யார் தான் நிரப்புவது இந்த வெற்றிடத்தை..

                                         
எங்கே போனார்கள் கதைச்சொல்லிகள்...
முன்பெல்லாம் வீடுகளில் தாத்தா, பாட்டிகள் இருந்தார்கள். அவர்கள் குழந்தை
கள் வளர்ப்பில் பெரும்பங்கு வகித்தார்கள். 

தாத்தா, பாட்டிகள் சொன்ன கதைக் கேட்டு வளந்த பிள்ளைகள்,
பிற்காலத்தில் இலக்கிய, அறிவியல் துறைகளில்  சிறந்து விளங்கினார்கள். இன்றைய வாழ்க்கைச்சூழலில் கூட்டுக்குடும்பங்கள் மாறி , பெரும்பாலும் தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட சூழலில் கதைச்சொல்லிகளாக,கலைச்சொல்லிகளாக இருந்த  தாத்தா, பாட்டிகள் தொலைந்துப் போய் விட்டதாகவே தெரிகிறது. 
                                 
சிட்டுக்குருவிகள் இன்று வழக்கொழிந்துப் போனதைப் போலவே இதையும் வெறுமனே விட்டு விடவும் தமிழ்ச்சூழல் தயாராகி விட்டதாகவே தோன்றுகிறது. 

மாறிவிட்ட வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், பாஸ்ட் புட் கலாச்சாரம் ஆகியவற்றால் இனி வரும் தலைமுறையினர் தாத்தா, பாட்டி ஆகும் வரை உயிரோடிருப்பார்களா என்பதே கேள்விக்குறியாகி விட்டது.
 

கதைச்சொல்லிகள் இருந்த அந்த வெற்றிடத்தை இனி வரும் காலங்களில் யார் நிரப்புவது?.
 



முன்பெல்லாம் கெட்டவிஷயங்கள் வாசற்படியேறி, கதவைத்தட்டி உள்ளே நுழைந்தது என்றால், இப்போது எல்லா விஷங்களும் நேரடியாக, சாட்டிலைட் வழியாக, வரவேற்பறை நுழைவதால் தொலைக்காட்சிகள் நல்ல கதைச்சொல்லியாக இருக்க முடியாது எனத்தோன்றுகிறது.

தங்கள் குழந்தைகளுக்கு பொருளாதார பாதுகாப்பு அளிப்பதையே வாழ்நாள் லட்சியமாகக் காட்டிக்கொள்ளும் பெற்
றோர்களுக்கு அவர்களுக்குள்ளே பேசிக்கொள்வதே பெரும்பாடாகிவிடுமோ   
 என்ற சூழல் கூட விரைவில் வந்து விடும் .


கதைச்சொல்லியாக இருக்க அதிக வாய்ப்புக்களைக் கொண்டுள்ள ஆசிரியர்களோ, கதைச்சொல்லியாக இல்லாமல் , மற்றவர்களை புறஞ்சொல்லிகளாகவும், தம் மாணவர்களை குறைச்சொல்லிகளாகவும் மாறிவிட்டனர் என்பது பொதுவான குற்றச்சாட்டு. 


அட கடவுளே..

யார் தான் கதைச்சொல்லி என்ற வெற்றிடத்தை  நிரப்புவது?

விஷம் பரப்பும் ஊடகங்கள், பணத்தின் பின் ஓடும் பெற்றோர்கள், பாடத் திட்டம் தடுக்கி விழும் ஆசிரியர்கள்;யார் தான் மாறவேண்டும் இனிவரும் நாட்களில்..


யார் தான் நிரப்புவது இந்த வெற்றிடத்தை..

தனியாய் தனக்குத் தானே கதைச்சொல்லிக் கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலை நாளைய குழந்தைக்களுக்கு வந்து விடுமோ..

தோல்வி நிலை என நினைத்தால்...

                                       
தோல்வி என்றால் உங்களிடம் சரக்கு இல்லை
என்று பொருள் இல்லை;


வேறு யுக்திகளைக் கையாள வேண்டிய அவசியத்தை
உணர்ந்து விட்டீர்கள் என்று பொருள்.

தோல்வி என்றால் வாழ்க்கையே வீணாக்கிவிட்டதாகப்
பொருள் இல்லை;
மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பொருள்.

தோல்வி என்றால் விட்டுவிட வேண்டும்
என்று பொருள் அல்ல;
இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும்
என்று பொருள்.

தோல்வி என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல;
அடையக் கொஞ்சம் தாமதமாகலாம்
என்று பொருள்.

