ரஜினி...ரஜினி...ரஜினி...


இன்று அமெரிக்காவில் அதிக பனியின் காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் திரும்பின. # இந்தியாவில் ரஜினி புகைப்பிடித்தார். # தம்பியின் ராஜதந்திரம் இது- கலைஞர் வரவேற்பு.
***********************************************************************************


சச்சின்: எங் கூட விளையாடறவங்க எல்லாம், நான் விளையாட ஆரம்பிச்சப்ப, ஸ்கூல்-ல படிச்சிட்டு இருந்தாங்க, தெரியுமா?
ரஜினி: கண்ணா, நம்ம கூட ஜோடியா நடிக்கிற பொண்ணுக எல்லாம், நாம நடிக்க ஆரம்பிச்சப்ப பொறக்கவே இல்லை... ஹா..ஹாஅ..ஹாஅ..
***********************************************************************************

தமிழ்நாட்ல ரஜினியும் நம்ம முதல்வர் மாதிரி தான், இப்பவெல்லாம் கலைஞர் கூட  கலந்துக்காத விழாவில கூட கலந்துக்கிட்டு, முன் வரிசையில, ஆறு மணி நேரம் உட்கார்ந்து, தன்னை புகழ்றவங்களோட வார்த்தைகளை புன்சிரிப்போட ஏத்துக்கிறாரே.
லைவ் நிகழ்ச்சியில் கொட்டாவி  வரும் போது என்ன பண்ணுறது # ட்வுட்.
***********************************************************************************

ஒரு முறை ரஜினி, சூரியனை மிக கோபத்துடன் பார்த்தார். சூரியன் நிலாவின் பின் சென்று ஒளிந்துக்கொண்டான். அதுவே மிக நீண்ட சூரிய கிரகணம். # அறிவியல் அதிசயம்.


kolaaru@twitter.com ரஜினி இளமையா இருக்கார் - எல்லாப் பயலும் இந்தப் பொய்யைச் சொல்றாங்க # கூடவே சுத்துறியே செவ்வாழ (கமல்) நீயாவது சொல்லக் கூடாதா?
***********************************************************************************

முன்னம் ஒரு காலத்தில் ரஜினி பல் விளக்குவதற்க்காக பல்பொடியை பயன்படுத்திக்கொண்டிருந்தார். அந்தப்பொடி தான், இப்போது பாரதி சிமெண்ட்.
***********************************************************************************

arasu1691@twitter.com
யப்பா "தலைவருக்கு"க்கு இன்னொரு ஹீரோயின் ரெடியாகிடுச்சு # மீனாவுக்கு பெண் குழந்தை! # ரஜினி ராக்ஸ்!
***********************************************************************************


15-01-11 அன்று ஜெமினி டி.வி.யில் தி ரோபோ (தெலுங்கு எந்திரன்) ஒளிப்பரப்பாகிறது  -இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக.

இந்தன வருஷம், எல்லா விஷயங்களிலும் என்னைச் சரியா வழி நடத்தியவன், அரசியலிலும் நாம என்ன செய்யணும்கிறதை நிச்சயம் அடையாளம் காட்டுவான் # ரஜினி சொன்னதாக விகடனில்.
***********************************************************************************

இனி சுனாமி வருவதற்கு வாய்ப்பில்லை # ரஜினி இந்தியப் பெருங்கடலில் துணி துவைப்பதை நிறுத்தினார்.
***********************************************************************************

ஒற்றைக்கையால் 100 கார்களை நிறுத்த யாரால் முடியும் - டிராபிக் கான்ஸ்டபிள் # எல்லாமே ரஜினி பண்ணுவார்னு எதிர்பார்க்கக்கூடாது. # பல்ப்.
***********************************************************************************

இது SMS திருவிழா - கலாய்ப்பு சிறப்பிதழ் - 5
***********************************************************************************************

தொடர்புடைய முந்தைய பதிவுகள்.

கலாய்ப்பு திருவிழா 4 - டெரர் SMS கள். 


கலாய்ப்பு திருவிழா 3 - கலக்கல் SMS கள். 


கலாய்ப்பு திருவிழா 2 - SMS இல் கடுப்பேத்துறாங்க எசமான்.


கலாய்ப்பு திருவிழா 1 -SMS இல் கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர்.

அறை எண் 15 - சில டைரி குறிப்புக்கள்.

முஸ்கி: 
என் டைரி -2010 என்ற தலைப்பிலான தொடர் பதிவில் ,
ஆமினா அவர்களின் அழைப்பை ஏற்று, தொடர்கிறோம்.

எங்கள் டைரி ரெய்டு வந்த சி.பி.ஐ. வசம் இருப்பதால், வித்தியாசமான முயற்சியாக, அறை எண் பதினைந்தின் டைரியை உங்களுக்கு திருட்டுத்தனமாக சமர்பிக்கிறோம்.
 (அடுத்தவங்க டைரியை படிக்குற சொகம்... அட அட....)




நான் இந்தப் பள்ளியின் பதினைந்தாம் எண் அறை. நான் இங்குள்ள சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம்.

அவர்களின் அடையாளம் என்பது பன்னிரெண்டாம் வகுப்பு அ1,அ,ஆ மாணவியர்கள்.
பாவம் அவர்கள் அனைவரும் வரும் மார்ச் 2011 பொதுத்தேர்வுக்காக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இருக்கிறார்கள். சூறாவளியாக சுழன்றாடுகிறார்கள்.

 மார்ச் மாதம் வரை அவர்களின் தேதிகள் முழுமையும் நிரப்பப்பட்டு இருக்கிறது. அனைத்து ஆசிரியர்களும் தங்கள் பிடியை இறுக்கத்துவக்கிவிட்டனர். அம்மாடி ஒரு கழுத்தில் எத்தனை சுருக்குக்கயிறுகள்.

சென்ற வருடமும் இப்படித்தான் இருந்தது. இதே சூழல் ஆனால் வேறு மாணவியர்கள்.

2010-  ல் இதே ஜனவரி மாதம் அவர்களும் அலை பாய்ந்துக் கொண்டிருந்தனர், போகி அன்று கூட வந்திருந்தனர், செய்முறை வகுப்பு என்று கூட்டமாய் கருவிகள் நோண்டினார்கள். மெல்லியதாய் சிரித்துக்கொண்டனர்.

வகுப்பு முடிந்த பின்னும் கலையாமல் படிக்கட்டுக்களில் தவமிருந்தனர். ஆசிரியர் இல்லாத பொழுதுகளில் சத்தமாய் சிரிந்தனர், என்னுடைய சுவர்களில் கூட பெயர் செதுக்கினார்கள். மார்ச்சில் தேர்வெழுதி, மே மாதம் தேர்ச்சி தகவல் பெற்றனர், ஜூனில் கல்லூரியில் கலந்தார்கள்.

சென்ற வாரம் கூட கல்லூரி விடுமுறை நாளில் இங்கே வந்திருந்திருந்தனர், என்னுள் உலவினர். தாங்கள் அமர்ந்திருந்த இருக்கைகளில் மீண்டும் ஒரு முறை அமர்ந்து மகிழ்ந்தனர்.

