நான் இறந்து போயிருந்தேன்...என்ற தலைப்பில் எழுதவேண்டும்- சவால் கவிதை போட்டிக்கு இன்று தீதும் நன்றும் பொம்மி அனுப்பிய கவிதை....

நான்
இறப்பதற்கு முன்
ஒத்திகை
பார்ப்பதாக உத்தேசம்...

என் அன்றில் பறவையை
அணுகும்
ஒரே சந்தோசம்...
இருந்தாலும்
ஒரு சந்தேகம்...
அவள் இருந்திருந்தால்
மடிமீது சாய்ந்திருப்பேனோ?

கயிற்று கட்டிலில் அணைந்து கிடக்கிறேன்...
இலவச வேட்டி நைந்து நழுவுகிறது...
பனைமரமாய் சாய்ந்து கிடக்கிறேன்...
சுற்றி நின்ற கருவேலமரஙகளாக
சுற்றம்...
ஒப்புக்கு பாடி வைத்தார்கள்
ஒப்பாரி....

என் கடைசிமகன்
முதலாவதாகவும்...
முதல்மகன்
கடைசியுமாய்
காட்சி அளித்தார்கள்;
உயிரணுவின் சாட்சியஙகளாய்...

இந்த கட்டையை தூக்க ஆளில்லாமல்...
அறுத்து போட்ட மரக்கட்டையாய்..
ஆடிக்காற்றும் அவசரமாய்...
கடந்து போகிறது...
அம்மா.. பேர் சொல்லி
அழுத கடைசி அம்மணியும்
அவசரமில்லாமல் நடந்து போகிறது...

ராகு காலம் முடிவதற்குள்...
கிடந்த நேரம்... கிடைத்த நேரத்தில்
பத்திரங்கள் மகன்களுக்கும்...
பாத்திரங்கள் மகளுக்கும்
பத்திரப்படுத்தப்பட்டன...

யாரோ எட்டி உதைத்ததில்
அட்சய பாத்திரம் ரோஷப்பட்டு...
தம்பியோடு ரோட்டில் நிற்கிறது...

யாரும் தீண்டாத...
தினம் நான் எச்சில் பூசும்..
வெண்கல சொம்பு வெட்கமில்லாமல்
நாத்தனார் கையில்...


வழி காட்டும் தீப்பந்தம்...
அதன் பின்
பணப்பிசாசுகள் நடக்கும்
நிர்பந்தம்...
தாமதமாக ஓடிவந்த
தங்கை...
இடுகாட்டில்...இடைமறித்து...இறக்கிவைத்து
கதை சொல்லி வறுமை பேசி...
அண்ணா..அண்ணா
இன்றும் ஈரம் வைத்திருப்பவள்...
வீரம் இழந்ததாய் கதறி அழுதாள்...

குசலம் பேசி குழிப்பறித்தவர்கள்
சவக்குழி
ஆழம் இல்லையென்றே
சத்தம் போட்டார்கள்

ஒற்றை தலையணையில்
ஒளித்து வைத்த
என் களத்தியின்
தலைமேட்டு மண்...
முதல் மண்ணாய்
தவறி விழுகிறது...

சகலன்,சகாயன்
கோடி போட்டவர்கள்
அறுநாண் கயிற்றை அறுக்க ஆசைப்பட்டதில்
ஒளிந்திருந்த சில்லறை
கல்லறையில் ஓரியாடி...
காரி உமிழ்கிறது

அம்மணி இருந்திருந்தால்
மகராசன் இருந்திருப்பான்...
வெட்டியானின் பெரும் மூச்சில்
ஒத்திகையிலும்
ஒரு துளி கண்ணீர்
எட்டிப்பார்த்தது....

ஒடுங்கி கிடந்த பாத்திரத்தின் அடையாளத்தில்
குழிமேட்டின் மேலேறி
எஜமானின்
ஆவி வரும் திசை நோக்கி
படுத்தது கிடக்கிறது...
என்
பட்டினி நாய்...

தூக்கத்திலேயே
உயிர் பிரிந்தது...
ஒத்திகைக்கு
நான்
தூங்கிய போது...
- தீதும் நன்றும் பொம்மி

4 கருத்துரைகள்:

அன்புடன் மலிக்கா said...

வார்த்தைகளின் கோர்வைகள்
மிக அழகு.
வாழ்த்துக்கள்.

http://niroodai.blogspot.com.
நீரோடை

பாரத்... பாரதி... said...

நன்றி வருகைக்கும், கருத்துரைக்கும்

பாரத்... பாரதி... said...

இறந்து போவதற்கு ஓத்திகை பார்க்க,
அதன் பின் நிகழ்ந்தவைகளைப் பார்க்க,
இறந்து போவதே மேல் என
விரிகிறது கவிதை.
கிராமத்து மனிதரின் வாழ்வோட்டத்தினை
தெளிவாய் காட்டுகிறது. பொம்மி அவர்கள் கவிதையில் மண் வாசனை வீசச் செய்ததில் ஜெயித்திருக்கிறார்..


மிக ரசிக்கவைத்த வரிகள்..

//ராகு காலம் முடிவதற்குள்...
கிடந்த நேரம்... கிடைத்த நேரத்தில்
பத்திரங்கள் மகன்களுக்கும்...
பாத்திரங்கள் மகளுக்கும்
பத்திரப்படுத்தப்பட்டன... //

//ஒடுங்கி கிடந்த பாத்திரத்தின் அடையாளத்தில்
குழிமேட்டின் மேலேறி
எஜமானின்
ஆவி வரும் திசை நோக்கி
படுத்தது கிடக்கிறது...
என்
பட்டினி நாய்... ///

cheena (சீனா) said...

அன்பின் பொம்மி - அருமை அருமை கவிதை அருமை - வட்டார வாசனை - நன்கு எழுதப்பட்ட கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்