தோல்வி என்றால் கடவுள் உங்களை கைவிட்டு விட்டார் என்று பொருள் அல்ல;
உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார்
என்று பொருள்.

- ஜுனா ஆக்னியஸ்.ஜெ.
   பன்னிரெண்டாம் வகுப்பு இ பிரிவு.

வாழ்த்தலாம் வாங்க...

இன்று பிறந்த நாள் காணும் எங்கள் வேதியியல் ஆசிரியை லீலா மகேஸ்வரி அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

கனிவும், கருணையும், அதீத கடமை உணர்வும் உடைய ஆசிரியர்கள் எல்லோர்க்கும் வாய்ப்பதிலை.

அப்படிப்பட்ட, எங்கள் நலனில் மிக அக்கறைக் கொண்ட லீலா டீச்சரின் பிறந்த நாளில் அவர் வாழ்வில் எல்லா வளமும் பெற வாழ்த்தி சந்தோஷிக்கிறோம்.

-பன்னிரெண்டாம் வகுப்பு    மற்றும்                                    

பதினொன்றாம்  வகுப்பு    அ1,,ஆ பிரிவு மாணவிகள்.


எங்கள் வாழ்த்தை வலையுலகமும் வழிமொழியட்டும்.


(சென்ற பதிவால் உண்டான கோபத்தை இதில் காட்டவேண்டாம்)

இந்தப் பதிவு உடனடியாக நீக்கப்பட நேரிடலாம். சில மணித்துளிகளுக்குள் வந்துப் பாருங்கள்.


ஆன் லைனில் இருப்பவர்களுக்கு ஒரு அழைப்பு.


































வலைப்பதிவர்களும் தமிழக முதல்வராக எளிய வழி...

இந்த வார ஹிட் செய்தி:

தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயித்த குழுவின் தலைவர் நீதிபதி கோவிந்தராஜன் ராஜினாமா.
(உடல்நலத்தைக் காரணம் காட்டியுள்ளார்).
நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டண விபரம் 21-10-10 அன்று தமிழக அரசின் www.tn.gov.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. குழுவுக்கு போதுமான விபரங்களைத் தெரிவிக்காத 532 பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இந்த வார ஹைக்கூ:

தாய்ப்பால் கேட்காமல் 

தாயைக் கேட்டது
குப்பைத் தொட்டி குழந்தை
- தென்றல் நிலவன்.
 


இந்த வார அதிர்ச்சி:

கட்டுமானப் பொருள்களில் மிக முக்கியமாவையான சிமெண்ட், செங்கல், முறுக்கேற்றப்பட்ட கம்பிகள் விலை கடந்த ஒரு மாதத்தில் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. 50 கிலோ சிமெண்ட் விலை ரூபாய் 145 லிருந்து திடீரென ரூபாய் 300 ஆக தமிழகத்தில் உயர்ந்துள்ளது. ஆனால் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிமெண்ட்டின் விலை, இறக்குமதிச் செலவு, சுங்க வரி உள்பட ரூபாய் 190.  ( எந்த வித காரணமும் இன்றி ஏன் இப்போது விலை உயர வேண்டும் என்பது பலரின் கேள்வி).

 

இந்த வார கருத்து:
 
டாட்டா, பிர்லா யாராக இருந்தாலும் கடன் தான் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துகிறது. புத்திசாலிகள் சேமிக்கிறார்கள், அதி புத்திசாலிகள் கடன் வாங்குகிறார்கள்.

-ப.சிதம்பரம்.

இந்த வார கலாட்டா:

                                                
                                             
விஜய் நடிக்கும் காவலன், அஜித் நடிக்கும் மங்காத்தா ஒரே நேரத்தில் தயாராகி வருவதால் வலைப்பதிவர்கள் உற்சாகம்.

(கலாய்க்க மேட்டர் ரெடி) 

இந்த வார தகவல்:

உங்கள் செல் போன் எண்ணிலிருந்து உங்களுக்குத் தெரியாமல் SMS, போன் செய்ய முடியும்(ஹேக்கிங்). குறிப்பிட்ட இணையதளத்திலிருந்து புதிய பாடல்களை அல்லது மென்பொருளை பதிவிறக்கம் செய்ய அழைக்கும் SMS உங்கள் செல்போன்களுக்கு வரும்போது கவனமாக இருங்கள்.
கொசுறுத் தகவல்: உலகிலேயே அதிக அளவு செல்போன் நுகர்வோரைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. மொத்தம் 67 கோடி இணைப்பு
பேசு இந்தியா பேசு... 

