விலைவாசி உயர்ந்திருக்கிறதே என்று அரசியல்வாதிகளிடம் கேட்டால், மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறதோ இல்லையோ, மக்களிடம் சில கொடுமைகளை தாங்கும் சக்தி உயர்ந்திருக்க்கிறது.
அந்த வகையில் இன்னும் ஒரு மாற்றமும், இன்றைய தமிழ்ச்சூழலில் நிகழ்ந்திருக்கிறது. காதலிக்கும் வயது குறைந்திருக்கிறது.
முன்பெல்லாம் சில பிஞ்சுகள் மட்டுமே பழுத்தன. இப்பொழுதெல்லாம் பழுத்த பின் தான், பிஞ்சுகளாகவே மாறுகின்றன.
வகுப்பறையில் ஒரே டெஸ்கில் அமர்ந்திருப்பவருக்கும் ஐவரில், ஒரு மாணவி திசை மாறும் போது, அது தொற்று நோயாக, மற்ற நால்வருக்கும் பரவுகிறது.
பின் இப்படி இருந்தால் தான் "கெத்து" என்று மாறி விடுகிறது. சனி,ஞாயிறு ஆகிய நாள்களில், இளவரசனும்; இளவரசியும் "நகர் வலம்"
போக, பர்தா கொடுத்து உதவும் தோழிகளும் உண்டு.
ஐநூறு ரூபாய் கொடுத்து, அப்பன் ஆத்தா வாங்கிக்கொடுக்கும் செயினை விட, சுடிதாரை விட, எவனொ ஒருவன் வாங்கிக்கொடுக்கும், ஐந்து ரூபாய் "பைவ் ஸ்டார்" உசத்தியாய் தெரிகிறது, அந்த சாக்லேட்டின் காகிதம் கூட பாதுகாக்கப்படுகிறது. மற்ற மாணவிகளிடம் காட்டி, பெருமையடிக்க காரணமாகிறது. அந்த பெருமைக்கு இன்னும் ஒருத்தி ஆசைப்படும் போது, அந்த தொற்றுநோய்க்கான பலி எண்ணிக்கை உயருகிறது.
முன்பெல்லாம் பெண்ணை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருந்தனர், இப்போதோ வயிற்றில் எரிமலையைக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஊடகங்கள் இதற்கு காரணம் என்ற "வழக்கமான" காரணமும் உண்மைதான். முன்பெல்லாம் திரைப்படங்கள், கல்லூரிக்காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டன. பரிமாண வளர்ச்சியின் படி, இப்பொழுதோ "பள்ளியில் காதல்" என்பது தான் திரைப்பட களமாகி இருக்கிறது.
இந்த வலைப்பூவில் இப்படியொரு பதிவா என சவுக்கு வீச தயாராகும், கலாச்சாரக்காவலர்களே மன்னியுங்கள். நாங்கள் வரம்பு தாண்டி பதிவெழுதுகிறோம் என்று கண்டிக்க வேண்டாம். "குறைந்து விட்ட காதலிக்கும் வயது" என்பது தான் இந்த பதிவுக்கான எல்லை.
ஆயினும் யாரேனும் உங்களிடம் கேட்கக்கூடும், ஒரு கேள்வியை..
நோட்டிற்குள் மயில் தோகையை வைத்து, குட்டி போடுமா என பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய வயதில்; அவர்களே "குட்டி" போடுகிறார்களே.. அதற்கு என்ன பதில் உங்களிடம் இருக்கிறது. (தமிழகத்தில் இது மூன்றாம் நிகழ்வு.)
Reference பதிவுகள்:
1.குறட்டை புலி - மாணவி பிரசவம்;யாருக்கும் வெட்கமில்லை!
2.எங்கே செல்லும் இந்த பாதை - நட்பு- பயோடேட்டா.
3.கோமாளி - செல்லத்திற்கு ஒரு கடிதம்.
(கடைசி சில பத்திகள்)