சென்ற  வருட மாணவியரும், இந்த வருட மாணவியரும் கலந்திருந்த அந்த நாள் என் டைரிக்குறிப்பில் சிறந்த நாள்.

இந்த வருட மாணவியருக்கும், அடுத்த வருடம் இங்கே வந்துப் பார்க்கும் ஆசை முளைக்கும். நிறைய சந்தோஷ நிகழ்வுக்களும் நிகழ்ந்திருக்கிறது.


 சுதந்திர தின விழாவில் இந்தியாவின் வரைப்படம் வரைந்து, விளக்குகளால் ஒளியேற்றியது, ஆசிரியர்கள் தின விழாவில் ஆசிரியர்கள் போல பேசி நடித்துக்காட்டியது, அவர்களிடம் பேட்டி எடுத்தது, ரம்ஜான் கஞ்சியை அனைவருடன் பகிர்ந்துக்கொண்டது, பிறந்த நாளுக்கு அளிக்கப்படும் சாக்லேட்டுக்களை பதுக்கிக்கொண்டது, வீட்டுத்தோட்டத்தில் பூத்த பூக்களைக் கொண்டு வகுப்பறையை அலங்காரம் செய்தது, ஒரு மழை நாளில் குளிரெடுத்து நடுங்கிய மாணவிக்கு, ஆய்வக இன்டக்சன் அடுப்பு மூலம் சுடுதண்ணி தயாரித்தது என எல்லா வகுப்பறை கொடுக்கும் சுகங்களையும் இவர்களுக்கும் நான் தந்திருக்கிறேன்.

பன்னிரெண்டாம் வகுப்பு என்னும் பெயரில் இவர்களை பத்து மாதங்கள் சுமந்திருக்கிறேன், என் குழந்தைகளை வெகு விரைவில் உலகத்தினை பார்க்க இருக்கிறார்கள். வகுப்பறை என்பதும் கருவறைதானே.

பிரார்த்தனை செய்யுங்கள், என் குழந்தைகளின் தேர்வும், வாழ்வும் சிறக்க....

*********************************************************************************

தொடர்புடைய பதிவுகள்:





இந்த தொடர்பதிவை தொடர மாணவன்,  குறட்டை புலி,   அஞ்சா சிங்கம், லட்சுமி,  இரவு வானம் ,  சுந்தரா  ஆகிய பதிவர்களை அழைக்கிறோம். 
(அப்பாடா இனி நிம்மதியா தூங்கலாம்)

பிரபல பதிவர் பற்றிய சுவையான பயோடேட்டா


பெயர்:  ரஹீம் கஸாலி. (இதனை பற்றி தன்னிலை விளக்க பதிவு வேறு)

பட்டப்பெயர்:  கலா நிதி மாறன். (பதிவுலக மார்கெட்டிங் மன்னன்)

தொழில் :  
விருதுகளை வழங்குவதும், போட்டிகளை நடத்துவதும்.

உபத்தொழில்: 
தமிழ்மணத்தில் முதல் இருபது இடம் பெற்றவர்களுக்கு,
அவர்களுக்கு விஷயம் தெரியும் முன்னர் வாழ்த்துத்தெரிவிப்பது.

சொத்து:  ஏ.ஆர்.ரஹ்மானுடன் எடுத்த போட்டோ.

பலம்:  ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவிட மற்றவர்கள் தயங்கும் போது, தைரியமா களமிறங்கி, தன் மார்கெட்டிங் திறமையால் ஹிட்டடிப்பது.

பலவீனம்:  ஓட்டு சேகரிக்க வைத்திருக்கும் வார்த்தைகள்.

சமீபத்திய சாதனை :  தமிழ்மணத்தில் தாக்குபிடிப்பது.

நீண்ட கால சாதனை :  பதிவுகளின் தலைப்புக்களில் பிரபலங்களின் பெயர்களை இழுத்து விடுவது.(சினிமா & அரசியல்).

பொழுது போக்கு :  வலைப்பூ முழுவதும் எழுத்துக்களை ஓட விடுவது.

பிரபல பதிவு:  அதென்ன மிசா அல்லது எமர்ஜென்சி. (என்ன கொடும சார்...)

அடுத்த பதிவு:  இதென்ன தடா, அதென்ன பொடா.


இதையும் படிங்க..

வடை போச்சே ஸாரி சாக்லேட் போச்சே...




வடை போச்சே ஸாரி சாக்லேட் போச்சே...



"முன்பெல்லாம் பரீட்சை ரிசல்ட் வரும்போது எங்களைத்தேடி நிறைய மாணவிகள் வருவாங்க, தேர்ச்சி பெற்றதுக்கு எங்களுக்கு நிறையா சாக்லேட் தருவாங்க, அவ்வளவு சாக்லேட்டா வச்சுட்டு என்ன பண்ணறதுன்னு பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு அள்ளிக்
கொடுப்போம்.

ஆனால் இப்ப ரிசல்ட் அன்னிக்கு ஸ்கூல் பக்கம் வருபவர்கள் ரொம்ப கம்மி, இப்பெல்லாம் நாலஞ்சு சாக்லேட் கிடைக்குறதே பெரிய விஷயமாயிடுச்சு, இந்த அளவு பிஞ்சுகள் மனசுல விஷத்த விதைச்சது யாரு"

சமீபத்தில் சந்தித்த முன்பு படித்த பள்ளியின் மூத்த ஆசிரியர் ஒருவர் சொன்ன வார்த்தைகள் இது.

 என்னடா " வடை போச்சே" ஸ்டைலில் பேசுறாரே அப்படினு நினைச்சேன்.

அப்புறம் ஒரு விஷயம் சொன்னாரு இத சாக்லேட் சம்பந்தப்பட்ட விஷயமா பாக்கல, ஜெயித்த பிறகு ஆசிரியரை மரியாதை செய்யும் ஒரு சின்ன நடைமுறை. ஒரு நன்றியறிவிப்பு. ரிசல்ட் வரும் போது உண்டான மகிழ்ச்சியை அதற்குறிய மனிதர்களுடன் கொண்டாடுதல்."

அவர் பாலகுமாரன் ஸ்டைலில் பேச பேச எனக்குள் ஏராளமான கேள்விகள் உதித்தன. அயற்சியாய் வானம் பார்த்தேன்.
 
இந்த நிகழ்வை ஆசிரியர்களுக்கான மரியாதை குறைந்துவிட்டதை குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?

எதற்கெடுத்தாலும் மாணவர்களை குற்றம் சொல்லுதல் போல இதற்கும் மாணவர்கள் தான் காரணமா?

மாணவர்களிடம் மூத்தவர்களை மதிக்கும் பண்பு குறைந்துவிட்டதா?

மாணவர்கள் டியூசன் போன்ற வெளியிடங்களில் அதிக அளவு விஷயங்கள் கிடைப்பதால் பள்ளி ஆசிரியர்கள் மீதான மரியாதை குறைந்து விட்டதா?