இந்த வார குழப்பம்: 

அடுத்ததாக நாங்கள் வெளியிட இருக்கும் பதிவு எங்களின் ஐம்பதாவது இடுகை. அதனை வித்தியாசமாக அமைக்க எங்கள் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.(அது வேற யாருமில்ல,பாரதி ஆறாம் வகுப்பு ஆ பிரிவு) என்னப் பண்றது? 
நீங்க தான் பிரபல வலைப்பதிவராச்சே ஒரு ஐடியா சொல்லுங்கோ...

 இந்த வார உதிரிப்பூக்கள்: 

தூங்கும் போது குறட்டை விடுவதும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனையே. குண்டாக இருப்பது, துரித உணவு, வாழ்க்கை முறை மாற்றங்களால் இப்பிரச்சனை ஏற்படுகிறது.

உலகிலேயே முதல் முறையாக 15 வயது இத்தாலிய சிறுவனுக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது.பேட்டரி சார்ஜ் உதவியுடன் இயங்கும் இந்த ரோபோ இதயத்துடன் 25 வருடங்கள் வாழ முடியும். 
ராஜாஜியும், அண்ணாவும் சட்டமேலவை உறுப்பினராகித்தான் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தனர். (சட்ட மேலவையில் பட்டதாரித் தொகுதிகள் போன்று வலைப்பதிவர்களுக்கென்று தொகுதிகள் உருவாக்கப்படுமா?)

டிஸ்கி:1
இந்தப் பதிவின் முதல்  கருத்துரையைப் பார்க்கவும்.

சத்தம் போடாதே... -நந்தினி.B.

           
சப்தம் போடாதே தென்றலே….
என்  அம்மா உறங்குகிறாள்.

கத்தாதே குருவியே,
பாடாதே இளங்குயிலே,
என் அன்பு அம்மா உறங்குகிறாள்.

வெளிச்சமாய் வீசாதே வெண்ணிலவே
சீக்கிரம் மேகத்திற்குள் சென்று மறைந்துக்கொள்.

ரீங்காரத்துடன் தேன் உறிஞ்சும் வண்டுகளே
உங்கள் பாடல்களை நிறுத்திக்கொள்ளுங்கள்.

ஏய் பேய் போல வேகமாய் காற்றிலாடும் ஊஞ்சலே
பூனைப் போல் மெதுவாய் நகர்ந்துச் செல்
என்  அம்மா உறங்குகிறாள்

தாமரை, நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி கவிதைகள்

                     
இது நான் எழுதியிருக்க வேண்டிய கவிதை 
என படிப்பவரை யோசிக்க வைத்து,
வாசகர்களை எளிதில் ஈர்க்கும் நா.முத்துக்குமார், 
விகடன் தீபாவளி மலரில் எழுதியிருக்கும் கவிதை 
"ஏழு பள்ளிகளில் படித்தவன்''. 
இயல்பான நடையில், ஒரு வார்த்தைக் கூட 
மிகையில்லாது நீள்கிறது. 

//ஏழு பள்ளிகளில் படித்த
ஆர்.எஸ். கேசவன்
எட்டாவது பள்ளியாக
எங்கள் வகுப்புக்கு
வந்து சேர்ந்தபோது
அரையாண்டு விடுமுறை முடித்து
நாங்கள்
முழு ஆண்டு ஜூரத்தில் இருந்தோம்//

//சொல்வதற்கும் அவனிடம்
ஏராளம் கதைகள் இருந்தன
கேட்பதற்கு எங்களிடம்
இரண்டே இரண்டு
காதுகள் மட்டுமே//

//ஒன்பதாவது பள்ளிக்கு
எங்களைச் சுருட்டி
கதையாக மாற்றி
சிரித்தபடி போனான்//

இயற்கைக்கு பரிசளிக்கப்பட்ட செயற்கை மரணம்...

கடவுள் படைத்த இயற்கையை
ரசித்து எழுத எண்ணமிட்டேன்
..
நான் வார்த்தைகளைக் கோர்க்க 

நான் இயற்கையின் கூந்தலை வருடிய போது
சின்ன சின்ன வேதனைகள்

அதன் விசும்பலில் தெறித்து விழுந்தது.
இவையெல்லாம் யார் தந்த துன்பம்
?

உன்னை காயப்படுத்தி வென்றது
மனிதனின் வேதனை அம்புகளா?
என் கேள்விக்கு அது

வேறு ஏதோ பதிலுரைத்தது..


பாலகுமாரன் @ விகடன் தீபாவளி மலர்...


