குழம்பியதே தெளியும் - பாலகுமாரன் # இதன் தொடர்ச்சியாய் சிந்திக்க

ஒரு விஷயத்தை எப்படி எதிர்கொள்வது? இங்கே என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? எதற்கு நான் யோக்கியதையானவன். எதற்கு யோக்கியதை இல்லை என்றெல்லாம் நான் என்னுள் தெளிவாக்கிக் கொண்டேன்.

 பெண்களை வெறித்துப் பார்ப்பதிலிருந்தும், தேவையில்லாமல் பேசி வழிவதிலிருந்தும் நான் கவனமாகத் தப்பித்தேன். இதனால் இது பற்றியே பேசுகின்ற நண்பர்களிடமிருந்தும் நான் அப்புறப்படுத்தப்பட்டேன். இவையெல்லாம் இருந்தால்தான் நார்மலான ஆள். இல்லையெனில் அப்நார்மல் என்று என்னுள் ஏற்றினார்கள்.
இம்மாதிரி விஷயங்களில் மாட்டிக்கொண்டு முழித்தவர்களும், அவமானப்பட்டவர்களும், அடிதடிகளில் இறங்கியவர்களும், சிறை சென்றவர்களும், வாழ்க்கையைத் தொலைத்தவர்களையும் நான் கூர்ந்து கவனித்து என் இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டேன். நான் முன்னால் செய்த தவறுகளும் மிகுந்த உதவி செய்தன. நண்பர்கள் நெருக்கம் அதிகமில்லாததை நான் பயன்படுத்திக்கொண்டேன்.

அதிகம் படிக்கத் துவங்கினேன். இலக்கியமும், கடவுள் தேடலும் அருகருகே இருந்தன.

இலக்கிய நண்பர்கள் பலபேர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தார்கள். அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாகக் காட்டிக்கொண்டார்கள்.

கடவுள் என்பது தன்னைத் தேடுதலே என்ற கொள்கை தெளிவாக இருக்க, நான் படிக்கின்ற புத்தகங்கள் தன்னைத் தேடுதலுக்கு அருகேதான் இருந்தன. வெளிப்பார்வைக்கு நான் பிளவுபட்டதுபோல் தோன்றினும் உண்மையில் நான் பிளவுபடவில்லை.

ஆன்மிக சம்பந்தமான உணர்வை அது அதிகரித்தது. மரணம் பற்றி சிந்திக்கும்போது எது நான் என்ற கேள்வியும் எழுந்தது. இவை எல்லாமும் கலந்துகட்டிய ஒரு குழப்பவாதியாக என் வாலிபப் பருவம் நகர்ந்தது. குழம்பியதே தெளியும் என்பது மகா வாக்கியம். அது விஷாத யோகம். இது குழப்பத்திலிருந்து தெளிவு பெறுகின்ற விஷயத்தை சொல்லுகின்ற வார்த்தை. நான் தெளிவேன் என்ற நம்பிக்கையும் எனக்கு திடமாக இருந்தது.
-பாலகுமாரன்.

0 கருத்துரைகள்:

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்