ஆசிரியர்களுக்கான அவமரியாதை, நன்றி மறந்து விடுதல் என்பது நாளை பெற்றோர்களுக்கும் நிகழ்ந்து விடுமா?

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என்ற உறவு முக்கோணத்தில், சமநிலை பிறழ்ந்ததற்கு யார் பொறுப்பு?

ரிசல்ட் பார்க்க முன்பெல்லாம் பள்ளிக்கு மட்டுமே வரவேண்டும் என்ற நிலை தற்போது மாறி, குறுஞ்செய்திகள் மூலமாகவே தேர்வு முடிவுகள் கிடைத்து விடுவதால், ஆசிரியர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகவே இது சின்ன விஷயமே. ஆசிரியர்-மாணவர் உறவு என்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று எளிதாக எடுத்துக்கொள்ளலாமா?

அல்லது இப்படி யோசித்த விதம் தவறா?தவறு இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம், யோசிக்கும் விதத்திலும், நடந்துக்கொள்ளும் விதத்திலும்.


இது சம காலக்கல்வி தொடர் பதிவின் பாகம் 3 .

இது பூக்கள் பூக்கும் தருணம்...

மழலையைப் போலவே, மழலையைப் பற்றி பேசும் வார்த்தைகளும் கூட மிக ரசனைக்குரியவைகளாக மாறிவிடுகிறது. அதிலும் கவிதை வரிகளாக மாறும் வார்த்தைகளில் சுகம் இன்னமும் அதிகம்.



 வாராய் என் பிள்ளை கனியமுதே...

இந்த ஜென்மம் முழுவதும்
உன்னை நான்
ரசித்திட வேண்டும்.
தாமரை இதழ்களை
கோர்த்து செய்த
விரல் பிடித்து
இந்த பிறவி முழுவதும்
நான் நடந்திட வேண்டும்.

உன் மழலை மொழியில்
கொஞ்சம்
சிதைந்து வரும்
என் பெயரின்
எதிரொலியை
வாழ்நாள் முழுவதும்
நான் கேட்டிட வேண்டும்.

 உன் பிஞ்சு சிறுவிரல்கள்
அடித்து என் கன்னங்கள்
சிவந்திட வேண்டும்.

 உன் சின்னஞ்சிறு சிரிப்பில்
என் துன்பங்கள்
நிறம் மாறிட வேண்டும்.

உன்னுடைய இளைய முகம்
பார்த்துதான் என் தினசரிகள்
விடிந்திட வேண்டும்.

எந்தன்
தாலாட்டுப்பாடலில்
நீ கண்ணுறங்கிட வேண்டும்.
உறக்கம் வராத பொழுதுகளில்
உன் நெற்றியை
மயிலிறகால்
வருடிட வேண்டும்.


உன் முகம்
பார்த்துக்கொண்டிருக்கும்
ஏதேனும் ஒரு பொழுதில்
நான் மரித்திட வேண்டும்.



இது போல
யாருக்கும்
ஜென்மம் முடிந்ததில்லையென
கவிதையாய்
என் வாழ்வு
முடிந்திட வேண்டும்.

- பாரதி.

2011-இது மகிழ்ச்சி பூக்கள் பூக்கும் தருணம்...




பிரபலங்களுக்கு புத்தாண்டு பலன் சொல்லியிருக்கும் குறட்டை புலியின் அட்டகாசங்களையும் பாருங்களேன். 
http://sleepingtiger007.blogspot.com

சபதம் செய்யலாம் வாங்க...

2010 முடிந்து, 2011 வெற்றிகரமாக துவக்கவிருக்கும் தருணம் இது.
வழக்கமா ஒரு வருஷம் முடியும் போது சபதங்கள் செய்வது உலகவழக்கம்.

வரும் ஆண்டிற்க்கான உங்களுடைய சபதம்..., உறுதி மொழி என்னவாக இருக்கும்...,

(அந்த சபதத்தை தொடந்து கடைப்பிடிக்க, முயற்சி செய்து தான் பார்ப்போமே...ஒரு விஷயத்தை செய்யாமல் விட்டுவிட்டு வருத்தப்படுவதை விட, செய்ய ஆரம்பித்து விட்டு இயன்ற வரை தொடருவது சிறப்பு தானே)  


சென்ற வருடம் செய்த சபதங்கள்(ஒரு மீள்பார்வைக்காக) அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்
யார் மனதையும் நோகடிக்கக்கூடாது
நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும்
அதிகம் பேசக்கூடாது
உடல் நலத்தில் கவனம் கொள்ள வேண்டும்.

 
சரி உங்களுடைய சபதங்களை சொல்லுங்கள், .
நல்லவை இருந்தால் நாமும் பின்பற்றுவோமே....
,

நேற்றைய பொழுது உன்னோடு....

நானும் அவளும்
கை கோர்த்து
கடந்த தொலைவுகளை
தேசிய நெடுஞ்சாலையில்
நடந்திருந்தால்
காஷ்மீர்
கடந்திருக்கக்கூடும்...

 நானும் அவளும்
விளையாட்டாய் பேசி
அதிரடியாய் சிரித்ததில்
நட்சத்திரங்கள்
உதிர்ந்து விழுந்ததுண்டு...

 நானும் அவளும்
தொலைபேசி வழி
சண்டையிட்டுக் கொண்டதில்
சூடான இரவுகள்
ஏராளம்...

 ஆயினும்..
 திருமணம்
எங்களை
பிரித்துப்போட்டது...
அவள்
அமெரிக்காவுக்கு
வாழ்க்கைப்பட்டு போனாள்.
 நான் உள்ளூரில்.

 சபதங்கள்
செய்திருந்த போதும்
ஏனோ
சில நாட்களில்
தொடர்பு அற்றுப்போனது...

 
 அவள் நினைவு
வரும்போதெல்லாம்;

நேரில் சென்று
பார்த்து
பசியாறிக்கொள்வதுண்டு...
      அந்த
      பெண்கள் பள்ளில்
      நாங்கள் இருந்த
     வகுப்பறையின் சுவர்களை...
 ஐ.அனார்கலி.

-

டிஸ்கி:
இரு பள்ளித்தோழிகள் பற்றிய கவிதை இது.
- வேற மாதிரி எதிர்பாத்தீங்களா...ஆசை, தோசை,அப்பளம், வடை

மாத்தி யோசித்தவர்களுக்கு பரிசு கீழே உள்ள படத்தில்..

ஓவியம்:kavioosai.wordpress.com

கே.ஆர்.பி.செந்தில் - ஒரு சுவையான பயோடேட்டா.



பெயர்: ரமணா (நாங்க வச்சது). 


பட்டப்பெயர்: பதிவுலக தாதா. (பாவங்க அன்பரசன்).

அடையாளம்: "பணம்" படைத்தவர்.

நண்பர்கள்: புல்லட்டில் வரும் தொப்பை கணபதி
            முதல் மாமூல் வாங்கும் போலீஸ் வரை அனைவரும்.

எதிரிகள்: வரவேற்க்கப்படுகிறார்கள்.