விகடன் தீபாவளி மலர் வந்தாச்சு-னா தீபாவளியே வந்தாச்சு என்று தான் அர்த்தம். அதன் விமர்சனம் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில்,
பாலகுமாரன் பேட்டியில் மிக ரசித்த விஷயங்கள் மட்டும் உங்களுடன்  இப்போது பகிரப்படுகிறது... 

*சோறு போடும் உத்தியோகம்; அது சமூக அந்தஸ்து. மனதின் குதியலைக் காட்டக் கவிதை. வில் வளைத்து, லட்சியம் அடிப்பது போன்று படிப்பவரைத் தாக்கும் சிறுகதை, தவிர்க்கவே முடியாத சினிமா, இதற்கெல்லாம் நடுவே அடிஆழத்தில், இறைத்தேடல் இருந்தது.
ஆர்யக் கூத்தாடினாலும் நான் காரியத்தில் கண்ணாக இருந்தேன்...

*வாழ்வில் எல்லா விஷயங்களிலும் விழுந்து புரண்டு ஓர் அமைதியான இடத்தை அடைந்திருக்கிறேன். எழுத்துதான் இதற்குக் காரணம்.

*எந்தப் புகழும் எனக்குள் ஓட்டவில்லை. எந்தப் போற்றுதலும் என்னைச் சாய்க்கவில்லை.

*என் வேலை இது; இதைத் துல்லியமாய் செய்தலே என் நோக்கம்.
இது பிடித்திருக்கிறதா சரி:
இல்லையா அதுவும் சரி என்று போய்க்கொண்டிருக்கிறேன்.

*வாசகருடன் ஒட்டியும் ஒட்டாமலும் இருத்தலே என் விருப்பம்.
சந்திக்கும் போது, வாசகர் வணக்கம் சொல்வதே போதும்.

*சினிமாவை என்றும் நான் முழுமையாக ஏற்காததும், முழுமையாக கற்காததும்
நான் பின்வாங்கக் காரணம்.
நான் எழுத்தாளனாகவே இருந்தேன். எழுத்து வேறு: சினிமா வேறு!

*என் எழுத்து ஆன்மிகத்தின் பக்கம் திசை திரும்பியது என்பது தவறு. அதிகமாய் வெளிப்பட்டது எனலாம். இதற்கு என் வயது காரணம். 

*எல்லா நேரமும் எல்லா இடங்களிலும் ஒரு சக்தி இடையறாது அசைக்கிறது. அதுவே எல்லாம். அதற்கு ஆரம்பம்... முடிவு எதுவும் இல்லை...

*இங்கே எல்லா உறவும், எல்லா செயலும் நாடகம் என்பதும்,
இதை நடத்திக்கொண்டே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் உணர்த்தப்பட்டது.
என்னை கவனித்தபடி இருக்கத் தூண்டப்பட்டேன். இது பெரிய கொடுப்பினை.

*ஒரு எழுத்தாளன், எல்லாம் எழுதிவிட்டேன் என்று சொல்லமாட்டான்.
எழுத்துச் சிந்தனை வற்றாத ஊற்று.

*எழுத்தாக்குவதற்கு உடல் வலு, மன வலு வேண்டும். எனக்கு இன்னமும் இருக்கிறது.
அடுத்ததாக எழுத, சுமார் ஆயிரத்தைந்நூறு பக்கங்களுக்கு, ராஜேந்திர சோழன் மனதளவில் தயார்.  கொஞ்சம் பயணப்பட வேண்டும். எழுதுவேன்...

காத்திருக்கிறேன் தோழி.. ---எம்.மணிமேகலை

கவிதையல்ல இது
என் பள்ளியின் குரல்...

நான் வெறும் கட்டிடம் அல்ல..


உன் கனவுகளை நனவாக்க
கற்பனைகளை நிஜங்களாக்க
அறிவை அருவியாக்க
ஆற்றலை முழுமையாக்க
அன்பை ஆயுதமாக்க
பண்பை படிப்பாக்க
உலகை உனக்குரியதாக்க
காத்திருக்கிறேன் தோழி...

எனக்குள் வரும் உன்னை
வெறும் புத்தகப் புழுவாக மாற்ற அல்ல..
இந்த உலகிற்கு நல்லதோர்
மனிதநேயம் மிக்க மனிதனாக மாற்ற
காத்திருக்கிறேன் தோழி..

உதாரணங்கள் எப்போதும்
    அகிம்சைக்கு மகாத்மா...
    அன்புக்கு அன்னை தெரசா..
    வீரத்திற்கு கட்டபொம்மன்....

