வாசிக்கவும், எழுதவும் தெரியாத மாணவர்கள், பத்தாம் வகுப்பில் கூட உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் வேண்டுமானாலும் உங்களின் அக்கம்பக்கம் உள்ள அரசு பள்ளிகளில் விசாரித்துப்பாருங்களேன்.
இடை நிற்றலை தவிர்க்கும் விதத்தில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய
ஆல்-பாஸ் முறையை அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் அதன் பின் விளைவுகள் இப்படி இருப்பது இன்னும் உலகத்தாரின் கண்களுக்கு தென்பட வில்லை என்பது உண்மை.
அனைவரும் தேர்ச்சி என்பதால் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என்பது ஒரு புறம் சரியான விஷயமாக இருந்தபோதிலும், கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறதா என்றால் அது கேள்விக்குறியே.
எப்படி படித்தாலும் பாஸ் தானே என்பதால் மாணவர்கள், படிப்பில்
முழு கவனம் செலுத்துவதில்லை.
ஏற்கனவே மாணவர்களை கண்டிக்கக்கூடாது என்று இருப்பதாலும், பொதுத்தேர்வு, அதன் தேர்வு முடிவுகள் என்ற நெருக்குதல்கள் இல்லாதாலும் சில ஆசிரியர்கள் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.
பத்தாம் வகுப்பு வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று பெற்றோர்களும் கவனியாமல் இருக்கிறார்கள்.எப்படியும் பாஸ் என்பதால் தன் குழந்தைகள் விடுப்பு எடுப்பதையும் அலட்சியமும் செய்கிறார்கள்.
வெறுமனே பாஸ் பாஸ் என்று, வருடங்களை மட்டும் கடந்து, பத்தாம் வகுப்பு வந்து ஒண்ணும் தெரியாமல் வந்து நிற்கும் மாணவர்களுக்கு நாங்கள் பாடம் நடத்துவதா, வாசிக்க பழக்குவதா என பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள்,பழியை எட்டாம் வகுப்பு ஆசிரியர்கள் மீது தள்ளி விடுகிறார்கள். அவர்கள் சின்ன வகுப்பு ஆசிரியர்களை சரியில்லை என குற்றம் சாட்டுகிறார்கள்.
முன்பெல்லாம் பள்ளிக்கு போக முடியாதவர்கள் மட்டும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தனர், இப்போது பள்ளி போகிறவர்கள் கூட கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இது தான் வளர்ச்சியா?
இப்போதைய கல்வியின் நிலவரம் "பில்டிங் ஸ்ட்ராங், ஆனா பேஸ் மட்டம் வீக்" என்பது தான்.
இந்த பிரச்சனையை சரி செய்யாவிடில், உலகிலேயே இளைஞர்களைக் கொண்ட நாடு என்ற புள்ளிவிபரம் மட்டுமே மீதமிருக்கும், நிதர்சனத்தில் அவர்கள் அனைவரும் எண், எழுத்து என்னும் இரண்டு கண்களும் இல்லாத புதியவகை மாற்றுத்திறனாளிகளாகவே இருப்பார்கள்.
அப்புறம் எங்க போயி வல்லரசாவது?
***********************************************************************************
இது சம காலக்கல்வி தொடர் பதிவின் பாகம் 4.
***********************************************************************************
சம காலக்கல்வி பற்றிய முந்தைய பதிவுகள்:
வடை ஸாரி, சாக்லேட் போச்சே.
ஐயோ.. யாராவது தெளிய வைய்யுங்களேன்.
இப்படித்தான் இருக்க வேணும்...










