தேர்வுக்கு பிந்தைய கருத்துக்கள்.. தேர்தலுக்கு பிந்தைய அல்ல..


அரசுப்பள்ளிகள் சறுக்குவதற்கான காரணங்கள்:

ஒரு மாணவனின் படிப்புக்கு, அவனது பெற்றோர்களே தடையாய் இருக்கும் சூழ்நிலைகள் சில அரசுப்பள்ளிகளில் இருக்கின்றது என்ற தகவலை உங்களில் எத்தனைப்பேர் ஏற்றுக்கொள்வீர்கள்?

விடியற்காலை எழுந்து தோட்டத்தில் தண்ணீர் கட்டிவிட்டு, பின்னர் பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஏராளம்.

குடும்பச்சூழல் காரணமாகவே அல்லது வேறு பிற காரணங்களுக்காகவோ சனி மற்றும் ஞாயிறுகளில் ஏதேனும் ஒரு வேலைக்கு போய்விட்டு பள்ளிக்கு வரும் மாணவர்களும் ஏராளம்.

இதே போல காலாண்டு, அரையாண்டுத்தேர்வு விடுமுறை நாட்களில் வேலைக்கு போய் கையில் கொஞ்சம் காசு பார்த்துவிட்ட பின், அந்த பணம் சம்பாரிக்கும் சுகம் சுண்டிழுத்ததால் திரும்ப பள்ளிக்கு வராமல் போனவர்களும் ஏராளம் அல்லது ஆண்டின் இறுதி நாட்களில் தேர்வுக்கு மட்டும் வந்து, தலைக்காட்டுபவர்களும் ஏராளம்.
அதிக நேரம் மாணவர்களை புத்தகம் கையுமாக இருக்க வைப்பது, படிப்புக்கும் மாணவர்களுக்குமான தொடர்பினை அதிகரிக்க வைக்கும் என்ற நம்பிக்கையில், தனியார் பள்ளிகள், காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புக்கள் வைக்கிறார்கள், அது போல அரசுப்பள்ளிகளும் செய்யலாமே என்று நீங்கள் எண்ணலாம். நிறைய சிக்கல்களை தாண்டி அதுவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

காலை உணவு சாப்பிடாமல் வரும் மாணவர்களும் இருக்கிறார்கள். வெகு நேரத்தில் வரும் போது அவர்களுக்கு அது மிக சிக்கலாகி விடுகின்றது என்பது நடைமுறை சிக்கலாக இருக்கிறது. இரவு வீடு திரும்பும் வரை தாக்குப்பிடிக்க வேண்டுமே.

என் பையன் தான் ஸ்கூலில் படிக்கிறானே எதுக்கு வீட்டில் படிக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர் கூட இங்கே உண்டு. காலை முதல் மாலை தன் பையன் கூடவே இருந்து, ஒரு நாளைக்கு நான்கு டியூசன் அனுப்பி வைக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இவர்கள் எப்படி போட்டியை கொடுக்க இயலும் என்று தெரியவில்லை.

வீட்டில் அனைவரும் டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போது, அந்த சத்தத்தின் ஊடே படிக்க வேண்டும் என்ற "கஷ்டமான"
நிலைமையெல்லாம் தனியார் பள்ளிகளில் பயிலும் "கனவான் மாணவர்களுக்கு" இல்லை.

வரலாறு போன்ற பாடப்பிரிவு படிக்கும் திறமையுள்ள மாணவர்களை, பக்கத்து வீட்டில் இருக்கும் யாரோ ஒரு புண்ணியவான் வழங்கும் இலவச ஆலோசனையை கேட்டு, இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தோடு போராட விட்டு விடுகிறார்கள்.

பள்ளியில் சேர்ப்பதோடு தங்கள் வேலை முடிந்துவிட்டது என்று பெற்றோர் ஒதுங்கிக்கொள்ள, அந்த மாணவன் இரண்டு வருட நரகத்திற்குள் தள்ளப்படுகிறான்.

மாணவிகளை பொறுத்தவரை பிளஸ் டூ முடித்தவுடன் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் பல பகுதிகளில் இருக்கின்றன. எப்படியும் திருமணம் செய்துக்கொடுக்கத்தானே போகிறார்கள் என்ற மனநிலையில் இருக்கும் இளவயதினருக்கு எப்படி படிப்பில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

ஒரு வித்தியாசமான முரண்பாடும் சில இடங்களில் இருக்கிறது.
குடும்பச்சூழல் எவ்வாறு இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி, கையில் ஒரு செல்போன் சுமப்பது பள்ளி மாணவர்களிடையே  நாகரீகமாக மாறி இருக்கிறது. ஒரு மெமரிகார்டின் "ரகசியங்களுக்குள்" மூழ்கி தன்னுடைய நேரங்களை தற்கொலைக்கு உட்படுத்தியவர்களும் ஏராளம்.(சில மிடில்கிளாஸ் மாணவர்கள் கூட, ஆசிரியர்களை விட
லேட்டஸ்ட் மாடல்செல்போன்கள் வைத்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது)

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பற்றி வைக்கப்படும் விமர்சனங்களிலும் உண்மை இல்லாமல் இல்லை. மனச்சாட்சிக்கோ, மாணவர்களின் எதிர்காலத்திற்கோ பயப்படாமல்  தன்னுடைய தலைமையாசிரியர்களுக்கு மட்டும் பயந்து வேலைச்செய்பவர்களும் இருப்பது தான் வேதனைக்குரிய விஷயம்.