பலம்: ஷாக் அடிக்கும் கவிதையின் இறுதி வரி (பதிவுலக பாலா).

பலவீனம்: தற்போது ஜனரஞ்சக பாதைக்கு மாற முயற்சித்து, தடுமாறிக்கொண்டிருப்பது.

மறக்க நினைப்பது: செட்டு மாத்திரைகளையும், அதற்கு முந்தைய கவிதையும்.

நீண்ட கால சாதனை: யதார்த்தமான எழுத்துக்கள்.

சமீபத்திய சாதனை: ஒரு விவாகரத்து.(நாட்டாம தீர்ப்ப மாத்து).

எதிர்கால திட்டம்: விவசாயம். (அப்ப கேபிளார் படத்துல ராஜா
சார்  மியூசிக்ல பாட்டு எழுத வேணாமா?)

பொதுவான கருத்து: விலங்குகளோடு திரியும் "சுதந்திர" மனிதன்.

தீம் சாங்:  புலி உறுமுது, புலி உறுமுது....

கேட்க விரும்பும் கேள்விகள்:விந்தை மனிதன் நல்லவரா, கெட்டவரா?

உங்கள் அடையாளமாக ஏன் பிரபாகரன் படத்தை பயன்படுத்தவில்லை?

ஐயோ... யாராவது தெளிய வைய்யுங்களேன்..

தளபதி, நாயகன் போன்ற படங்களின் தயாரிப்பாளர் ஜி.வி. எனப்படும் ஜி.வெங்கடேஸ்வரன் அவர்களை உங்களுக்கு மறந்திருக்காது. மணி ரத்னம் அவர்களை திரையுலகில் ஆளாக்கியவர்.மெத்த படித்தவர். அமெரிக்கா சென்று சி.ஏ. முடித்தவர். திடீரென தற்கொலை செய்துக் கொண்டார்.

இறக்கும் போது கூட அவர் பெயரில் 50 கோடி வரை சொத்துக்கள் இருந்தன. ஆனால் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துக்கொண்டார் என அப்போது ஊடகங்கள் எழுதின. ரஜினி காந்த் கூட நாங்கள் எல்லாம் இருக்கும் போது ஜி.வி. பணப்பிரச்சனையால் இறந்தது, எங்களுக்கெல்லாம் வெட்கக்கேடு எனக்கூறினார்.

எமது கேள்வி இது தான். அவர் படித்த படிப்புக்கள் ஏன் அவருக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கை ஏற்படித்தவில்லை.
(கடன் எனபது மட்டும் காரணம் காட்டக்கூடாது, ஜி.வி. கடனாளியாக ஒரு காரணமாக இருந்த மைக்கல் ஜாக்சன் இறக்கும் போது, ஜாக்சனுக்கு ஆயிரத்து இருநூறு கோடி கடன் இருந்ததாக அறிகிறோம்.)

ஜி.வி. அவர்கள் வெறும் உதாரணத்திற்கு மட்டுமே. தயவு செய்து அவரை விட்டு இந்த சூழலை ஆராயவும்.

வாழ நம்பிக்கையளிக்காத கல்வியா நாம் கற்றுக்கொண்டிருப்பது? வெறும் புத்தக புழுக்களை உருவாக்குவது மட்டுமே நமது கல்வியா?

வாழ்க்கையின் இடர்பாடுகளை எதிர்கொள்ள கற்றுத்தராத கல்வி, என்ன கல்வி?
மிக பாதுகாப்பாய், சகல வசதிகளுடன் ஆளாக்கப்படுவனும் வாழ்வை ரசிக்க முடியாது தற்கொலையாகிறான்.

தட்டு தடுமாறி, எழுந்து, மீண்டும் விழுந்து, தானே சுயமாய் கை ஊன்றி நிற்கும் ஒருவனும், வாழ்க்கையின் நிம்மதியை ரசிக்கும் நிலைக்கு வரும்போது, கிட்டதட்ட வாழ்க்கையே முடிந்து விடுகிறது.

இது குறித்து யோசிக்க, யோசிக்க நிறைய கேள்விகள் மட்டுமே எம்மிடம் மீதமிருக்கிறது,


இந்த பதிவு குழப்பமான சில கேள்விகளை எழுப்புவதோடு நின்று விட்டதால், உங்கள் பின்னூட்டங்கள் மூலம் தெளிவாக்க சில கேள்விகள் உங்களிடம்.

1.வாழ்க்கையை புரிந்துக்கொண்டு, அதன் படி வாழ்வதற்குரிய தகவமைப்புக்களை நமது கல்வி முறை உருவாக்கவில்லை என்பது உண்மையா?

2.வேகம் கற்றுத்தரும் நம் கல்வி விவேகம் கற்றுத்தருகிறதா?

3.அறம் செய்ய விரும்பு, ஆறுபது சினம், உள்ளத்தனைய உயர்வு என உள்வாங்கியவர்களின் நிலையே சிரமம் எனில் வெறும் "ரெயின் ரெயின் கோ அவே"குழந்தைகள் எப்படி வாழ்க்கையை...?

4.உங்களால் உள்ளங்கையில் தாங்கப்பட்டு, மிக பாதுகாப்பாய் வளர்க்கப்படும் ஜானி ஜானி யெஸ் பாப்பாக்களுக்கு, வாழ்க்கை என்றைக்காவது நோ சொல்லும் போது அதனை எப்படி எதிர் கொள்வார்கள்?

5. தன் வாழ்வு பற்றியே புரிதல் இல்லாதவர்களால் எப்படி அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களை புரிந்துக்கொள்ள முடியும்?

6. இந்த பதிவில் யோசித்த விதம் தவறா? தவறு எனில் எப்படி யோசித்திருக்க வேண்டும்.

இது சமக்கால கல்வி பற்றிய தொடர் பதிவின் இரண்டாம் பாகம்.


முதல் பாகம் இப்படித்தான் இருக்க வேணும்.

படங்கள்: http://vizhiyan.wordpress.com/

கலாய்ப்பு திருவிழா-4 டெரர் SMS கள்.

குறிப்பு: சில SMS கள் ஓவர் டெரராக இருப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பெறுப்பேற்க்காது,
ரொம்ப நல்லவர்கள் படிக்க வேண்டாம்.
 எந்ந்ந்திரா
ரொம்ப நாளைக்கி முன்னாடி, நம்ம ரஜினிகாந்த்; மொபைல் வைபிரட் மோடுல வச்சுட்டு,கடலில் நீச்சல் அடிச்சிட்டு இருந்தபோது, அவருடைய மொபைல்-க்கு போன் வந்துச்சு.
அதனால உண்டானதுதான் 2006ல் வந்த சுனாமி.
(ரஜினினா சும்மாவா)

முத்ததின் மணம்... இயற்கையா? செயற்கையா?


கூந்தல்...

பெண் புத்தகத்தின்
சில ஆயிரம்
வரி கவிதை....

செயற்கை மின்னலை 
தோற்றுவிக்கும்
இயற்கை மேகம்...

விழியை ஈர்க்கும் 
புதிய கருப்பு விசை...