போதும்  பழைய உதாரணங்கள்..
இனிமேல் இவை அனைத்திற்கும்
உன்னை உதாரணமாக்கு....

--எம்.மணிமேகலை
பன்னிரெண்டாம் வகுப்பு இ பிரிவு...

navin robins அவர்களின் சவால் கவிதை -- நான் இறந்து போயிருந்தேன்

தெம்மாங்கு பாடி, உயிர் கொடுத்தார்கள் வாஞ்சையில்,
 
எனக்கு, காளை பூட்டிய ஏர் உழுத நஞ்சையில்;
 
நெகிழ்ந்தேன் நான் அவர்கள் காட்டிய அன்பெனும் உரத்தில்,
 
இசையான தெம்மாங்கு சுரத்தில்;
 
தென்றலின் இசைக்கு தலையாட்டி மகிழ்ந்து,
 
வளர்ந்தேன் நான் நித்தமும் வளர்த்தவர்களை நினைந்து;
 
பருவமடையும் நாள் வந்தது, பூவாக விரும்பிய நான் நாத்து,
 
என் கால்களில் வந்தடையும் காவிரியை எதிர்பார்த்து;
 
வரவில்லை காவிரி, தரவில்லை தண்ணீரை பரவி;
 
மனம் சோராமல் காத்து நின்றேன் வயல்வெளியில்,
 
நிலவோ தேய்ந்து வளர்ந்தது நாளொரு வண்ணமாய் வான்வெளியில்;
 
அப்போதும் உயிர் கொண்டுதான் இருந்தேன் ஆனால்,
 
நான் இறந்துதான் போயிருந்தேன் எனக்கு உயிர் கொடுத்தவர்,
 
என் நிலை கண்டு தன் உயிர் மாய்த்த பின்!
 

இந்த வாரம்: ரசித்தவைகளும், யோசிக்க வைத்தவைகளும்..

இந்த வார ஹிட் செய்தி:

விருந்தாளிகள் கிளம்பிவிட்ட நிலையில் காமன்வெல்த் போட்டிகள் டெல்லி-2010 ன் இரண்டாம் பாகம் துவங்கிவிட்டது. டெல்லி முதல்வர், .ஆர்.ரஹ்மான், உயர்மட்ட விசாரணைக் குழுத் தலைவர் வி.கே.சங்கலு
ஆகியோரின் பேட்டிகள் பரபரப்பைக் கூட்டுகின்றன.
பிரதமர் வழங்கிய விருந்தில் சுரேஷ் கல்மாடி புறக்கணிப்பு.
{முற்பகலில் "செ(ய்)யின்" பிற்பகலில் "விலங்கு"}
 
இந்த வார ஹைக்கூ:

"சிறியது தான் புல்லாங்குழல் 
கேலி செய்த மூங்கில்
பிணம் சுமக்கும் பாடை"
-துறவி.

இந்த வார கவிதை:

"காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடிகளைப்
பதிக்க விரும்பினால்,
உனது கால்களை,
இழுத்து,இழுத்து நடக்காதே...."
--.பி.ஜெ.அப்துல் கலாம்.
(அக்-15 கலாம் அவர்களின் பிறந்தநாள்.)



இந்த வார தகவல்:

தமிழகத்தில் 39 ஆயிரம் ஏரிகள் இருப்பதாகக் கணக்கு சொல்லப்படுகிறது. ஆனால் அவற்றில் சில ஆயிரம் ஏரிகள் காணமலே போய்விட்டன. இருக்கும் ஏரிகளில் பெரும்பாலானவை தூர்ந்து போய் கிடக்கின்றன. பல ஏரிகள் ஆக்ரமிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாறிவிட்டன.

இந்த வார மனிதர்:



.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் சச்சின்,
8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் முதலிடம் 
(ரிட்டன் ஆப் தி டிராகன்).  
தரவரிசையில் சச்சின் முதலிடம் பிடிப்பது இது ஒன்பதாம் முறை.

