புத்தகங்களை மட்டும் தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளன.

பாடத்திட்டம், கல்வி அமைப்பு, கட்டட வசதி, ஆசிரியர்கள் எண்ணிக்கை, மாணவர்களுக்கான ஆய்வக வசதிகள் என எல்லா வகையிலும் சமச்சீர் நிலை வந்தால் மட்டுமே உண்மையில் சமச்சீர் கல்வியை தமிழகம் அடைந்ததாக அர்த்தம். இல்லையெனில் அது வெறும் சமரச கல்வித்திட்டமாக மட்டுமே இருக்கும்.

எது எப்படியாலும், இந்த முறை எழுந்துள்ள பெயர் பிரச்சனையால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவது இல்லை என்பது கொஞ்சம் ஆறுதல் அளிக்கப்படக்கூடிய விஷயமாகும்.

அரசியல் மங்காத்தாவில் உயிர்த்தெழுகிறதா திமுக? - அசால்ட்டு ஆறுமுகத்தின் அதிரடி அலசல்.



கட்சி ஆரம்பித்த பிறகு இப்படியொரு தோல்வியை சந்தித்ததில்லை என்ற அளவு சென்ற சட்டமன்ற தேர்தலில் மரணஅடி வாங்கிய திமுக இப்போது கொஞ்சம் ஐ.சி.யூ.விலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படும் வகையில்; சமச்சீர் கல்வி பற்றிய உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தெம்பாகியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பரபரக்கின்றன.

"இது யாருக்கும் வெற்றி தோல்வி அல்ல" என்று கலைஞர் சொல்லிக்கொண்டாலும், உச்சநீதிமன்ற தீர்ப்பு திமுகவின் வெற்றி என்று நிரூபிக்கும் முயற்சியில், திமுக தொண்டர்கள் இறங்கியதை மறுக்க முடியாது. பட்டாசு வெடித்து, லட்டு கொடுத்து, சமச்சீர் கல்வி தீர்ப்புக்கு "கறுப்பு வெள்ளை சாயம்" பூசும் முயற்சி தமிழகமெங்கும் நடந்தது.

கலைஞர் டிவியும் பொதுமக்கள் உற்சாகம், தமிழகமெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் என்று செய்திகளில் "கொண்டாடி" உற்சாகமானது.

பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்த திமுகவுக்கு, செயற்கை சுவாசமளித்த புண்ணியம் ஜெயலலிதாவுக்கே.

சமச்சீர் கல்வி விவகாரத்தை தவிர்த்து விட்டு, திமுக எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஸ்டாலினின் நடவடிக்கைகளை வைத்தே அளந்து விடலாம்.

தேர்தலின் போது ஊர் ஊராக சென்று, சென்று பிரச்சாரம் செய்த ஸ்டாலினுக்கு அந்த களைப்பு தீரும் முன் அடுத்த தொடர்பயணம் செல்ல வேண்டிய சூழல்.

கோவை சென்று வீரபாண்டி ஆறுமுகம், ப.ரங்கநாதன் மற்றும் ஜெ.அன்பழகன் ஆகியோரை பார்த்து விட்டு, பாளையங்கோட்டை வழியாக, தற்போது திருச்சியில் அவரின் முதல் கட்ட "ஊர் சுற்றலாம் வாங்க" நிகழ்ச்சி முடிவடைந்திருக்கிறது.

அடுத்தாக திஹார் செல்லக்கூடும். அவரின் இரண்டாம் கட்ட பயணத்தை ஜெயலலிதா தான் முடிவு செய்ய வேண்டும். (அடுத்த கைது யார் என்பதை அவர் தானே முடிவு செய்ய வேண்டும்)
அண்மைச்செய்திகளின் படி, அடுத்ததாக தூத்துக்குடி செல்ல நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாலினின் இந்த தொடர் ஓட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது அண்ணன் அழகிரி தான். அவர் வீரபாண்டி ஆறுமுகத்தை பார்த்து, சிறையில் பார்த்து விட்டு வந்த பின்னர் தான், ஸ்டாலினும் கியர் மாற்றி கிளம்ப தயாரானார் என்பது ஊரறிந்த பெரிய குடும்பத்து ரகசியம்.