குறைந்தபட்சம் தான் வாங்கும் சம்பளத்திற்காவது பயந்து வேலை செய்யும் நாகரீகம் கூட இல்லாமல் போனது மிக வருத்தமான சூழ்நிலைதான் இங்கே இருக்கிறது. சிலரால் பெரும்பாலான ஆசிரியர்களும் வசவுகளை வாங்கிகட்டிக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டார்கள்.

மிக நேர்மையாக வேலை செய்த கல்வி அதிகாரிகளை, தங்களது "வலுமிக்க" சங்கங்களின் மூலம் அவமானப்படுத்தும் செயல்களும் இங்கே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு குழந்தையின் எதிர்காலம் தன்னை நம்பி ஒப்படைக்கப்படுகிறது என்ற தார்மீக பொறுப்புணர்வு இல்லாத ஆசிரியர்கள் தான் இன்றைய அனைத்து சமூக சீரழிவுகளுக்கும் முழுமுதற்காரணம். '

தங்களின் பிள்ளையை இப்படி பொறுப்பில்லாமல் விட்டுவிட மனசு வருமா இவர்களுக்கு?

நல்ல வழிகாட்டலுக்கு இன்றைய மாணவர்கள் ஏங்கிக்கிடக்கிறார்கள் என்பது தான் நிகழ்கால உண்மை. அதனை கொடுக்க தவறுகின்ற ஆசிரியர்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு துரோகம் இழைத்தவர்களாக மாறுகிறார்கள்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என்னும் இந்த கல்வி முக்கோணத்தில், யார் கடமை தவறினாலும்,. வழிமாறினாலும் பாதிப்பு என்பது நாட்டிற்குத்தான்.

டிஸ்கி:

சொல்லுவதற்கு இன்னும் இன்னும் ஏராளமான காரணங்கள்
இருக்கின்றன.  நீங்களும் உங்கள் பார்வையை பகிரலாமே..

9 கருத்துரைகள்:

சசிகுமார் said...

காரணங்களை மிக அழகாக சொல்லி இருக்கீங்க பாரதி. இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையில் வாழ்ந்து சாதிக்கும் மாணவர்களே உண்மையான சாதனையாளர்கள்.

கவி அழகன் said...

எல்லா காரணங்களும் உண்மை

செல்வா said...

என்னைப் பொருத்தவரையிலும் அரசுப் பள்ளிகளையும் தனியார் பள்ளிகளையும் ஒப்பிடுவது சரியாகப்படவில்லை!

நீங்கள் சொன்னதுபோல அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டுகளைத் தாண்டி வேறு சில காரணங்களும் உள்ளன

*.தனியார் பள்ளி மாணவர்கள் ஒரே பாடத்திட்டத்தை அதவாது பனிரண்டாம் வகுப்புப் பாடத்தினை இரண்டு வருடங்கள் மனப்பாடம் செய்கின்றனர்.

*.தனியார் பள்ளி மாணவர்கள் நீங்கள் சொன்னதுபோல எல்லா நேரங்களிலும் புத்தகமும் படிப்புமாகவே இருக்கின்றனர்.

*.தனியார் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் வசதியான குடும்பத்தில் இருந்து வருவதினால் அடுத்து இந்தப் படிப்பிர்க்குச் செல்லவேண்டும் என்ற உந்துதல் இருக்கிறது .ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களில் சிலர் எவ்ளோ மதிப்பெண்கள் பெற்றாலும் நாம் மேற்கொண்டு படிக்க வசதி இல்லை என்ற வருத்தமும் அவர்களுக்கு சோர்வினை உண்டாக்கலாம்!

இன்னும் நிறைய இருக்கு. ஆனால் என்னைப் பொறுத்தவரை அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். காரணம் படி படி என்று எல்லா நேரங்களிலும் ஒரே விசயத்தைக் கேட்கவேண்டிய கட்டாயம் இல்லை :-))

Speed Master said...

வந்தேன்

Anonymous said...

If a teacher like you is there in every government school,then no student will slip in his/her exams(also in their career)...

Chitra said...

அதிக மதிப்பெண்கள் பெறுவது ஒன்றே பள்ளிகளின் சாதனைகளாக இல்லாமல், வாழ்க்கை கல்வியும் புரிதலும் சேர்த்து சொல்லி கொடுப்பது போல சிஸ்டம் மாற வேண்டும். அரசாங்க பள்ளிகளை குறித்து, நல்ல அலசல் கொண்ட பதிவுங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

காரணம் படி படி என்று எல்லா நேரங்களிலும் ஒரே விசயத்தைக் கேட்கவேண்டிய கட்டாயம் இல்லை :-))//

repeattu

NKS.ஹாஜா மைதீன் said...

நாம் படிப்பது நமது கைகளில்தான் உள்ளது...அதற்கு ஆசிரியர்கள் ஒரு காரணம்...சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்....

செங்கோவி said...

//பணம் சம்பாரிக்கும் சுகம் சுண்டிழுத்ததால் திரும்ப பள்ளிக்கு வராமல் போனவர்களும் ஏராளம் // சத்தியமான வார்த்தைகள்..நானும் ஒரு அரசுப்பள்ளி மாணவன் என்ற வகையில் இதை நேரிலேயே பார்த்திருக்கிறேன்..

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்