இந்த வார கருத்து:

ஆஸ்திரேலியா மிக அழகான நாடு. ஆனால், அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொள்ள அந்த நாடு தவறி விட்டது. இந்தியர்களின் மீது நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதல்களால் அந்நாட்டின் நன்மதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. 
--பிரிட்டிஷ் நிபுணர் சைமன் அன்ஹோல்ட். 
(இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடுகளில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா, இப்போது மூன்றாம் இடத்தில்)

இந்த வார குழப்பம்:

கலாய்க்கும் பாணியில் நாங்கள் எழுதிய
"பிரபல வலைப்பதிவர்க்கு கொலை மிரட்டல்" வாசிக்கப்பட்ட அளவுக்கு, நல்ல பதிவாக நாங்கள் கருதிய "உலுக்கி எடுத்த உண்மைகளும், இரக்கமில்லா இரவுகளும்" வலைஉலகவாசகர்களால்
கவனிக்கப்படவில்லை.
{ஒண்ணுமே புரியல (வலை) உலகத்திலே...}


உலுக்கி எடுத்த உண்மைகளும், இரக்கமில்லா இரவுகளும்...


எனக்கு மனிதர்களைப் பிடிக்கும் என்று லீலா டீச்சர் சொன்னாங்க.
அதன்  தொடர்ச்சியாய் யோசித்ததில்;  
என் இரவுகள் உறக்கமில்லாது நீண்டன.சில முரண்பாடுகள் என்னை உலுக்கி எடுத்தன, ச்சர்யம்  என்னவென்றால்  சில 
உடன்பாடுகளும்  அதே வேலையைச் செய்தன.

உண்மைத்தான்.மனிதர்களும்,அவர்தம் மனங்களும் விசித்திரங்கள் நிறைந்தது.

காலம் கருதாது , காரியங்கள் செய்துவிட்டு, பின் காலமெல்லாம் அதைச் சொல்லிச்சொல்லி மாயும் மனிதர்களும் உண்டு.

எல்லாவற்றிலும் முரண்பாடு இருந்தாலும், வாழ்தல் நிமித்தம்; திருத்தங்கள் இல்லாது நாட்கள் நகர்த்தும் மனிதர்களும் உண்டு.
 

"நான் சொல்லுவது என்னவென்றால் " என்று அவர் சொன்னார். அதையேதான் இவரும் சொன்னார். இருப்பினும் குரல்கள் உயர்ந்தன. வார்த்தைகள் வலுத்தன

அதிக வருடங்கள் வாழ்ந்தவர்கள் கூட, "ஈகோ" தாண்ட இயலாது. கிணத்துத் தவளையை தேசிய மிருகமாய் அறிவித்தார்கள்.
 
அருகருகே வாழும் மனிதர்களின்
மனங்களிடையானஇடைவெளியாய்  மிகப்பெரிய சுந்தரவனக்காடுகள்இருந்தன.அதனில் விதவிதமான விலங்குகளைச் சுதந்திரமாக உலவவிட்டார்கள்.வேளை தவறாது அதற்கு உணவிட்டார்கள், உணவிட்ட பொழுதுகளில் எல்லாம் யார் பகைவர்கள் என்பதையும் ஊட்டிவிட்டார்கள். பின்னொரு நல்ல நாளில் அண்டை மனிதரை  மரணிக்க வைத்தார்கள். பின் ஒன்றும் நடவாததுப் போல, இறுதி ஊர்வலத்தில் சோகமுகமூடி தரித்தனர். அடுத்தது யார் என திரிந்தார்கள்.

அடிக்கடி நல்லது செய்தார்கள்; அவற்றின் பளபளப்பில் விகாரங்களை வெளித்தெரியாது மறைத்தார்கள்.

எது ஆகாது என சூளுரைத்தார்களோ அதன் காலடியிலேயே  கிடந்தார்கள்.

வெற்றி தேடி மூச்சிரைக்க ஓடியவர்களின் போரட்டத்தினை ரசிக்க, ஓய்வுகளை ஏற்படுத்திக்கொண்டார்கள்.ஜெயித்தபின், அதனில் தங்கள் பங்கு அதிகமென்று 
உலகத்தார்க்கு  முரசரைந்து  அறிவித்தனர்

நான் இல்லாது இந்த உலகம் இயங்காது என மூளைச்சலவை செய்தார்கள். 
மற்றவர்களை"போன்சாய்" மரங்களாக்கினார்கள்.

உலகத்தை ரசித்தல் மிகப்பிடிக்கும் என்றார்கள். மற்றவர்களை விழி மூடி ரசிக்க பணித்தார்கள்.

காரணமில்லாது ஏதேனும் செய்துவிட்டு, பின் காரணங்களை அடுக்கி சிலிர்ப்பூட்டினர்.

விளையாட்டுப் போட்டிகளின் வீரர்கள் போன்று இறுதியில் கைக்குலுக்கினார்கள். 
உறவாடிக் கெடுத்தப்பின்..

பெரும்பாலானான நேரங்களில் நடித்ததால்,  
எது வேடம்; எது நிஜம்  என கணிக்க இயலாது 
போனது சக நடிகர்களால் கூட...