இக்கட்டான இந்த சூழ்நிலையில், திமுகவுக்கு கொஞ்சம் உதவிய சமச்சீர் ஆயுதமும் உச்சநீதி மன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்து விட்டது.

திமுக-வின் ஒரே பிரம்மாஸ்திரமாக இருந்த சமச்சீர் கல்வி என்னும் ஆயுதம் இப்போது காலாவதியாகி விட்டது என்பது தான் உண்மை.

திமுக-வின் அடுத்த போராட்டம் என்பது சிறை நிரப்பும் போராட்டம் தான். அதனை கிட்டத்தட்ட ஜெயலலிதாவே தற்போது நடத்திக்கொண்டிருக்கிறார்.

கட்சியினர் மீதான அடக்குமுறைக்கு எதிராக போராடுகிறோம் என்று கிளம்பினால், நிச்சயம் அதற்கு மக்கள் ஆதரவு கிடைக்காது என்பது தான் எதார்த்தம்.

 "ஆட்சியில் இருக்கும் போது பதவி சுகத்தை அனுபவித்தார்கள், இப்போது சிறைச்சாலை சோகத்தை அனுபவிக்கட்டுமே.... வினை விதைத்தவர்கள்; வினையை அறுக்கிறார்கள்... இதில் பரிதாபப்பட இருக்கிறது" என்ற மனநிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள்.

மக்கள் பிரச்சனைக்காக போராடலாம் என்றால், தற்போது மக்களுடைய பிரச்சனைகளாக இருக்கும் விலைவாசி உயர்வு, ஊழல், இலங்கை பிரச்சனை, மீனவர் பிரச்சனை என்ற எதற்கும் திமுக முன் நிற்க முடியாது. இந்த பிரச்சனைகளின் காரணமாகத்தான் திமுகவுக்கு ஓய்வு கொடுத்து, முக்காடு போட்டனர் மக்கள்.

ஆட்சியில் இல்லாதபோது கட்சியை நடத்தி செல்வது என்பது தான், ஒரு தலைவனுக்கு சவாலான விஷயம். ஆட்சியில் இருந்தால் கூட அதிருப்தி ஆட்களுக்கு, வாரியத்தலைவர் பதவியாவது கொடுத்து, வாரியணைத்து போகலாம். இப்போது என்ன செய்ய முடியும்?

மொத்ததில் அரசியல் மங்காத்தாவில், இனி திமுகவின் அடுத்த கட்டம் என்பது ஜெயலலிதா செய்யப்போகும், தவறான ஆட்டத்தை மட்டுமே நம்பியிருக்கிறது.

அரசியல் வித்தகர், நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையை, பல்வேறு விதமான பிரச்சனைகளை தாண்டி வந்தவர் என்ற பின்புலங்களை கொண்ட கலைஞர், தற்போது ஜெயலிலிதாவின் அடுத்த தவறுக்காக காத்திருந்து தான் அரசியல நடத்த வேண்டும் என்ற நிலையில் இருப்பது அந்த மூத்த அரசியல்வாதிக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டமே.

அம்மா, சும்மா இருப்பாரா இல்லை அய்யாவுக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அன்புடன்
அசால்ட்டு ஆறுமுகம் (அரசியல் பிரிவு)
படங்கள் :விகடன் 

ஞானம் பிறந்த கதை - கவிதையாகிய போது...


கடவுளைத் தேடித் தேடி 
தேய்ந்து போனது
கால்கள்.


காண முடியாமல்
காய்ந்து போயின 
கண்கள்.


இறுதியில் இமைகளை
மூடிக்கொண்டு 
தேடினேன்.


ஞானம் பிறந்தது....


பத்து மாதங்களாய் 
கருவறையில்
காத்து
பெற்று 
வளர்த்த 
தாயே கடவுள்!



கவிதையாக்கம்:
ம.புவனேஸ்வரி
பதினொன்றாம் வகுப்பு மாணவி







விளம்பரம்:
நாளை சூடான அரசியல் அலசல் 








ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்