பெண்களின் பெரும் பகுதி
நேரத்தை
சொல்லிச்சொல்லி
களவாடும்
செல்லமான திருடி...

கூந்தலுக்கு 
மலர்கள் தரும்  
மணம் 
கொஞ்ச நேரம் தான்...

அது சரி... 

எது நிரந்தரம்?

உச்சிமுகர்ந்து 
அன்னை தந்த
அன்பு முத்ததின் மணம்...

 



 - பாரதி.

ரசித்தவைகளும், யோசிக்கவைத்தவைகளும்...

இந்த வார திகில் :
 ஏனோ இந்த வாரம், வலையுலகில் எமக்கு போதாத காலம் போலும்.பின்னூட்டமிட நேரமே அமையவில்லை, முன்னதாக திங்கள் கிழமை எங்கள் வலைப்பூ தொலைந்து போனது.

"வலைப்பூ என்பது ஒரு உயிருள்ள குழந்தை" இது எங்களின் முந்தைய பதிவின் தலைப்பு.எங்கள் வலைப்பூ முன்று மாதமே ஆன குழந்தை, திருவிழாவில் தொலைத்திருந்தால் கூட பரவாயில்லை, வீட்டிற்குள்ளேயே அதை தொலைத்துவிட்டோம்.

 மீண்டும் வலைப்பூ ஒன்றை உருவாக்கி, பதிவுகளை உருவாக்கி, பின்தொடருபவர்களை சம்பாதிக்க வேண்டும், மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து, ஆரம்பிக்க வேண்டும் என நினைத்தபோதே தலைச்சுற்றியது.

 அந்த இக்கட்டான நேரத்தில் நிறைய அன்பு உள்ளங்கள் நாங்கள் இருக்கிறோம் என்று ஆதரவு காட்டினார்கள்.ஆறுதல் சொன்னார்கள்... அவர்களுக்காகவோ என்னவோ அப்படியே திரும்பக்கிடைத்தது ரோஜாப்பூந்தோட்டம்.
வடைப்போனால் பரவாயில்லை, கடையே காணவில்லை என்றால்...
அன்பு காட்டிய அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

குழந்தைகள் கடத்தல் இன்னும் தொடர்கிறதா?பிள்ளை பிடிக்கும் கும்பலிடமிருந்து, பாதுகாப்பாய் இருந்துகொள்ள மேலதிக தகவல்கள் தேவை.

 இந்த வார உலகம்:

 ராமதாஸின் மாம்பழ தாகத்திற்கும் மாஸா தான் தீர்வா?
saranram@facebook.com

 சுதந்திரமாக வந்து செல்வதற்கு இது இந்தியா இல்லை என்று ராஜபக்ஷேவுக்குக் காட்டியிருக்கிறார்கள் பிரிட்டன் தமிழர்கள்.
podiyan@twitter.com


 குற்றம் சொல்லுதல் தேசிய வியாதி ஆகிவிட்டது, குற்றம் செய்தல் தேசிய தொழிலாகி விட்டதால்.
kuttisuvaru@twitter.com


 விருதகிரி விமர்சனம்@ விகடன்...

 ஸ்காட்லாந்து யார்டில் பயிற்சி எடுக்கச் செல்லும் விஜயகாந்த், அந்த நாட்டு பிரதமரைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றி ஸ்காட்லாந்து யார்டுக்கே பயிற்சி கொடுக்கிறார். இருக்காதா பின்னே....

 இந்த வார தகவல்:

 உலகம் முழுவதும் 20 கோடி பேர் இடம் பெயர்ந்து வாழ்கின்றனர். இது உலக மொத்த மக்கள் தொகையில் மூன்று சதவீதம்.

இலங்கையில் போரால் 3 லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர். இவர்களில்30,000க்கும் மேற்பட்டவர்கள் உளவியல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.போருக்குப்பின் 98,000 பெண்கள் விதவைகளாக குடும்பத்துக்கு தலைமை வகிக்கின்றனர்.
சர்வதேச இடம் பெயர்வோர் தினம்-டிசம்பர்18.
 நன்றி: தினமலர் & தினமணி.

 இந்த வார பின்னூட்டங்கள்:

 அன்பரசன் அவர்களது கவிதைக்கான பின்னூட்டத்தில்
கே.ஆர்.பி.செந்தில் சொன்னது....காதல் கவிதைகளில் மேலோட்டமான விசயங்களை தவிர்த்து ஆழமான புரிதல்களை கவிதையாக்க முயலுங்கள்.. ஒரே ஒரு கவிதை எழுதினாலும் உலகின் தலை சிறந்த காதல் கவிதைகளில் ஒன்றாக இருக்கவேண்டும் என்கிற முனைப்புடன் எழுதுங்கள்... - அம்மாடியோவ்..

 நடிகர் விஜய் பற்றிய ஒரு பதிவில்  ம.தி. சுதா பின்னூட்டமிட்டது
 " நல்ல கதையம்சம் உள்ள படத்தில் விஜய் நடித்தால், முதலாவதாய் ரசிக்கத்தயார்"
-இன்னும் எத்தனை பேர் இதனை வழிமொழிகிறீர்கள்.

 இந்த வார வருத்தம்:

ஈசன் படம் நல்லாயில்லை என்று எழுதப்பட்டிருந்த ஒரு பதிவு.
-சசி குமாருக்கே சறுக்கலா?

 இந்த வார பெண்:

கனடா உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, திருக்குறள் சாட்சியாக பதவி ஏற்றுக்கொண்ட ஈழத் தமிழ்ப்பெண் ஜூனிதா நாதன்.

 ரத்த சரித்திரம் - Why பிளட், Same பிளட்  :


 ஸ்பெக்ட்ரம் பற்றி முழுவிபரங்கள் தெரிந்துக் கொள்ளுவதற்காக சன், கலைஞர் செய்திகளை மாறி,மாறி பார்த்ததில் சித்தம் குழம்பி, பித்த சரித்திரம் ஆனது தான் மிச்சம். தேர்தல் நெருங்க, நெருங்க இன்னும் என்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோனு பயமாயிருக்கு...
-அய்யோ பூச்சாண்டி...

மறவாமல் வாக்களிக்கவும்.

கனம் கோர்ட்டார் அவர்களே...

இங்கே ஒரு தரப்பு வாதம் வைக்கப்படுகிறது.எதிர்தரப்பாக ஆஜராகி வாதாட நீங்கள் தயாரா?

தர்மத்திற்கும்,அதர்மத்திற்குமான போரில்; வெறுமனே வேடிக்கைப் பார்ப்பவர்கள், அதர்மத்திற்கு துணையாக நிற்பவராகிறார்கள் என்பது பகவத் கீதை.
என்ன செய்வதாய் உத்தேசம்....



இப்படித்தான் இருக்க வேணும்...

சம காலக்கல்வி-1

மாணவிகளின் பார்வையில்...
எப்படி இருக்க வேண்டும் நல்ல ஆசிரியர்...



மெல்லிய புன்னகை இருக்க வேண்டும்.
சிடுசிடுவென இருக்கும் டெரர் மூஞ்சி மாணவர்களை கலவரப்படுத்தும்.

தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும்.
அடிக்கடி கோபப்பட்டு, கோபத்திற்குரிய மரியாதையை கெடுத்துவிடக்கூடாது.


பாடத்திட்டத்தோடு நின்றுவிடாமல், மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு உலக விஷயங்களையும் சொல்ல வேண்டும்.
சொல்லும் விஷயங்கள் புதியவைகளாக இருக்கவேண்டும்.

மாணவர்களின் மனநிலையை புரிந்துக்கொண்டவராக இருக்க வேண்டும்.
பாடம் நடத்தும் போதும், வீட்டுவேலைகளை கொடுக்கும்போதும்
மாணவர்களின் மன, உடல் நிலையும் கருத்தில் கொள்ள வேண்டும்.



தங்கள் வீட்டின் கோபத்தை, வகுப்பறையின் வாசப்படிக்கு கூட கொண்டுவரக்கூடாது.

தனது மாணவர்களின் எதிர்காலம் தன் கையில் உள்ளது என்பதை உணர்ந்து, தொழில் பக்தியுடன், ஈடுபாட்டுடன் வகுப்பறையில் செயல்படவேண்டும்.

ஒருவேளை ஆசிரியரிடம் ஏதேனும் கெட்டபழக்கம் இருப்பின் அதன் நிழல் கூட தன் மாணவர்களின் மீது விழாமல் பார்த்துகொள்ள வேண்டும்.

எப்போதும் திட்டக்கூடாது, மற்றவர்களுடன் ஒப்பிட்டு, இருவரையும் அவமானப்படுத்தக்கூடாது.

எப்போதும் படி,படி என ஒரேடியாக முகாரி ராகம் பாடி,
வெறுப்பேத்தக்கூடாது.


எல்லாம் தெரிந்தது போல் பேசக்கூடாது, நீங்கள் பேசுவதில் எத்தனை சதவீதம் உணமை, எத்தனை சதவீதம் டுபாக்கூர் என எங்களால் உணர முடியும்.

ரொம்ப வருடத்திற்கு பிறகு எங்காவது ரோட்டிலோ, கடைவீதியிலோ பார்க்க நேரிடும் போது, மரியாதை அதிகரித்திருக்க வேண்டும், குறைந்திருக்கக்கூடாது.
படிக்கும் போது ஆசிரியர்களை மதிக்காமல் நடந்துக்கொண்டவர்கள் கூட, எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, காலில் விழுந்து வணங்கியவர்கள் உண்டு.

(சுருக்கமாக... நல்ல ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டுமென்றால், எங்கள் பள்ளி ஆசிரியர்கள் போன்று இருக்க வேண்டும்)

இந்த பதிவுக்கு வாக்களித்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.(நீங்கள் இதனில் முரண்பாடுகளை கொண்டிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்)


சம காலக்கல்வி பற்றிய மற்ற பதிவர்களின் அலசல்கள்.
கோமாளி  , வெறும்பய , எஸ்.கே. , இம்சை அரசன் பாபு, கௌசல்யா

பரிந்துரைக்கப்பட்ட அசத்தல் கவிதை...

ஏனோ சில கவிதைகள் படித்த உடன் மனதில் சட்டென ஒட்டிக்கொள்ளும், அப்படிப்பட்ட கவிதையாக இது தோன்றுகிறது. உங்களுக்கு எப்படி என்று தெரிந்துக்கொள்ள ஆவலாய் இருக்கிறோம்.




கலைமகளின் வீணை..


விடுதிக்கென்று
விசேஷக் கட்டணம் - நுழைவாயிலில்
நுழைய நுழைவுக் கட்டணம்
கராத்தே கற்றுக்கொள்ள
கறாராகக் கட்டணம்
தனிப் பயிற்சி வகுப்புகளுக்கு
தனியே கட்டணம்
சீருடைக்கென்று
சிறப்புக்கட்டணம்
பாடப்புத்தகம் வாங்க
பல நூறு கட்டணம்
கேள்வித்தாள்களுக்குக் கட்டணம்
இதை எதிர்த்துக்
கேள்வி கேட்டாலும் கட்டணம்
விடைத்தாளுக்குக் கட்டணம்
இதுபோல் எத்தனையோ
விடை தெரியாக்கட்டணம்....
ஏதேதோ காரணம் சொல்லி
எக்கச்சக்கமாய்
கட்டணம் வாங்கிய பின்னும்
குழந்தைகள் சரியாகப்
படிக்கவில்லையே என்று கேட்டால்
பதில் சொல்கிறார்கள்
பள்ளியில்...
"வீட்டில் சொல்லிக்கொடுங்கள்"

- ஆதலையூர் சூரியகுமார்.


நன்றி: ஆனந்த விகடன்.
08.12.10

சமக்கால கல்வி பற்றி எம்மை தொடர் பதிவெழுத அழைத்த ப.செல்வக்குமார்http://koomaali.blogspot.com/2010/12/blog-post.html அவர்களுக்கு நன்றி.
இந்த கவிதைக்கூட அதற்க்கான டிரைலர் தான். மெயின் பிக்சர் தயாராகிக் கொண்டுள்ளது.

அன்புள்ள அம்மாவிற்கு,நலம் நலமறிய ஆவல்..

அன்புள்ள அம்மாவிற்கு, பொம்மி எழுதிக்கொள்வது..
நான் இங்கு நலம், எனக்கு இங்க ஹாஸ்டல்-ல எந்த பிரச்சனையும் இல்லை. நானும் பாரதி பாப்பாவும் நல்லா படிக்கிறோம்.

அங்க ஊருல நிறைய மழை பெய்ஞ்சதுனு சயின்ஸ் மிஸ் சொன்னாங்க, நம்ம  வீடு நிறையா ஒழுகுதா?. ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னா நீ சித்தி வீட்டுக்கு வேணா போயி இருந்துக்க. அவுங்க வீடு பங்களா தானே, அப்ப்டியே அப்பாவையும் தெனம் பாத்த மாதிரியும் இருக்கும். ஆனா சித்திகிட்ட நீ எதுவும் பேசாதே, சண்ட போடாதே.

இங்கியும் மழை தான். அதனால தான் நீ போன் போட்டுருந்தா கூட  கிடைக்காம போயிருக்கும். ஸ்கூல என்னை  அடுத்த மாச கடைசில  டெல்லி கூட்டிட்டு போறாங்க. அறிவியல் கண்காட்சியில நான் ஜெயிச்சதுக்கு அங்க தான் பரிசு தராங்களாம். மிஸ் எனக்கு எல்லாம் செலவும் போட்டுக்கிறேன்னு சொல்லிட்டாங்க.

நான் போட்டில ஜெயிச்சதால, நான் எவ்வளவு படிச்சாலும் அதுக்கான செலவ, எங்க ஸ்கூல் டீச்சர் எல்லாம் அவுங்க சங்கத்திலிருந்து குடுக்குறோம்-னு சொல்லிட்டாங்க. அதனால நான் காலேஜ் போயி பெரிய படிப்பெல்லாம் படிக்கப் போறேன்.