எல்லாவற்றிற்கும் ஒரு "பின்புலம்" இருந்தது. ஆனால்  முன்பே  அது 
தெரியாமல்  பார்த்துக்கொண்டார்கள்.

எது நிஜம், எது போலி என எல்லாவற்றையும் சந்தேகிக்க;எல்லாமே போலியாகவே  தெரிகிறது.

இப்படியாய் இன்னுமாய் மனிதர்களும், அவர்தம் மனங்களும் விசித்திரங்கள் நிறைந்ததாய் இருப்பதால் லீலா டீச்சருக்கு மனிதர்களைப் பிடித்திருக்கக்கூடும்.

அது சரி. எனக்கு என்னப் பிடிக்கும் என நீங்கள் கேட்கவேயில்லையே... 

எனக்கு என்னைப் பிடிக்கும்;  

மேலே சொன்ன    அத்துணை விசித்திரங்களும், முரண்பாடுகளும்,உடன்பாடுகளும்   எனக்குள்ளும்  நிரம்பி வழிவதால்....
எனக்கு என்னைப் பிடிக்கும்.... 

பிரபல வலைப்பதிவர்க்கு கொலைமிரட்டல்


வலைப்பதிவர்கள் பற்றிய டெரர் செய்திகள்:
 பரிசல்காரன்-வலைப்பதிவர்க்கு,ரோஜா பூந்தோட்டம் வலைப்பதிவர்கள் கொலை மிரட்டல்.. "நாங்க வலைப்பூ ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆச்சு, இன்னும் ஒரு வாழ்த்துக்கூட சொல்லல


(இப்பல்லாம் கொலைமிரட்டல் அனுப்பறதுதானே லேட்டஸ்ட் பேஷன்.....
இந்த வழக்கிற்கும் வாய்ப்பாடிக்குமார், வேல் கண்ணன் ஆகியோர்க்கும் எந்த தொடர்பும் இல்லை யுவர் ஆனர்)


நல்லா கெளப்பறாங்கய்யா பீதிய.....
 

பனித்துளி சங்கர், கே.ஆர்.பி.செந்தில்,மலிக்கா, ஆகியோரின் பதிவுகள் வெளியாகும் போதெல்லாம் "எந்திரன்" வசூல் பாதிக்கப்படுவதால் , சன் குழும அன்பர்கள் மேற்கண்ட வலைப்பதிவர்களை "விருந்து" வைக்க தேடுவதாக எமது உளவுப்பிரிவு ரகசிய தகவல்.. 
(டி. ஆரின் பேமஸ் வார்த்தைக்களை இங்கே சொல்லிக்கொள்ளவும்)  


பெரியவிளம்பர இடைவெளி :


"ஸ்பீட் ஒன் டெரா பைட்ஸ், மெமரி ஒன் ஜெட்டா பைட்ஸ்" சக்தியொடு , எங்க வலைப்பதிவு வந்தவுடனே கருத்துரை வழங்கும் ஆதவா, ஜோயல்சன், வி.ராதாகிருஷ்ணன், சிவாஜி, பேரு:மாதேஸ்வரன், இயற்கை ராஜி,செல்வம், சங்கவி , நீச்சல்காரன், திருநாவுக்கரசு பழனிசாமி,ரோகிணி சிவா ஆகியோர்க்கு நன்றிகள்... 


(ஆரம்பிச்சப்ப வந்தாங்க, நாங்களும் வழிமேல விழி வச்சு தெனமும் பாக்குறோம்.. ஆளையே காணலியே.. காமன்வெல்த் போட்டிக்காக டெல்லி போயிருப்பாங்களோ....) 


சங்கவி SPEAKS....

பக்கம் ததும்ப,ததும்ப எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளன் ஆக முடியாது,எழுத்துக்களை ஆளக் கூடியவனே எழுத்தாளன் ஆவான்.

வாய் மூடாமல் பேசுபவர் எல்லாம் பேச்சாளர் ஆகமுடியாது,சிறந்த முறையில் தெளிவுப்பட வரிசைப்படுத்தி பேச்சை ஆள்பவனே பேச்சாளன் ஆகிறான்.

முதல் வைத்திருப்பவன் எல்லாம் முதலாளி ஆகமுடியாது,அதனை ஆளக்கூடியவனே முதலாளி ஆவான்.அது போல தன் மனதை கட்டுப்படுத்தி ஆள கூடிய ஆற்றல் படைத்தவனே மனிதனாக ஆகிறான்..