நான் நல்லா படிச்சு, உனக்கு பெரிய பங்களா வீடு வாங்கி தாரேன். பாப்பாவையும் நல்லா படிக்க வைக்கப்போறேன்.


இங்க பாப்பா திடீர் தூக்கத்துல எந்திரிச்சு கத்துறா, நான் அவளுக்கு  நீ சொன்ன மாதிரி, நெத்தியில திருநீறு பூசி தூங்க வைக்குறேன்.

பொங்கலுக்கு கண்டிப்பா எங்கள வந்து கூட்டிட்டு போ...
தீபாவளிக்கு எல்லாரும் ஊருக்கு போய்ட்டாங்க, நாங்க மட்டும் இங்க இருந்தா கஷ்ட்மாயிருக்கு.

இந்த லட்டர படிச்சுக் காட்டும் லோகு அக்கா வீட்டுல எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க.

         இப்படிக்கு, 
           பொம்மி.



இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,  வாக்குகளை அளிக்குமாறு வேண்டுகிறோம்..

கலாய்ப்பு சிறப்பிதழ்-3 கலக்கல்SMSகள்.


சூடான டெரர் செய்திகள்:
மாணவர்களுக்கு பரீட்சை வைக்கும் அறிமுகப்படுத்தியவர் ஹென்றி ஃபிசல் என கண்டறியப்பட்டதால், தமிழக மாணவர்கள் அவர் மீது கொலைவெறித் தாக்குதல் திட்டம்.
ஹென்றி ஃபிசல், வருத்தகிரி ஓடும் தியேட்டரில் மறைந்துள்ளதால் இதுவரை யார் கண்ணிலும் படாமல் பாதுகாப்பாக உள்ளார்- எமது சிறப்பு செய்தியாளர்.

கடவுள் என்னிடம், உனக்கு நூறு கோடி வேண்டுமா, உன்னைப் போன்ற உண்மை நண்பன் வேண்டுமா? என்றார். நான் நூறு கோடி தான் என்றேன். (நாம அப்புறமா பிரிச்சுக்கலாம் மச்சி)


"என்னங்க, நான் செத்ததுக்கு அப்புறம் நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கிவீங்களா?"
"ஆமானு சொன்னா நீ கோவிச்சுக்குவ, மாட்டேன் சொன்னா உங் தங்கச்சி கோவிச்சுக்குவா"

"தோல்விகளால் நீ அடிபட்டு வீழ்ந்தால் உடனே எழுந்து விடு. இல்லையென்றால் இந்த உலகம் உன்னை புதைத்து விடும்.


"டேய்,பரீச்சையில எத்தன கேள்வி கேட்டாங்க"
"அஞ்சு கேள்வி கேட்டாங்க.."
"நீ எத்தன கேள்வி எழுதின?"
"முதல் மூணு கேள்வி, கடைசி ரெண்டு கேள்வி மட்டும் விட்டுட்டேன்"

"மனுசன பொறந்த ஏதாவது சாதிக்கனுடா"
"நல்ல வேளங்க டீச்சர், நான் குழந்தையாக தான் பொறந்தேன்"

"அமெரிக்காவில மழை வந்தா, அஞ்சு நிமிஷத்துல மழைத்தண்ணி காணாம போயிடும்.
"இந்தியாவில் மழை வந்தா, அஞ்சு நிமிஷத்துல ரோடு காணாம போயிடும்."

பிராங்களின் கருத்து: வற்றிப்போனால் தான் கிணறின் அருமை புரியும்.

"எல்லா கோழியும் கொக்கரகொ-னு கூவுது ஆனா ஒரு கோழி மட்டும் ஜெய்ஹிந்த்-னு கூவுது ஏன்னு தெரியுமா?"
"அது விஜயகாந்த் வீட்டு கோழி"
இப்படிக்கு தேசபக்தியை, கோழிகளுக்கும் ஊட்டுவோர் சங்கம்.
தலைவர்:விஜயகாந்த். செயலாளர்: அர்ஜூன். பொருளாளர்: சரத்குமார்.
(தலைமை அலுவலகம்: கார்கில். முக்கிய எதிரி: வாசிம் கான்).

இந்த பதிவுக்கு வாக்களிக்காதவர்கள், அழுகை வரும் வரை, இப்போதைய அரையாண்டுத்தேர்வு எழுத வைக்கப்படுவார்கள், அதுவும் இயற்பியல் மற்றும் வேதியியல்.

திண்ணையுடைய வீடு...

நான் நேற்றைய மனிதன், 
அவர்களோ "இன்றைய வாழ்க்கை" வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள். 
"நாளை" என்பது எல்லோருக்கும் பொது.
வெறும் சுவாசம் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் யாரையும் குற்றம் சொல்ல போவதில்லை நான்....

மென்மை... மென்மை... மென்மை...

இன்றைய கவிதைகள்:
By  சௌமினா தஸ்ரின்   எட்டாம் வகுப்பு இ பிரிவு.


சூரியனைக் கண்டேன்;
என்னுள் வெளிச்சம் தோன்றியது.
சந்திரனைக் கண்டேன்;
என்னுள் குளிர்ச்சி தோன்றியது.
நட்சத்திரங்களைக் கண்டேன்;
என்னுள் மகிழ்ச்சி தோன்றியது.
பூக்களை கண்டேன்;
என்னுள் புத்துணர்வு தோன்றியது.
தோல்வியை கண்டபின் தான்
என்னுள் புது துணிவு தோன்றியது.
 

உங்க பக்கத்துல தான் நிக்குறாரு எமதர்மராசா...


மழைத்தண்ணியில 
வீடெல்லாம் மிதக்குதுன்னு
டீ.வி செய்தியில புலம்புறீங்க..
ஏரில வீடு கட்டுனா
எங்கதான் போயி நிக்கும் 
மழைத்தண்ணி?


ஊருக்குள்ள யானை வருதுன்னு
பட்டாசு வைக்குறீங்க;
ஏனுங்கனு கேட்டா
வாய் உங்களுக்கு நீளுதுங்க..
அதோட இடத்துல புகுந்துகிட்ட
உங்கள தொரத்த
ஆணைகுண்டு இல்ல இல்ல
அணுகுண்டு வெக்கலாங்களா?


கிராமத்து அரசமரத்தடி
மோசமின்னு சொன்ன நீங்க
நகரத்து ஆஸ்பத்திரியில
பஞ்சு மெத்தையில
படுத்துதான் கெடக்குறீங்க...
அத சொகமுன்னு சொக்கிப்போயி
கிடக்குறீங்க...


விவசாயம் நடந்த இடத்துல
கான்கிரீட் பூக்கள நட்டீங்க..

மரத்தை எல்லாம்
மதக்கலவரத்தில வெட்டுனீங்க..


இப்ப மொத்தமா மாட்டிகிட்டு
முழிக்குறீங்க...


வெதைச்சது வினைய தானே
அப்புறம் என்ன வெட்கம் அறுக்கறதுக்கு...


என்னவெனா செய்யுங்கப்பு..
ஆனா உங்க நகரத்து
புது வீட்ட
எதுக்காவது தோண்டிராதீங்க...
ஒரு வேள அது
பொண பொதைச்ச இடமாக இருக்கலாங்க...

                                                          - பாரதீ... 
இந்த கவிதை பிடித்திருந்தால் வாக்களித்து ஆதரவளிக்க அன்புடன் வேண்டுகிறோம்..

யாரை நானும் குற்றம் சொல்ல...

எங்கெங்கு
சென்றாலும்
"வேலை காலியில்லை"
வாசகம்
முகத்தில்
அறைகிறது.


பணம்
சேர்க்க வேண்டிய
கட்டாயமும்,
விரக்தி கலந்த
வெறுமையும்
கழுத்தை பிடிக்காமலே
நெறிக்கின்றன.


மெத்தப்படித்தவர்கள்
கூட
ஒரு சில ஆயிரங்களுக்காக
வளைந்து
  நெ
        ளி
    ந்
        து
கூழைக்கும்பிடுகளுடன்...

அதை விட
பரிதாபமாய்த்
தெரிகிறது;
இப்போது
படித்துக்கொண்டு
இருக்கும்
நாளைய பட்டதாரிகளை
நினைத்தால்...

எஸ்.பாரத்.
(விருந்தினர் பக்கம்)
இந்த கவிதை பிடித்திருந்தால் வாக்களித்து ஆதரவளிக்க அன்புடன் வேண்டுகிறோம்..

பேர் சொல்லி புராணம்....

 "எம் பேரு எனக்கு பிடிக்கவே இல்லீங்க மிஸ்"
"உம் பேரு நந்தினி தானே, நல்ல பேரு தானே, ஏன் பிடிக்கல?"
 ஒரு நாள் எங்கள் வகுப்பறையில் பேர்கள் பற்றிய பேச்சு ஓடிக்கொண்டிருந்த போது வந்து விழுந்த விஷயம் இது.

பேர் பிடிக்காதததுக்கு அவள் சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்தது.

"எல்லா சீரியலையும் வில்லியோட பேரு நந்தினினுதாங்க இருக்குது. நீங்க நல்லாயிருக்குனு சொன்ன பொன்னியின் செல்வன் கதையிலியும் வில்லி பேரு நந்தினிதாங்க".

"ஆனா அந்த கதையோட கடைசில, ஏன் அவங்க வில்லியா மாறுனாங்க அப்படிங்கிறது புரிஞ்சதால கொஞ்சம் ஆறுதலா இருந்தது"

மிஸ் ஆரம்பித்த பேர் சொல்லி புராணம் சுவாரஸியமான கட்டத்தை எட்டியிருந்ததை உணர முடிந்தது.
 "மிஸ், எனக்கு எம் பேர் ரொம்ப பிடிக்கும். 
ராஜா மணி-ங்கிற பேருக்கு பின்னால ஒரு கதை இருக்குங்க. சோழ ராஜாவின் அரண்மனை முன்பிருந்த அரசவை ஆராய்ச்சி மணியை நீதி கேட்டு அடித்த தாய் பசுவின் கதைதாங்க"

சுவாரசியமற்ற சாதாரண பதில்களின் இடைஇடையே பளீச் பதில்களும் வந்து விழுந்துக்கொண்டிருந்தன.

"எம் பேரு சண்முகப்பிரியா,
எனக்கு எம் பேரு ரொம்ப பிடிக்கும், சாமியோட பேரு. ஆனா சில புள்ளங்க சண்முகா-னு சுருக்கி கூப்பிட்டா கோவம் வரும்"

 "எம் பேரு சஃதானா பேகம். எம் பேர யாருமே சரியா சொல்ல மாட்டங்க, அப்பெல்லாம் கோவம் வரும்." (எங்கே நீஙக சொல்லுங்க சஃதானா பேகம்) 

"எம் பேரு எனக்கு புடிக்காது"
"காளியம்மாள்?"
"ஆமாங்க, மொதல எனக்கு ரம்யா-னு தான் பேரு வெச்சாங்க, ஆனா பாட்டி ஸ்கூல சேத்தும் போது, காளியம்மானு சொல்லிட்டாங்க, எனக்கு ரம்யாஸ்ரீ-ங்கிற பேரு ரொம்பபிடிக்கும்".
(இப்படித்தான் மக்களே, பாட்டிகள் பலபேர் வாழ்க்கையில விளையாடி இருக்காங்க )

நல்லது நண்பர்களே, எங்கள் வகுப்பறை கதை பேச ஆரம்பித்தால், ஆயுசு பத்தாது.

"உங்களுக்கு உங்கள் பேரு பிடிக்குமா?
"வேறு பேரு வைச்சுக்கிடறதுனா என்ன வெச்சுகுவீங்க"
"வலை உலகில் புனைப்பெயர வைத்துக்கொள்ள எப்படியெல்லாம் யோசித்தீர்கள்"
 

"கும்புடறேன் சாமி" இது ஒருவரின் பெயர்.
இதற்கு என்ன பின் புலம் இருக்கும் என யூகிக்க முடியுமா உங்களால்?

"கும்புடறேன் சாமி" என்ற பெயரில் இந்த சமூகத்தால் அவமானப்பட்ட ஒரு தகப்பனின் வெறி மிக்க கோபம் இருப்பதை உங்களால் உணர முடிகிறதா?

காலம் முழுவதும் கும்பிட்டு,கும்பிட்டு முதுகெலும்பு வளைந்து போனவன் தன் மகனுக்கு இந்த பேர் வைத்ததற்கு பின், முதலமைச்சர் என்ன, ஜனாதிபதி என்ன, எந்த சாதியைச் சேர்ந்த கொம்பனாக இருந்தாலும், கும்புடறேன் சாமி-னு தானே கூப்பிடனும்..


டிஸ்கி:1
பெரியார், இது போல "சாமி" என முடியும் பெயர்களை வைத்துக்கொள்ள அறிவுறுத்தியதாக எங்கோ படித்ததாக ஞாபகம்.
இது பற்றி முழுமையாக யாரேனும் பின்னூட்டம் இட்டால் மிக மகிழ்வோம்.
டிஸ்கி:2
இன்றைய தினத்தில் சட்டமேதை அம்பேத்கார் அவர்களை நினைவு கூறுவதில் ரோஜாப்பூந்தோட்டம் பெருமிதம் கொள்கிறது.
டிஸ்கி:3
நந்தினி, சண்முகப்பிரியா ஆகிய மாணவிகளின் பேட்டி இந்த வலைப்பதிவில் உள்ளது. வாய்ப்பிருந்தால் படிக்கவும். 
(யெச் சூஸ் மீ, இந்த பதிவுக்கு ஒட்டு, பின்னூட்டம் போட்டுட்டு அப்பறம் படிங்க).

டிஸ்கி :4
வகுப்பறையில இந்த நாயம் எல்லாம் பேசுறாங்க-னு தலைமை ஆசிரியரிடம் போட்டுக் குடுத்துறாதீங்க.