 
பிறப்பால் நாம் பெறுவது உடல் வலிமை. அதனைக் கொண்டு மனிதன் பெறுவது மனவலிமை.. மனவலிமை என்பது தன்னைப் பற்றியும், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் பற்றி புரிந்துக்கொள்ளுதல்...

K.R.P. செந்தில் அவர்கள் கவிதைப்போட்டிக்கு அனுப்பிய கவிதை...

நான் இறந்து போயிருந்தேன்
சுற்றி அழும் கூட்டம் ஏதுமற்று
தனியாக
வழிதவறிய
மலை உச்சியின் நேர் கீழே
என் உடல் ..

 இன்னும் சற்று நேரத்தில்
இறந்து போகும்
என் செல்பேசியும்...


தொடர்ந்த அழைப்புகளுக்கு
பதிவு செய்யப்பட்ட
பதில்களை கேட்டு வெறுத்துப்போன
மனைவி ;சபித்துக்கொண்டே
அடுப்பை அணைப்பாள்.

நாளையோ
அதற்கடுத்த நாளோ
என்னை தேடும் உத்திகள்
மேற்கொள்ளப்படும்
அதற்குள்
மலை எறும்புகளுக்கோ
ஓநாய்களுக்கோ உணவாகி
எலும்புகளாய் கிடைப்பேன்..

 அதுவரை
என்னை நேசித்தவர்களின்
நம்பிக்கைகளில்
நான் உயிருடன்தான் இருப்பேன்.. 

 http://krpsenthil.blogspot.com/

krpsenthil@gmail.com

கவிதை BY ஆர்.சர்மிளா. எட்டாம் வகுப்பு ஈ பிரிவு...


அம்மாவின் அரவணைப்பு..,

 வானத்தில் இருப்பது நட்சத்திர கூட்டங்கள்..
கடலில் இருப்பதோ
மீன்களின் கூட்டங்கள்
ஆனால்

என் மனதில் இருப்பதோ
அம்மாவின் அன்பு முத்தங்கள்

-
...ஆர்.சர்மிளா. எட்டாம் வகுப்பு ஈ பிரிவு...

-----------------------------------------------------------------------
கனவு

 லட்சியத்தின் ஒரு வழி பாதை
நிஜங்கள் கூட தோற்றுப் போகும் உத்தமம்
கற்பனைகளின் சங்கமம்
ஏழைகளின் ராஜ சிம்மாசனம்
உறவுகளின் ரகசிய உடன்பாடு
கனவுகள் ஏமாற்றம் அடையும் போது தான்
கண்ணீர் விழிகளில் குடியேற இடம் தேடுகிறது

-ஆர்.நிர்மலா..
-----------------------------------------------------------------------------------------------
மழை...

ஓ..வானமே உன் மகன் குறும்புக்காரன்...

அடிக்கடி ஓடியாடி விளையாடி
ஆடைகளை அழுக்காக்குகிறான்
...

நீயோ சலவையில் கெட்டிக்காரி.
அடித்து துவைக்கும்
சத்தம் இடியாய் கேட்கிறது
.

அலாசுகின்ற நீர் மழையாய் பெய்கிறது.
சிறிது நேரத்தில்
உன்
மகன் பளிச்சென மின்னுகிறான்
...ஜி.ரோசரி. XI-A...


இறந்த பின்னும் வலிக்கிறது...லீலா மகேஸ்வரி அவர்களின் சவால் கவிதை

நான் இறந்து போயிருந்தேன்.
இறந்தபின்னும் உயிர் வலி குறையவில்லை.

இது முதல் முறை அல்ல..
பல தருணங்களில்
பலரின் முன்பு
என் இறப்பு நிகழ்ந்திருக்கிறது.

"உயிரியல் இறப்பு அல்ல..
உளவியல் மரணம்"

சிநேகிதியின் மதிப்பெண் பட்டியல் ஒப்பிட்டு
பொழிந்த அப்பாவின் வார்த்தைகள்..

பெண் கேட்டு வந்த உறவினர்களின்
"குத்தல்" கேள்விகள்...

கள்ளமில்லா நண்பனின் வருகைக்கு
பாட்டி பூசிய விகார சாயம்...

சொந்தமானவர்களின் சொல்லம்புகள்...
சக பயணியின் அத்துமீறல்...
மேலதிகாரியின் காரணமில்லா கடுமை...
துரோகத்தால் மூச்சு திணறிய நட்பு...
துளி விஷம் கலந்துவிடப்பட்ட தினசரிகள்...

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்